Thursday 9 July 2015

மிஸ் என்னும் சிநேகிதி

 

பள்ளியில் இருந்து திரும்பிய மகள் கால அட்டவணை (TIME TABLE) செய்ய கட்டம் போட்டுத் தாரீங்களா? என்ற படி ஒரு A4 சைஸ் பேப்பரை நீட்டினாள். இவ்வளவு பெரிசா எதுக்கு? என்றதும் இது எனக்கு இல்லை. கிளாஸ் ரூம்ல ஒட்டுறதுக்கு. எங்க மிஸ்க்கு ஹெல்ப் பன்னுறதுக்காக நான் தான் வாங்கிட்டு வந்தேன் என்றாள். எனக்கே உரிய புரிதலற்ற கோபத்தில் உங்க மிஸ் செய்ற வேலையை அவங்க பார்க்காம உனக்கிட்ட கொடுத்து விட்டுட்டாங்களா? ஸ்கூலுக்கு வந்தா உங்க மிஸ்கிட்ட கேட்கிறேன் என்றேன்

சட்டென அமைதியானவள் டாடி புரிஞ்சுக்கோங்க. எங்க மிஸ்க்கு இரண்டரை வயசுல ஒரு குட்டிப் பையன் இருக்கானாம். எப்பவும் அழுதுக்கிட்டே இருப்பானாம். இராத்திரி அவனை தூங்க வைக்கவே ரொம்ப நேரமாகிடுமாம். அதுக்கப்புறம் தான் மிஸ்ஸே தூங்கிட்டு காலையில வேலைக்கு வருவாங்களாம். அந்தக் குட்டிப் பையனை வச்சுக்கிட்டு இதைச் செய்ய முடியுமா? அவங்க பாவமில்லையா? அதான் நான் செய்துக்கிட்டு வருகிறேன்னு மிஸ்கிட்ட கேட்டு வாங்கிட்டு வந்தேன். கட்டம் எனக்கு கோணலா வருமேன்னு தான் உங்களிடம் கேட்டேன். நீங்க ஹெல்ப் பண்ணலைன்னா பரவாயில்ல. நான் அம்மாக்கிட்ட கட்டம் போட்டு வாங்கிக்கிறேன் என்றாள். அவளின் அந்த வார்த்தைக்குப் பின் என்ன ஒரு மடத்தனமான கோபத்தைக் காட்டி விட்டோம் என நினைப்பு வர கட்டம் போட்டுக் கேட்டவளுக்கு முழு கால அட்டவணையையும் தயார் செய்து கொடுத்து விட்டு உங்க மிஸ்ஸப் பத்தி எப்படி உனக்கு இதெல்லாம் தெரியும்? என்றேன். லஞ்ச் பிரேக்குல எங்க மிஸ், நான், என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடும் போது நாங்க எங்களைப் பத்தி சொல்வோம். மிஸ் அவங்களைப் பத்தி சொல்வாங்க. மிஸ்ஸோட நாங்கெல்லாம் ஃபிரண்ட்ஸ் மாதிரி தான் இருப்போம் என்றாள். கேட்கவே ஆச்சர்யமாக இருந்தது.