Tuesday 2 February 2016

ஆறஞ்சு

  

மண் வாசம் தேடும் வலசைப் பறவையாய் தன் சிறகை விரித்திருக்கும் அழகுநிலாவின் முதல் சிறுகதைத் தொகுப்புஆறஞ்சு”. 14 கதைகள் கொண்ட இத் தொகுப்பில் உள்ள கதைகளில் சிலவற்றை முன்னரே வாசித்திருந்த போதும் தொகுப்பாக வாசிக்கையில் அது இன்னும் எனக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

சிங்கப்பூரின் இலக்கிய அமைப்புகள் நடத்தும் போட்டிகளில் படைப்புகள் சிங்கப்பூர் சூழலைக் களமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை அறிவிக்கப்படாத விதியாகவே இருக்கும். அந்த விதிகளை அனாயாசமாக சிங்கப்பூரில் இருக்கும் சில இடங்களின் பெயர்களையும், பேச்சு மொழியையும் இட்டு நிரப்பி படைப்பாளிகள் கடந்து விடுவதைக் கவனித்திருக்கிறேன். அப்படியான இட்டு நிரப்புதலின்றி அமைந்த கதைகளின் தொகுப்பாக இதைத் தயக்கமின்றி அடையாளம் காட்டலாம். அயலக இலக்கியம் என்பது சம்பந்தப்பட்ட மண்ணின் அக வாழ்வியலை புறமிருந்து வாசிக்கின்ற வாசகனுக்குச்  சொல்ல வேண்டும். அதை இந்தத் தொகுப்பு நிறைவாகவே செய்திருக்கிறது.

வாசித்து அழுத்துப் போன விசயங்களை மீண்டும் வேறு வேறான வாக்கிய அமைப்பிலும், நடையிலும் வாசிப்பதான துயரம் போன்றது வேறு எதுவுமில்லை, அப்படியான துயரங்களைத் தந்திடாத வகையில் சிங்கப்பூர் படைப்பாளிகள் அதிகம் வெளிக் காட்டியிராத பக்கங்களைக் கதைக் களமாக்கி அதன் மூலமாகப் பொருளாதாரம் தேடி புலம் பெயர்ந்து வந்து வீதிகள் தோறும் அழைந்து திரியும் தொழிலாளர்களின் வாழ்வியலைபச்சை பெல்ட்”, ”சுடோக்கு”, ”தோன்றாத் துணைஆகிய கதைகளின் வழியாக சிங்கப்பூரின் சமகாலத்தை அடையாளப்படுத்தும் தொகுப்புகளில் ஒன்றாக தன் படைப்பைத்  தந்தமைக்காக ஆசிரியருக்குப் பாராட்டுக்கள். அதே போல சிங்கப்பூர் படைப்புகளில் அதிகம் கவனப்படுத்தப்படும் பணிப்பெண்களின் வாழ்வியல்களைஉறவு மயக்கம்”, “புது மலர்கள்ஆகிய கதைகளின் மூலமாக வாசிக்கத் தருகிறார்.

முடிவினைத் தன் போக்கில் இறுதி செய்யும் கதைகள், இறுதி செய்யப்பட்ட முடிவை நோக்கி நகரும் கதைகள் எனக் கதைகளை இரு பிரிவாகப் பிரிக்கலாம், இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் இரண்டாம் வகையைச் சார்ந்தவைகளாக இருந்த போதும் சிறப்பான சம்பவக் கோர்வைகளும், எதார்த்தங்களின் கட்டமைவுகளும் வாசிப்பை மட்டுப்படுத்தாத வகையில் நகர்த்திப் போகின்றன.

அன்றும் வழக்கம் போல ஏர் இந்தியா விமானம் தாமதமாகத் தான் தரை இறங்கியதுஎன்பன போன்ற சமகாலச் செய்திகளோடு அங்கதமும், நகைச்சுவையுமாக கதைகளை வாசிக்கத் தந்ததிருப்பது தொகுப்பின் பலம்,

உணர்ச்சிப் பூர்வ கதைகளாக விரியும்பச்சை பெல்ட்”, “புது மலர்கள்”, தோன்றாத்துணை”, அண்டை வீட்டாரின் நட்புணர்வு மற்றும் தேவைகளைப் பேசும்பங்பங்”, கோபத்தின் உச்சத்தில் வெளிப்பட்ட உக்கிரம் காலம் கடந்து வடியும் விதத்தைப் படம் பிடித்துக் காட்டும்ஒற்றைக் கண்”, மீட்டுருவாக்கம் செய்யப்பட்டஅலையும் முதல் சுடர்ஆகிய கதைகளைக் கடந்து இத் தொகுப்பைப் பேச வைக்கக் கூடிய கதைகளாக உறவுகளின் உள்ளாடல்களைப் பேசும்அவள் அவன் அவர்கள்”, “பெயர்த்தி”, மனித நம்பிக்கை வழியாக அறிவியல் சார்ந்த செய்தியையும், மனித இயல்பையும் சுட்டும்வேர்க்கொடி”, ”சிதறல்கள்”, குழந்தைகளிம் மன இயல்பும், இன்றைய கல்வியியல் முறையும் சார்ந்தஆறஞ்சு”, மூன்று தலைமுறைகளை நேர் கோட்டில் நிறுத்தி அவர்களுக்கிடையேயான புரிதல்களைப் முன் வைத்து விரியும்பொழுதின் தனிமைமுதலியவைகளை அடையாளம் காட்டலாம்.

சிவபூசையில் கரடி, குதிரைக் கொம்பாக, ஆட்டு மந்தை போல போன்ற அதரப் பழசான தேய் வழக்கு உவமைகள், எதார்த்த உரையாடலின் தன்மையை நீட்சியடைய வைக்கும் வகையில் ஆங்காங்கே கையாளப்பட்டிருக்கும் செயற்கையான மொழி நடை, இப்படித்தான் முடியப் போகிறது என சில கதாபாத்திரங்களின் உரையாடல்களின் வழி கண்டு கொள்ள முடிகின்ற வசனங்கள், கதையின் ஆரம்பத்தில் இருக்கும் வேகம் கடைசி வரையிலும்  இல்லாமை ஆகிய பொதுவான சில குறைபாடுகளைத் தவிர்த்து விட்டால் இந்தத் தொகுப்பை அவரின் பிறிதொரு தொகுப்பின் பிரகாசித்தலுக்கான ஆரம்பச் சுடர் எனலாம்.

படைப்பாளி வாசகனுக்குத் தரும் தகவல், சம்பவம், விசயம் எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். இப்படிப் பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற வரையறை எல்லாம் அவசியமில்லை. ஆனால் அப்படித் தருகின்ற ஒன்று அந்த வாசகனுக்குள், ஓட்டை உடைத்துக் கொண்டு வரும் குஞ்சின் விழிகளில் விரியும் வானின் பரப்பாய் கொஞ்சமேனும் மாற்றத்தை விசாலத்தை தர வேண்டும். அப்படித் தர வைக்கும் தொகுப்புஆறஞ்சு”.!

நன்றி : திண்ணை.காம்