Tuesday 14 July 2015

தங்கமீனும் ஞாயிறுப் பொழுதும்

சிங்கப்பூரில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புகளில் தங்கமீன் அமைப்பும் ஒன்று. இணைய இதழ், பதிப்பகம், வாசகர் வட்டம் எனப் பல தளங்களில் தன்னுடைய முன்னெடுப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கும் தங்கமீன் வாசகர் வட்டத்தின் முப்பத்தொன்பதாவது கூட்டம் தோபயோ நூலக அரங்கில் வழமை  போல் தொடங்கியது. மாதத்தின் இரண்டாவது வாரம் தன் நிகழ்வை உறுதி செய்யும் கூட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்னரே தரப்படும் கருப்பொருளுக்கான கதை, கவிதைகளுக்குப் பரிசுத் தொகையும் தருகிறார்கள்.

நேற்றைய கூட்டத்தில் பார்வையாளனாகவும், பங்கேற்பாளனாகவும்  கலந்து கொண்டேன். இதற்கு முன்னரும் சில கூட்டங்களில் பங்கெடுத்திருக்கிறேன். இம்முறை மாதம் ஒரு வாசகர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தும் முறை அறிமுகம் கண்டது. பிரேமா மகாலிங்கம் முதல் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். இந்த மாதச் சிறப்பு விருந்தினராக உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி பிரபலம் ஜெயசுதா வந்திருந்தார். இளையோரை தமிழ் புத்தக வாசிப்பை நோக்கி நகர்த்தி வருவதில் உள்ள சிக்கல்கள் குறித்துப் பேசியவர் அதை ஒரு கலந்துரையாடலாகவும் வாசகர்களிடம் மடை மாற்றி விட்டார்.

நம்மூரில் ஆங்கில, கணக்கு ஆசிரியருக்குப்  பயந்து படிப்பை பாதியிலேயே விட்டு விடும் குழந்தைகள் போல இங்குள்ள பள்ளிக் குழந்தைகள் தமிழ் ஆசிரியர்களின் சாடல்களால் பள்ளி வகுப்பைத் தாண்டியதும் தமிழையும் புறந்தள்ளி விடுகிறார்கள் என்ற செய்தியை அறிய முடிந்தது. மதிப்பெண்களுக்காக மட்டுமே தமிழைப் படிக்க வைக்க வேண்டிய காட்டாயச் சூழல் இருக்கிறது என்ற ஆதங்கம் வாசகர்களாக வந்திருந்த பெற்றோர்களின் பேச்சில் தெறித்து விழுந்தது. இங்குள்ள பள்ளிகளின் கல்வி முறை பற்றி முழுதும் அறியாத நிலையில் பாடப்புத்தகங்களுக்கு வெளியே வாசிப்பு இன்னும் இனிமையானது, சுவராசியமானது என்பதை உணர்த்தினால் மட்டுமே வாசிப்பை இளையர்களிடம் கொண்டு செலுத்த முடியும் என்ற என் அபிப்ராயத்தை சொல்லாமல் சமர்த்தாக இருந்து கொண்டேன்.

ஒரு கவிதையை வாசித்தும், அந்த மாதக் கருப்பொருளுக்கேற்ற ஒரு குறும்படத்தை காணொளியாக பார்த்தும் அவைகளின் மீதான புரிதல்களை பகிர்ந்து கொள்ளும் அங்கத்தின் மூலம் ஒரு கவிதையை, குறும்படத்தை எப்படியெல்லாம் புரிந்து கொள்ளலாம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது

எல்லா இலக்கிய அமைப்புகளிலும் தனக்கான இடத்தை இன்றுவரை தக்க வைத்திருக்கும் படித்ததில் பிடித்தது அங்கம் எனக்கு எப்பொழுதுமே நெருக்கமான ஒன்று. பலரும் எழுதிய ஒரு தொகுப்பை வாசிக்கக் கேட்கும் அது மாதிரியான அனுபவ அலாதிக்கு நிகர் வேறில்லை.  நேற்று என் பங்காக கவிதையில் அதிகம் புழங்கப்படாத பக்கங்களாக இருக்கும் குழந்தைகள் உலகம் சார்ந்தும், அவர்களின் உரையாடலை எப்படி கவிதையாக்குவது என்பது பற்றியும் கவிஞர். இரா.பூபாலன், வலங்கைமான் நூர்தீன் ஆகியோரின் கவிதைகளோடு என் கவிதை ஒன்றையும் உதாரணம் காட்டிப் பேசினேன். மனனம் செய்து வந்த செய்யுளை ஒப்பிக்கச் சொல்லும் சமயங்களில்  வகுப்பறையில் வியர்க்காமலே முன் வரிசைக்கு வந்து விடும் நடுக்கம் நேற்று வரை போகாமல் எனக்குள்ளேயே இருப்பதைக் கண்டு கொள்ள அது நல்ல வாய்ப்பாக இருந்தது. சொல்ல வந்ததைக் கேட்டவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி விட்டேன் என்று தான் எனக்குத் தோன்றியது. கேட்டவர்களுக்கே வெளிச்சம்.

கவிஞர், கதையாசிரியர், தொகுப்பாளர், விமர்சகர் என பல தளங்களிலும் சிங்கப்பூரில் தன் இறுப்பை நிலை நிறுத்தி வரும் எம்.கே. குமாரின் ( “நாடு கட்டிய நாயகன்நூலின் பல பக்க அசலுக்குச் சொந்தக்காரர்) விரிவான விமர்சனத்தில் தன் படைப்புக்கே பரிசு நிச்சயம் என தருமி போல் நம்பி வந்த பலரின் நம்பிக்கை நசிந்து போனது. தனது கிடுக்கிப்பிடி விமர்சனத்திற்கு பின் அவர் தேர்ந்தெடுத்த படைப்பில் தலை தப்பிய கதையாய் என் படைப்பு ஒன்றும் கரை சேர்ந்தது. செவிக்கு உணவு கிடைத்த சந்தோசத்தை வயித்துக்கும் பாய வைத்தது பரிசுத்தொகை!

நூலகத்தை இரவு ஒன்பது மணிக்கு நாங்கள் அடைக்கும் போது நீங்களும் நடையைக் கட்டி விட வேண்டும் என்ற ஒரே ஒரு கண்டிசனோடு இது மாதிரியான கூட்டங்களுக்கு இங்கிருக்கும் நூலக வாரியம் குளிரூட்டப்பட்ட விசாலமான அறை, குறும் படங்களை திரையிட்டுக் காட்டுவதற்கான ஒலி, ஒளி கருவிகளோடு குடிக்க டீ, குளிர் பானங்கள், கொறிக்க பிஸ்கட், சாக்லெட்டுகள் ஆகியவைகளையும் தருகிறார்கள். நிகழ்ச்சிக்கு வருபவர்களிடம் அமைப்பாளர்கள் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை, விசாலமான அறையில் உட்காரப் போதுமான இருக்கைகள் இருந்தாலும் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதில் விருப்பமில்லாத என் போன்றவர்கள் நின்று கொண்டே நிகழ்ச்சியில் பங்கெடுக்கலாம். போரடிப்பதற்குரிய எந்த முகாந்திரங்களுக்கும் வாய்ப்பில்லை என்பதால் இடைவேளை எல்லாம் கிடையாது. விரும்பும் பொழுதெல்லாம் ஒரு டீயையோ, காபியையோ குடித்துக் கொள்ளலாம். ”வம்பா சாப்பிட்டுட்டு தெம்பா கலந்துக்கங்கஎனச் சொல்லாமல் சொல்வதைப் போல் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே இவைகள் அறையில் தயாராக இருக்கும்.

 
 

இத்தனை முன்னேற்பாடுகள், வசதிகள் இருந்த போதும் என் மொழி செம்மொழி என உதட்டளவில் சொல்வதற்கு உச்சி குளிர்ந்து கொண்டிருப்பவர்களிடம் வாசிப்பின் வழி அதை அனுபவிக்கவும் முடியும் என்பதைச் சொல்ல வாரக் கடைசி நாளில் இப்படியான கூட்டங்களுக்கு வரவைப்பதும், அப்படி வருபவர்களை தொடர்ந்து தக்க வைப்பதும் சாதாரண விசயமில்லை. கட்டாயம் கலந்து கொள்வோம் என்ற மனநிலை உடைய வாசகர்கள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அப்படியான வாசகர்கள் இருப்பதாலயே வாசகர் வட்ட நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடிவதாய் அமைப்பாளர் பாலு மணிமாறன் தன் பேச்சில் குறிப்பிட்டார்

செவிக்கும், வயிறுக்குமான சமாச்சாரங்களை இந்த ஞாயிற்றுக் கிழமை பொழுது தந்த மனநிறைவோடு, விடுதிக்குச் செல்லும் கடைசிப் பேருந்து போய் விடுமே என்ற பதற்றமும் தொற்றிக் கொள்ள நேரில் அறிந்த முகம், முகநூலில் அறிந்த முகம் என எல்லா முகங்களிடமும் சொல்லியும், சொல்லாமலும் சுனாமியின் பினாமி வேகத்தில் வீடு வந்து சேரும் போது மணி பதினொன்றாகி இருந்தது. விடுதிக்குள் நுழைந்த போது எதிரில் வந்த நண்பர் கேட்டார் நாளைக்கு வேலை தானே? அதன் பொருள் காலையில் வேலைக்கு கிளம்ப கண் விழிக்கும் போது தான் தெரிந்தது