Monday 15 February 2016

அவர் சாகமாட்டார்

வைத்திலிங்கம் என்ற மனிதரின் இறப்பிற்குப் பின்னே மூழ்கிக் கிடக்கும் ஒரு உண்மையை அந்த இறப்பு வீட்டில் நடைபெறும் சம்பவ விவரிப்புகளால் மெல்லிய நகைச்சுவை இழையோடச் சொல்லும் கதைஅவர் சாகமாட்டார்”. இக்கதையின் ஆசிரியர் சே.வெ.சண்முகம். அவரின் சிறுகதைத் தொகுப்பில் இக்கதை இடம் பெற்றுள்ளது.

அவர் சாகமாட்டார்என்றும், ”திருவாளர் வைத்திலிங்கம் காலமாகி விட்டார்என்றும் அடுத்தடுத்துத் துவங்கும் வரிகளின் முரண் யுக்தி கதைக்குள் நம்மைத் தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. கதையின் முக்கியக் கதாபாத்திரத்தை முதலிலே சாகடித்து விடும் துணிச்சலான முயற்சியை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே ஆசிரியர் செய்து பார்த்திருப்பது வியப்பைத் தருகிறது.

இறப்பு வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் துல்லியமான காட்சிப் படுத்தல்கள் கதையின் பலம்.

துக்கத்திற்கு வருபவர்கள் அங்கு நடத்தும் சம்பாசணைகளை இறந்தவனின் மீதான மதிப்பீடுகளாக முன் நிறுத்திய ஆசிரியர் அவன் இறந்ததற்கான காரணத்தைச் சொல்லி முடிக்கும் போது அந்த மதிப்பீடுகள் நம்மில் இருந்து சரிய ஆரம்பித்து முடிவின் காரணப் புள்ளியில் நின்று விடுகிறது.

தன்னை யோக்கியவான்களாக காட்டிக் கொள்வதில் மனிதர்கள் எத்தனை பொய்யர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளஏன் இப்படி அநியாயமாகப் பொய் பேசுகிறீர்கள்? என்று வைத்திலிங்கம் கேட்க வரமாட்டார் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்என்ற ஆசிரியரின் சில வரிகள் போதும்!  

ஏமாற்று, நம்பிக்கைத் துரோகம் என்ற போதனைக் கதைக்கான கருவை மிகச் சிறப்பான கட்டமைவு, காட்சியமைவுகளுடன் சுவையான சிறுகதையாக மாற்றிக் காட்டி இருக்கும் ஆசிரியர் கதையின் முடிவை போதனைக் கதைக்குரிய வகையிலேயே அமைத்திருப்பதும்-

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குஎன்பதைப் போல கெட்டிக்காரத் தனத்தால் தான் செய்த நம்பிக்கைத் துரோகத்தை மறைத்து விட்ட வைத்திலிங்கத்தின் மைத்துனனின் வருகைக்குப் பின்  திசை திரும்பும் கதை மீண்டும் வர்ணனையின் வழியாகவே நகர்வதும்  கதையின் பலவீனம்

அவர் சாகமாட்டார்நிகழ்வுகளின் வழியே மனிதர்களைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி!

 ஆசிரியர்  : செ.வே. சண்முகம்

    கதை     : அவர் சாகமாட்டார்

வெளியீடுசிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்