Friday, 19 February 2016

பதக்கங்களால் ஜொலித்த சிங்கப்பூர்!

தென் கிழக்காசிய விளையாட்டுகள் (SOUTH EAST ASIAN GAMES) என்பதன் ஆங்கில முதல் எழுத்தைச் சேர்த்துச் சுருக்கமாக “சீ விளையாட்டு” (SEA GAMES) என்றழைக்கப்படும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை இதற்கு முன் சிங்கப்பூர் மூன்று தடவை (1973, 1983, 1993) ஏற்று நடத்தியிருந்த போதும் இம்முறை அது சிங்கப்பூரின்  பொன் விழாவைக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாகவும் திகழ்ந்தது. இருபத்தெட்டாவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை ஜீன் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி பதினாறாம் தேதி வரை நடத்தி கோலாகலப் படுத்திய சிங்கப்பூர் தன் மணி மகுடத்தில் மற்றுமொரு வைரத்தை சூட்டிக் கொண்டது.

தென்கிழக்குப்பிராயந்தில் இருக்கும் நாடுகளுக்கிடையேயான உறவுகளை ஊக்குவிக்கும் வகையில் தாய்லாந்து, பர்மா(மியான்மார்), மலாயா(மலேசியா), லாவோஸ், தென் வியட்நாம், கம்போடியா, (சிங்கப்பூர் பின்னர் இணைந்தது) ஆகிய நாடுகளை நிறுவன உறுப்பினர்களாக கொண்டு SEAP ( SOUTHEAST ASIAN PENINSULA GAMES) என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் முதல் விளையாட்டுப் போட்டிகள் தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்கில் தொடங்கியது. அதன்பின்  புரூணை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் அதில் இணைக்கப்பட்டதையடுத்து SEAP கூட்டமைப்பு 1977 ம் ஆண்டு தென் கிழக்காசிய விளையாட்டுகள் கூட்டமைப்பு ( SOUTH EAST ASIAN GAMES FEDERATION - SEAGF) என்று பெயர் மாற்றம் கண்டது. 2003 ஆம் ஆண்டு கிழக்கு தைமூர் கடைசியாக இவ்வமைப்பில் இணைந்தது.

2011 ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாழாம்பேங் (PALEM BANG) நகரில் நடந்த 26 வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியின் போது 2015 ல் போட்டியை ஏற்று நடத்தும் நாடாக சிங்கப்பூர் அறிவிக்கப்பட்டது. முறையான திட்டமிடுதல் மூலம் மட்டுமே தன்னை உலக அரங்கில் முன்னிறுத்திக் கொண்டுள்ள சிங்கப்பூர் அறிவிப்பு வந்த மறு வருடமே அதற்கான திட்டங்களையும் வகுக்கத் தொடங்கியது.

விளையாட்டு மற்றும் இளையர் துறையின் மூத்த அமைச்சர் லாரன்ஸ் வாங்க் (LAWRENCE WONG), பிரதம அலுவலக அமைச்சர் சான்சூன் சிங் (CHANCHUN SING), கல்வி மற்றும் சட்ட அமைச்சர் இந்திராணி ராஜா (INDRANEE RAJA) உள்ளிட்டவர்களையும், தொழில், வர்த்தகம், விளையாட்டு முதலிய பல்வேறு துறைகளைச் சார்ந்த நிர்வாகிகளையும், இயக்குனர்களையும் உள்ளடக்கிய  குழு அதற்கான பணிகளைத் துவக்கியது.

தைரியம், ஆர்வம், நட்பு ஆகியவைகளைக் குறிக்கும் வகையில் இதய வடிவ முகத்துடன் கூடிய நிலா (சிங்கம்) இருபத்தெட்டாவது தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டியின் அதிகாரப் பூர்வச் சின்னமாக பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. போட்டிகளில் சமூகத்தையும் ஈடுபடுத்தும் நோக்கில் போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னத்தைப் பொதுமக்களே வடிவமைப்பதற்காக “மேக் எ நிலா” (MAKE A NILA) என்ற பெயரில் ஒரு திட்டத்தை துவக்கி வைத்த அரசாங்கம் அதில் தேர்வு செய்யப்படும் பொம்மை அதனை வடிவமைப்புச் செய்தவரின் கைகளாலயே போட்டியில் பதக்கம் பெறும் வீரருக்குத் தரப்படும் என்றும் அறிவித்ததையடுத்து  மக்கள் ஆர்வமாக இதில் பங்கு கொண்டனர். பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டவர்களிடமிருந்து  வடிவமைப்புச் செய்து பெறப்பட்ட நான்காயிரத்து எழுநூற்றி முப்பத்தொன்பது பொம்மைகள் விளையாட்டு மைய நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. தவிர, போட்டியை நினைவு கூறும் வகையில் “வோங் வுங் கோங்” என்ற வரைபட வடிவமைப்பாளரால் வடிவமைக்கப் பட்ட போட்டியின் சின்னம் பொறித்த தபால் தலையும் வெளியிடப்பட்டது. வெற்றியாளர்களுக்கு வழங்குவதற்காக 183 கிராம் எடை, 80 மி.மீ விட்டத்தில் “ஜாய்ஸ் டான்” என்பவரால் வடிவமைக்கப்பட்ட பதக்கங்கள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

போட்டியைச் சிறப்பாக நடத்தி முடிக்க பதினைந்தாயிரம் தொண்டூழியர்களின் உதவி தேவைப்படலாம் என அளவிடப்பட்டு அதற்கான ஆள் சேர்ப்பு பணி 2013 ல் தொடங்கப்பட்டது. 2014 பிப்ரவரி வரை ஐந்தாயிரம் என்ற அளவில் மட்டுமே இருந்த தொண்டூழியர்களின் பதிவு எண்ணிக்கை 2015 பிப்ரவரியில் பதினேழாயிரத்தைத் தொட்டது. தொண்டூழியர்களின் அக்குழுவிற்கு “நிலாக்குழு” (TEAM NILA) என்ற பெயர் சூட்டப்பட்டது.

இவ்விளையாட்டு நிகழ்வுகளில் பெருமளவில் மக்களையும் பங்கு கொள்ளச் செய்வதற்காக நுழைவுச்சீட்டுகளுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்யப் பட்டதோடு சிங் போஸ்ட் (SING POST) எனப்படும் தபால் அலுவலகங்கள், விறபனை நிலையங்கள் மூலமும், இணையம் வழியும் விற்பனை செய்யப்பட்டன. போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு அவர்கள் சென்று வர ஏதுவாக நகரின் பல பகுதிகளிலிருந்தும் கூடுதல் பேருந்துச் சேவைகள் இயக்கப்பட்டன.

இதற்கு முன் 2007 மற்றும் 2013 ம் ஆண்டில் போட்டிகளை ஏற்று நடத்த வந்த வாய்ப்புகளை செலவுகளைக் காரணம் காட்டி மறுத்த சிங்கப்பூர் இம்முறை செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பழமையும், புதுமையும் கலந்த தன்மையில் ஏற்கனவே இருக்கின்ற அரங்குகளோடு 2010 ம் ஆண்டு நடைபெற்ற  இளையர் ஒலிம்பிற்காகாகப் பயன்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானங்களையும்,  புதியதாக  மேம்படுத்திக் கட்டப்பட்ட அரங்குகளையும் பயன்படுத்தி விளையாட்டுகளை நடத்தவும், போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்காக வழக்கமாக உருவாக்கப்படும் விளையாட்டுக் கிராமத்தை அமைக்காமல்  ”நகரமே கிராமம்” ( VILLAGE IN THE CITY) என்பதைக் குறிக்கும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கின்ற இருபது ஓட்டல்களில் அவர்களைத் தங்க வைக்கவும் திட்டமிடப்பட்டது. போட்டியில் பங்கு கொள்ளும் வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் ஓய்வெடுக்க வசதியாகவும், ஒரே இடத்தில் சந்தித்துப் பேச ஏதுவாகவும் உணவு, உடல் பிடிப்பு நாற்காலி, வீடியோ விளையாட்டு ஆகிய அம்சங்களோடு கூடிய அறநூறு சதுர மீட்டர் பரப்பளவில் ”நிலா சுவீட்ஸ்’ (NILA SWEETS) என்ற பெயரினாலான தங்குமிடம்  தேசிய விளையாட்டரங்கிலேயே உருவாக்கப்பட்டது.

போட்டிகளில் பங்கு கொள்ளும் போட்டியாளர்களுக்கான தண்ணீர், சாப்பாட்டுப் பொருட்கள் மற்றும் போட்டிகளுக்குத் தேவையான தளவாடச் சாமான்கள், தரைவிரிப்புகள் ஆகியவைகளைச் சப்ளை செய்யவதற்கான ஒரு காற்பந்து திடலின் மூன்றில் ஒரு பகுதி என்ற அளவில் அமைந்த மிகப்பெரிய வைப்பு அறை ”சிங்சாங் லாஜிஸ்டிக்ஸ்” என்ற பெயரில் அமைக்கப்பட்டது.

ஐம்பத்தைந்தாயிரம் நபர்கள் அமர்ந்து பார்க்கும் வசதியோடும், பன்முகத்தன்மையோடும் முந்நூற்றி பத்து மீட்டர் அளவில் திறந்து மூடும் வகையில் அமைந்த மேற்கூரையோடு நிர்மாணிக்கப்பட்டு உலக சாதனை அரங்கமாகத் தன்னைப் பதிவு செய்து கொண்டிருக்கும் காலாங் தேசிய விளையாட்டரங்கில் (KALLANG NATIONAL STADIUM) ஜீன் மாதம் ஐந்தாம் தேதி நாட்டின் முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் சூழ பாரம்பரிய நடனம் மற்றும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பல்துறைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் என கோலாகலமாகத் துவங்கிய விழாவில் போட்டிகள் துவங்குவதற்கான முறைப்படியான அறிவிப்பை அதிபர் டோனி டான் கெங் யாம் (TONY TANKENG YAM) வெளியிட்டார்.

சிங்கப்பூர் பொன் விழாவை ஒட்டித் தினமும் ஐம்பது கிலோ மீட்டர் என ஐம்பது நாட்களில் இரண்டாயிரத்து ஐநூறு கிலோ மீட்டர் தொலைவை எட்டும் நோக்கில்  ஏப்ரல் மாதம் பதினைந்தாம் தேதியிலிருந்து தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு முதல் நாள் வரையிலான ஐம்பது நாட்களில் ஓடிக் கடக்கத் திட்டமிட்டிருந்த நெடுந்தொலைவு ஓட்டக்காரர்களான அறுபத்தொரு வயது ”லிம் ஙீ ஹீட்” மற்றும் ”யோங் யுன் செங்” ஆகிய இருவரின் முயற்சியையும் பாராட்டும் வகையில் போட்டிக்கான தீபச் சுடரை ஏற்றுவதற்கு அவ்விருவரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் ஏற்றி வைத்த தீபச்சுடரை சிங்கப்பூரின் லயன்ஸ்12 காற்பந்தாட்டக் குழுவின் பயிற்சியாளர் ஃபாண்டி அகமது, அவரது மகன் இர்பான் ஃபாண்டி ஆகிய இருவரும் அரங்கில் அமைக்கப்பட்டிருந்த கொப்பரையில் ஏற்றி வைத்து போட்டிகளை அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைத்தனர். பிரமாண்டமாய் நிகழ்ந்த தொடக்க விழாக் காட்சிகளை மட்டுமின்றி போட்டிகளையும் மக்கள் தொடர்ந்து கண்டு களிக்க ஏதுவாக இருபத்தொரு சமூக மன்றங்களில் நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

”சிங்கப்பூர் என்றாலே தொழில் நுட்பம். தொழில் நுட்பம் என்றாலே சிங்கப்பூர்” என்றாகி விட்ட நிலையில் இவ்விளையாட்டுப் போட்டிகளில் மின்னிழக்கத் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களைச் சிங்கப்பூர் கையாண்டது. 1989 ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் தொழில் நுட்பத்தை “ஏட்டொஸ்”  நிறுவனத்துடன் இணைந்து “சொங்சொக்” என்ற சிங்கப்பூரின் தென் கிழக்காசிய விளையாட்டு ஏற்பாட்டுக் குழு பயன்படுத்தியது. முடிவுகளைத் தெரிந்து கொள்ளும் முறை, இணையம், கைத்தொலைபேசி வழியாக போட்டிகளை நேரடியாக காணும் முறை உள்ளிட்ட புதிய அம்சங்களின் வழி காகிதங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப் பட்டது.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 483 போட்டியாளர்கள் (1993 ம் ஆண்டு) பங்கேற்றது தான் அதுவரை சிங்கப்பூருக்கு அதிக பட்ச அளவாக இருந்தது. இம்முறை அதைத் தாண்டி 748 போட்டியாளர்கள் பங்கு கொண்டனர். இப்போட்டிகளில் சிங்கப்பூர் குழு 25 விளையாட்டுகளில் சாதனையையும், 29 புதிய தேசிய சாதனைகளையும், 74 தனிப்பட்ட சாதனைகளையும் நிகழ்த்தியது. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு தங்கம் என்ற அளவில் முன்னேறிய சிங்கப்பூருக்குத் தான் பங்கேற்ற ஒன்பது போட்டிகளிலும் முந்தைய சாதனைகளை முறியடித்து ஜோசப் ஸ்கூலிங் ஒன்பது தங்கப்பதக்கங்களை வென்று கொடுத்தார். அதேபோல, திடல் தடப் போட்டியில் நாற்பத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இருநூறு மீட்டர் ஓட்டத்தில் சாந்தி பெரேரா தங்கம் வென்றார். இவ்வாண்டு அறிமுகம் கண்ட புதிய போட்டிகளிலும் சிங்கப்பூர் தங்கத்தை வாரிக் குவித்தது.

தொடக்க விழாவிற்கு இணையாக நடைபெற்ற இறுதி நாள் விழாவில் போட்டிகளை அதிபர் அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்ததோடு அடுத்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்தும் நாடான மலேசியாவிடம் அதன் கொடி ஒப்படைக்கப்பட்டது.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தத் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 2013 ம் ஆண்டு முப்பத்தி நான்கு தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஆறாம் இடத்தில் இருந்த சிங்கப்பூர் இம்முறை நாட்டின் பொன் விழா ஆண்டு என்பதால், ஐம்பது தங்கப்பதக்கங்களை வெல்லும் குறிக்கோளோடு களமிறங்கியது. போட்டியாளர்களின் கடுமையான பயிற்சியுடன் பிரதமர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் வீரர்களை நேரடியாகச் சந்தித்துக் கொடுத்து வந்த உற்சாகமும் சேர்ந்து கொள்ள நிர்ணயித்த குறிக்கோளையும் தாண்டி என்பத்தி நான்கு தங்கப்பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இரண்டாமிடத்திற்கு வந்த சிங்கப்பூர் பதக்கங்களால் ஜொலித்தது.  

பி.கு : கடந்த ஆண்டு (2015) சிங்கப்பூரில் நடைபெற்ற ”சீ விளையாட்டுகள்” குறித்து ”தி சிராங்கூன் டைம்ஸ்” என்ற அச்சு இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. சில காரணங்களால் இக்கட்டுரை இதழில்  இடம்பெறவில்லை