Friday 24 July 2015

மெளன அழுகை - 4

சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளரும், பேச்சாளருமான அழகுநிலா அவர்கள் என் "மெளன அழுகை" கவிதைத் தொகுப்பிற்குத் தந்திருக்கும் அறிமுகம்

 

தமிழ் நிகழ்ச்சிகளில் இவரைச் சந்திப்பதுண்டு. மிகவும் அமைதியான,எளிமையான மனிதர். பதிப்பகங்கள் புத்தகம் போடச் சொல்லி இவரைக் கெஞ்சுவதாக (பொதுவாக எழுத்தாளர்கள் தான் பதிப்பகங்களை அணுகுவது வாடிக்கை) அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட இருபத்தி மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்று அறிந்த போது ஆச்சரியமோ ஆச்சரியம்! தனது கவிதைப் புத்தகத்தை என்னிடம் தந்து விட்டு அவர் நகர்ந்த போதே கட்டாயம் அந்த நூலைப் படிக்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டேன். அவரது கவிதைத் தொகுப்பின் பெயர்மெளன அழுகை”. எளிமையான சொற்களால் யதார்த்த வாழ்வைக் கவிதைகளில் புனைந்துள்ளார். இந்த தொகுப்பில் சில கவிதைகள் பெண்மொழியைப் பேசுவது எனக்கு அதிக வியப்பை அளித்தது.

பாசாங்குச் சொற்கள்
பரிசுப் பொருட்கள்
பக்குவ விளக்கங்கள் 
பரம்பரைச் சாயங்கள் என 
எந்நாளும் உனக்கொரு கத்தி கிடைத்துவிடுகிறது
என் சிறகுகளின் வளர்ச்சியை வெட்டி எறிய

என்ற கவிதையில் சிறகுகள் வெட்டி எறியப்பட்ட பெண்மையின் வலியை உணரமுடிகிறது. பல நேரங்களில் கத்தி என்று தெரியாமலும் சில நேரங்களில் தெரிந்தும் சிறகை நீட்டுவதுதான் இன்றும் பெண்மையின் தலைவிதியாக உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அடுக்களை ஒழித்து ஓய்வுக்காய் மற்றவர்களை 
அவரவர் அறையனுப்பி ஓய்ந்து கிடந்த தனிமையில்
தேங்கி நின்ற உடல் நசிவை 
சற்றே உலர்த்திப் போட உன் தோள் சாய்கையில் 
விருப்பமறியாமலே உன் தாக செதில்களை 
என் தேக மேடுகளில் உதிர்த்து எழுந்தாய்
களைப்பால் நசிந்த உடலோடு 
உன் நுழைப்பால் சிதைந்த மனமும் 
மௌனமாய் வெடித்தழுகிறது 
வடிந்தொழுகும் உன் வியர்வையில்

என்னை மிகவும் கவர்ந்த கவிதை இது. பெண் மனதின் உணர்வுகளைஏக்கங்களை, சொல்லமுடியாத சோகங்களை நுட்பமாக அவதானித்து இவர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.

கூந்தல் கருமேகம்

நெற்றி நிலா 
புருவம் பிறை

விழி மீன்
நாசி கிளி

வாய் கோவைப்பழம்
பல் முத்து

கழுத்து சங்கு
தனம் கவிழ்ந்த மலை
இடை கொடி

தொடை வாழை
இப்படியான உருவகங்களால்

ஊனமாகிப்போனது
உன்னையும்

தன்னைப் போன்றதொரு

சக மனுசியாய் மதிக்காத

என் ஆண்மைத்தனம்

என்ற கவிதையில் பெண்ணை உடல் சார்ந்த போகப்பொருளாக பார்க்கும் ஆண்மை உண்மையில் ஆண்மையில்லை அது ஊனமான ஒன்று என்று எழுதியிருப்பதன் மூலம் இவரது முற்போக்குச் சிந்தனை புலப்படுகிறது.

ஒரு ஆணின் பார்வையில் பெண் மனதைப் பற்றி எழுதுவது உண்மையில் மிகச் சவாலான பணி என்று தோன்றுகிறது. ஆனால் அந்த சவாலில் கவிஞர் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறார். நிறைய கவிதைகளைப் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் எல்லாவற்றையும் நானே சொல்லிவிட்டால் நீங்கள் அவரது புத்தகத்தை படிக்கமாட்டீர்கள் அல்லவா. அதனால் இந்த தொகுப்பில் எனக்கு மிக மிக பிடித்த கவிதையோடு முடித்துக்கொள்கிறேன். கட்டாயம் இந்த கவிதை தொகுப்பை படித்துப் பாருங்கள். உங்களுக்கும் கட்டாயம் பிடிக்கும்.

பாடம் :

"உன்னிப்பாய் உற்றுநோக்கியபடி
அமர்ந்திருந்தாள் இலக்கியா
என்னவென்று கேட்டேன் 
உஷ் என உதடு கூட்டி 
நேர்க்கோட்டில் ஊர்ந்து செல்லும்
எறும்புகளை காட்டினாள்
சலனமின்றிக் கடந்து சென்றேன்
அவ்விடத்தை விட்டு"

------------------------------------------------------------------------------------------------------------------------------

பி.கு : முன் குறிப்பாய் இடம் பெற்றிருக்கும் சில வரிகள் பற்றி முகநூலில் நான் எழுதிய குறிப்பு - யாரோ நம்மளைப் பற்றி சிநேகிதியிடம் ஓவராகவே சொல்லி விட்டார்கள் போல....முதல் பத்தியைப் படித்து விட்டு என் பதிப்பாளர்கள் என் மீது கோபக் கனல் வீசாமல் இருக்கனும்டா சாமி.