Friday, 17 July 2015

தந்தைக்கு...

தமிழ்கலை  மனமகிழ் மன்றம் தஃபர்ரஜ் (TAFAREG) – ரியாத் - சவுதி அரேபியா என்ற   அமைப்பால் நடத்தப்பட்ட எழுதுகிறேன் ஒரு கடிதம் – முகநூல் கடிதப் போட்டிக்கு      எழுதிய கடிதம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள அப்பாவுக்கு நான் நலமாக உள்ளேன். நீங்கள் நலமா? அம்மா மற்றும் வீட்டில் உள்ளவர்கள் நலன்களைக் கேட்டதாகச் சொல்லுங்கள். கடந்த வாரம் வீட்டிற்கு போன் செய்து எல்லோரிடமும் பேசினேன். குட்டிப்பையனோடு நீங்கள் வெளியில் போயிருப்பதாய் அம்மா சொன்னார்கள். நிற்க - 

உங்களுக்கு என் அட்வான்ஸ் “தந்தையர் தின வாழ்த்துகள்” அப்பா. சென்ற தந்தையர் தினத்தன்று நீங்கள் எனக்கு எழுதி அனுப்பி இருந்த குறிப்பொன்றை முக நூலில் பதிந்திருந்தேன். அதில் நீங்கள் எழுதி இருந்த ”அன்புள்ள அப்பா” என்ற வார்த்தையைப் பற்றி நண்பர்கள் பலரும் சிலாகித்து இருந்ததைப் பார்த்த போது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ”அன்பு” என்பது அற்புதமான விசயமாகி விட்டதோ? என்று நினைக்கத் தோன்றியது. எனக்குத் தந்தையாய், வகுப்பாசிரியராய்  ( நீங்கள்  பரிசளித்த உள்ளங்கை அகலத் திருக்குறள் புத்தகத்தை இன்னும் வைத்திருக்கிறேன்) மட்டுமின்றி என் பதிப்பாளராய், விமர்சகராய், என் இரசனைக்கேற்ற நூல்களையும், தகவல்களையும் சேகரித்துத் தருபவராய் இருப்பதையும் தாண்டிச்  சக நண்பனாகவும் என்னோடு நீங்கள் பயணிப்பது என்னையறிந்தவர்களுக்கு ஆச்சர்யம். எனக்கோ கொடுப்பினை.

நான் ஒன்பதாவது படிக்கும் போது காண்டம் (நிரோத்) விளம்பரம் பிரபலமாக இருந்தது. அதைப் பற்றி உங்களிடம் நான் கேட்ட போது கோபப்படாமல் நீங்கள் சொன்ன விதம் எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது.  அதேபோல என் திருமணத்திற்காகப் பெண் பார்க்கும் சமயத்தில் ”பெண் என்னை விட உயரமாக இருக்கக் கூடாது. வயது இருபத்தைந்திற்கு மேல் இருக்க வேண்டும். கட்டாயம் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். என் நிறம் இருந்தால் போதும்” என வெளிநாட்டிலிருந்த நான் உங்களுக்கு நீண்ட கடிதம் எழுதினேன். இதை நண்பர்களிடம் சொன்ன போது அப்பாவிடம் இப்படிச் சொல்ல உனக்கு சங்கோஜமாக இல்லையா? என்று கேட்டார்கள். உங்களுக்கு அப்படி எழுதுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. என் விருப்பத்திற்கேற்ற படியே பெண் பார்த்து திருமணமும் செய்து வைத்தீர்கள். என் பிள்ளைகளைப் பற்றி நான் உறவினர்களிடம் அக்கறைப் படும் போதெல்லாம் ”உனக்கெதுக்குடா இந்த அக்கறை? அப்பா பக்காவா வளர்த்துக் கொடுத்துருவாரு” என அவர்கள் சொல்லும் போது எனக்கு பயமில்லாத நம்பிக்கை வந்து விடுகிறது.

நான் வேலைக்காக வெளிநாடு சென்ற பின்பும் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஏணியாய், தோணியாய் இருந்திருக்கிறீர்கள். இருந்தும் வருகிறீர்கள். அவர்கள் என்னிடம் பேசும் சமயமெல்லாம் நினைவு கூறுவார்கள். உங்களை நினைக்கும் போதெல்லாம், உங்களைப் பற்றி பேசும் போதெல்லாம் ஒரு தந்தையர் தினத்தன்று நான் எழுதிய கவிதையின் -
நீ – யாய்
நான் – ஆக
முடியாவிட்டாலும்
உன்னையே உள்வாங்கி
வெளிவரவே முனைகிறேன் - என்ற கடைசி வரி தவறாமல்  நினைவுக்கு வந்து விடும். இந்த வரிகளைப் போலவே என் வாழ்வையும் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இப்போதைய என் விருப்பம் அப்பா.

தவிர, கிழக்குப் பதிப்பகம் மூலம் தயாரான ”காமராஜர்” தொகுப்பு வெளியாகி விட்டது. வீட்டிற்குப் பிரதி அனுப்புவார்கள். வாசித்துச் சொல்லுங்கள். அக்ரிமெண்ட் பாரத்தில் எனக்காக நீங்கள் கையொப்பம் இட்டு பதிப்பகத்திற்கு அனுப்பி விடுங்கள். பதிப்பாளரிடம் நான் பேசி விட்டேன்.

மாறா அன்புடன் மகன் -
மு. கோபி சரபோஜி