Wednesday, 22 July 2015

கடவுளிடம் வரம் வாங்கும் முன்

மன அழுத்தம் நிறைந்து நிற்கும் பொழுதெல்லாம் அதிலிருந்து விடுபட வாசிப்பின் பக்கம் சாய்வது வழக்கம். நேற்று அப்படியான மனநிலையில் நகைச்சுவை அதகளம் செய்யும் நடைக்குச் சொந்தக்காரரான க.சீ.சிவகுமாரின் கதைகளை இணையத்தில் வாசித்துக் கொண்டிருந்த போது அண்ணன் பாஸ்கர் சக்தி நினைவுக்கு வந்தார். அவரை இதற்கு முன் சந்தித்து கை குலுக்கிய தருணத்தின் காயாத ஈரம் கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

தமிழ்மொழி விழா 2015 ன் ஒரு அங்கமாக ஏப்ரல் மாதம் தங்கமீன் வாசகர் வட்டம் நடத்திய கதை – திரைக்கதை – வசனம் பயிலரங்கை நடத்துவதற்காக பாஸ்கர் சக்தி வந்திருந்தார். இப்பயிலரங்கிற்கு முந்தைய அறிமுக நிகழ்வாக அங்மோகியோ நூலகத்தில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியோடு ஒரு கோப்பைத் தேநீர் என்ற கலந்துரையாடல் நிகழ்வு நடை பெற்றது.
வகுப்பறைகளுக்கு காலதாமதமாக வரும் தொட்டில் பழக்கம் இன்னும் விடாமலே இருப்பதாலோ என்னவோ எப்படித் திட்டமிட்டுக் கிளம்பினாலும் நிகழ்வுகளுக்கு சரியான நேரத்திற்கு என்னால் செல்ல முடிந்ததில்லை.. இம்முறையாவது சரியான நேரத்திற்குச் சென்று விட வேண்டும் என முடிவு செய்து  சில முன்னேற்பாடுகளோடு கிளம்பி வந்து சேர்ந்தேன். அற்புதம் எல்லா நேரமும் நிகழாது என்பதைப் போலவே இருந்தது.

நிகழ்ச்சிக்கான அறையில் வழக்கத்திற்கு மாறாக பெரும்பாலான இருக்கைகள் வாசகர்களால் நிரம்பி இருந்தது. நிரப்பப்படாமல் இருந்த இருக்கைகள் ஆங்காங்கே நின்ற படி உரையாடிக் கொண்டிருந்த வாசகர்களுக்காகவும், வரப் போகும் வாசகர்களுக்காகவும் காத்துக் கொண்டிருந்தது. அந்திசாயும், பொழுதில் வயிற்றிற்கு இதமாய் மெதுவடை, கேசரி, டீ, காப்பி தயாராய் இருந்தது.

அரங்கத்திற்குள் நுழைந்த பாஸ்கர் சக்தி தன்னைச் சூழ்ந்த வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் தன் புன்னகையைப் பரிசாய் கொடுத்து  அவர்களைத் தனக்கு அந்நியோன்யமாக்கி கொண்டிருந்தார். அடடா நாமும் இந்தப் புன்னகையை வாங்காமல் விட்டு விடக்கூடாதே என்ற பதை பதைப்பில் வாயில் வைக்கப் போன மெதுவடையை தட்டிலேயே வைத்து விட்டு என் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டேன். வித்தியாசமான பெயராக இருக்கே? என்றவரிடம் பெயர்க்காரணம் ஏதுமில்லைண்ணே. வீட்டுல வச்சது என்றதும் தனக்கே உரிய அக்மார்க் புன்னகையை எனக்கும் கொடுத்தார்.

அவருடைய கதையை வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் விமர்சித்தனர். இளையோரை வாசிப்பின் பக்கம் ஈர்க்கும் இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஆதரவு தருவது அவசியம் என்றே நினைக்கிறேன். எந்த பந்தாவோ, பகட்டோ இல்லாமல் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தவர் அதன்பின் உரையாடுவதற்கு வசதியாக அங்கிருந்த தளமேடையின் விளிம்பில் அமர்ந்து கொண்டார். பத்திரிக்கையில் தொடங்கி சினிமா வரையிலான தன் எழுத்துப் பயணத்தில் நிகழ்ந்த பல சுவராசியமான நிகழ்வுகளை தனக்கே உரிய எள்ளல் மொழியில் பகிர்ந்து கொண்டார். அதன் பின் வாசகர்களின் கேள்வி பதில் நிகழ்வு தொடங்கியது, ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கு விரிவான செறிவான பதில்களைக் கொடுத்தார். பெண் வாசகியர்களின் கேள்விகளில் பல அவர் வசனம் எழுதிய மெட்டி ஒலி உள்ளிட்ட நாடகங்களைச் சார்ந்தே இருந்தது. சீரியலின் தாக்கம் சிங்கப்பூரையும் விட்டு வைக்கவில்லை.

சில கேள்விகள் பதில்களை விட நீளமானதாக இருந்தது. வாசகர்கள் சிரமம் பராமல் கேள்விகளைத் தெளிவாகத் தயாரித்துக் கொண்டு வருவது உத்தமம். அப்படிச் செய்யும் போது சாதாரண கலந்துரையாடலைக் கூட சிறப்பான  நேர்காணலாக மாற்றி விட முடியும்.
பாஸ்கர் சக்தியோடு நான்

நீங்கள் பணிபுரியும் திரைப்பட, தொலைக்காட்சி ஊடகங்கள் தான் தமிழ் மொழி சிதைவிற்கு காரணம் என்ற குற்றச்சாட்டை நிகழ்விற்கு வந்திருந்த சில மொழிப் பற்றாளர்கள் அவர் முன் விடாப்பிடியாக நீட்டிய படியே இருக்க குளிரூட்டப்பட்ட அறை மெல்ல சூடாக ஆரம்பித்தது.  தமிழகத்தில் இருந்து வந்த ஒரு வெற்றிப்பட இயக்குனரும், பிரபல மூத்த எழுத்தாளர் ஒருவரும் இது போன்றதொரு கலந்துரையாடலில் நடந்து கொண்ட விதம் பற்றிப் படித்தது மின்னல் வெட்டாய் எனக்குள் வந்து போனது. அப்படி ஏதும் நடக்காமல் போனது அந்த சொரிமுத்து ஐயனாரின் அருள்!

மனதுக்கு இலக்கிய எழுத்து, சோத்துக்கு சினிமா எழுத்து என இயங்கும் நிலையிலும் தன்னாலான சில முயற்சிகளை செய்து கொண்டிருப்பதையும், மொழியின் வளர்ச்சிக்கு தமிழறிந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய விசயங்கள் குறித்தும் சொல்லி அந்த நெருடலை இயல்பான சூழலுக்குக் கொண்டு வந்தார். தமிழகத்திற்கு முதல்வரை திரைப்படத்துறை மட்டுமே தர வேண்டும் என நினைப்பதைப் போல தமிழை வளர்க்க திரைப்பட, தொலக்காட்சி ஊடகங்கள் மட்டுமே தீர்வு என நினைக்கும் தட்டையான மனநிலை மாற வேண்டும். பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும்?

நெடுநேரம் இருக்கையில் உட்கார்ந்திருப்பது அசெளகரியமாய் இருக்கக் கடைசி இருக்கைக்குப் பின்னால் சென்று வசதியாக நின்று கொண்டேன். படைப்பிலக்கியம், கதைக்கான மொழி, தன் கதைக்கான முடிவுகளை அவர் தீர்மானம் செய்யும் முறை என அவரிடம் கேட்பதற்கு என்னிடம் மூன்று கேள்விகள் இருந்தது. அதற்கு பாஸ்கர் சக்தியிடமிருந்து கிடைத்த பதில்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்பலாம். திகட்டத் திகட்ட புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் நாளைய நிகழ்வில் சந்திப்போம் என அவரவர் கூடு திரும்பினோம்.

பயிலரங்கிற்கு முன்பதிவு அவசியம் என்றிருந்த போதும் எப்படியும் ஒரு இருக்கையை இரவல் வாங்கி விடலாம் என நினைத்திருந்தேன். அதில் கலந்து கொள்வதற்காக கேட்டிருந்த அனுமதியை அப்ரூவல் செய்தது நான் வேலை செய்யும் நிறுவனம். கிடைத்த அப்ரூவலுக்கு ஆப்பு வைத்தது எனக்கு வேலை தரும் நிறுவனம். கடவுள் தந்த வரத்தைப் பூசாரி பறித்துக் கொண்டால் பக்தனால் என்ன செய்ய முடியும்? அடுத்த முறையாவது கடவுளிடமிருந்து வரம் வாங்கும் முன் பூசாரியைக் "கவனி"த்து விட வேண்டும் நினைத்துக் கொண்டேன்.  

நன்றி : தங்கமீன் வாசகர் வட்டம்