Wednesday, 15 July 2015

படைப்பாளியிடமிருந்து பதிப்பாளருக்கு

தமிழ்கலை  மனமகிழ் மன்றம் தஃபர்ரஜ் (TAFAREG) – ரியாத் - சவுதி அரேபியா என்ற  அமைப்பால் நடத்தப்பட்ட எழுதுகிறேன் ஒரு கடிதம் – முகநூல் கடிதப் போட்டிக்கு    எழுதிய கடிதம்
--------------------------------------------------------------------------------------------------------------------------
மதிப்பிற்குரிய திரு. லேனா சார் அவர்களுக்கு வணக்கம். நலமா?

உங்களின் மணிவிழா சமயத்தில் அலைபேசியில் பேசிய பின் சிங்கப்பூர் விமான நிலையத்தில் சந்தித்த போது பரஸ்பர அறிமுகத்திற்கு மட்டுமே அங்கு நேரமிருந்தது. அன்று நிகழ்ந்த உங்களுடனான கலந்துரையாடல் நிகழ்வுக்கு நேர நெருக்கடி காரணமாக வர முடியாமல் போய்விட்டது.

நீங்கள் 1999 ல் தொடங்கி வைத்த என் எழுத்து வாகனத்தை இன்று வரை நிறுத்தாமல் செலுத்திக் கொண்டிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இந்த வருடக் கடைசியில் என்னுடைய சில நூல்கள் வெளியாக இருக்கின்றன. இதைத் தங்களிடம் நேரில் சொல்லி ஆசீர்வாதம் பெற வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இம்முறை மிகக் குறைவான விடுப்பில் இந்தியா வந்திருந்ததால் சந்திக்க முடியவில்லை.

நீங்கள் சொல்லி இருந்த முப்பது நூல்கள் என்ற இலக்கை இந்த வருடம் நான் எட்டி விட்ட நிலையில் என் முதல் பதிப்பாளர் என்ற முறையில் உங்களைத் தான் நினைவு கொள்கிறேன். நீங்கள் தான் உங்களுடைய மணிமேகலைப் பிரசுரம் வழி ”ஒரு கருவின் கதறல்” என்ற என் முதல் கவிதை நூலைக் கொண்டு வந்ததோடு அதைத் தமிழகம் முழுக்க உள்ள நூலகங்களுக்கும் கொண்டு சேர்த்தீர்கள். அதன் மூலமாக எனக்கு வந்த கடிதங்களும், பாராட்டுகளும் தொடர்ந்து எழுதத் தூண்ட அடுத்தடுத்து எழுதிய மூன்று நூல்களையும் வெளியிட்டு அவைகளோடு என்னையும் தமிழகம் முழுக்கக் கொண்டு சேர்த்தீர்கள்.  அதற்கெல்லாம் நன்றி தெரிவித்து ஒரு முறை கூட உங்களுக்குக் கடிதம் எழுதவில்லை. நேரில் சந்தித்த தருணங்களில் சொல்லியிருக்கவில்லை என்ற குற்ற உணர்வோடு தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

என் நான்கு நூல்களை நீங்கள் பதிப்பித்திருந்த வரையிலும் நான் உங்களைச் சந்தித்தது இல்லை. நான்காவது நூலான ”இஸ்லாம் கற்றுத்தரும் வாழ்வியல்” வெளியாகி இருந்த சமயத்தில் அமீரகத்தில் நடைபெற்ற ஒரு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்தீர்கள். அப்போது நானும் அங்கு பணி செய்து கொண்டிருந்ததால் அந்த விழாவில் நூலை வெளியிட ரவி சார் ஆவண செய்து கொடுத்தார்.

விழா நாளன்று நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு பெருமையோடு வந்திருந்தேன். என் நூல் பற்றி அறிவித்து மேடைக்கு வருமாறு அழைத்தார்கள். அரங்கிற்கு எடுத்து வர வேண்டிய என் புத்தகப் பார்சலை விழாக்குழு நண்பர்கள் தவறுதலாக அறையிலேயே வைத்து விட்டு வந்தது அதன்பின்பு தான் தெரிய வந்தது.  நூல் வெளியீடு காண முடியாத நிலையில் நான் மிகுந்த ஏமாற்றத்தோடு மேடையை விட்டு இறங்கினேன்.

விழா முடிந்த பின் உங்களைச் சந்தித்த போது என் தோள் தொட்ட நீங்கள் ”கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது. மூன்றை முப்பதாக்குங்கள். அதற்காகத் தொடர்ந்து எழுதுங்கள்” என்று சொன்னீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் தட்டிக் கொடுத்துச் சொன்ன அந்த வரிகள் உங்களைச் சுற்றி நின்ற விழா அமைப்பாளர்கள், முக்கிய பிரமுகர்களின் பார்வையை என் மேல் விழ வைத்தது.

அதுவரையிலும் சக ஊழியனாய் மட்டுமே என் நண்பர்களால் அறியப்பட்டிருந்த நான் அதன்பின் புத்தகங்கள் எழுதுபவனாக அடையாளப்படுத்தப் பட்டேன். இலக்கியம் சார்ந்த விழாக்களுக்கு அழைக்கப்பட்டேன். அன்று உங்களின் அந்த உற்சாக வார்த்தைகள் தந்த அடையாளமும், துக்கமும், சந்தோசமும் கலந்த காக்டெயில் கலவையாய் என்னுள் ததும்பி நிற்கும் அந்தச் சந்திப்பின் சுவையும் அந்த மண்ணை விட்டு நான் வெளியாகி எட்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஈரம் காயாமலே இருக்கிறது.

”ஊக்குவிப்பவன் இருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்” என்ற வாலியின் வாக்கை நான் உங்களில் உணர்கிறேன். என் முப்பதாவது நூலோடு உங்களைச் சந்திக்கும் பேராவலோடு காத்திருக்கிறேன்.

தீராத நேசங்களுடன்
மு. கோபி சரபோஜி