Sunday 7 February 2016

பங்பங்

அண்டை வீட்டாருடன் இருக்க வேண்டிய நட்பையும், மனித உறவுகளின் தேவை மற்றும் அவசியத்தையும் செல்லப் பிராணியான ஒரு நாயின் வழியாகப் பேசும்  கதைபங்பங்”. காலம் காலமாகப் போதிக்கப்பட்டும், நிகழ்த்திக் காட்டப்பட்டும் வந்த வாழ்வியல் முறையை சிங்கப்பூரின் வாழ்வியலோடு மீட்டுருவாக்கம் செய்யும் இக்கதைஆறஞ்சுசிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இக்கதையின் ஆசிரியர் அழகுநிலா

சாதாரண கதைக் கருவைக் கட்டமைத்திருக்கும் முறையால் நம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயமாக்கி  இருப்பது பாராட்டுக்குரியது. அண்டை வீட்டில் வசிப்பவர்களுடனான சிநேகத்திற்கும், பழக்க வழக்கத்திற்கும் ஒற்றை வார்த்தைகளும், வெற்றுப் புன்னகைகளும் மட்டும் போதும் என நினைக்கும் வாழ்வியலின் எதார்த்தத்தைசிங்கப்பூரில் இருந்து கொண்டு இதற்கெல்லாம் கவலைப்பட முடியுமா?” என்ற கேள்வியின் ஊடாக கவனப்படுத்துகிறார். படைப்பிலக்கியத்திற்கு மிகவும் அவசியமான கவனப்படுத்தலை இந்தக்கதை நிறைவாகவே செய்திருக்கிறது.

கதைக்குள் நேரடியான விசயங்களை அங்கதமாகவும், உரையாடல்களை எதார்த்த நகைச்சுவைகளோடுஅன்றும் வழக்கம் போல ஏர் இந்தியா விமானம் தாமதமாகத் தான் தரை இறங்கியதுஎன்பன போன்ற சமகாலச் செய்திகளோடும் இழையோட வைத்திருப்பது வாசிப்பைச் சுவராசியமாக்குகிறது,

தான் சொல்ல நினைத்த விசயத்திற்காக எடுத்துக் கொண்ட சம்பவம், அதைக் காட்சிப் படுத்திய விதம், கதைமாந்தர்களின் எதார்த்தமான உரையாடல்கள் கதைக்குப் பலமாக இருந்த போதும் தேய்வழக்கு உவமை, இடை இடையே கையாளப்பட்டிருக்கும் செயற்கையான மொழி நடை உரையாடல்கள், அனுமானித்து விட முடிகின்ற காட்சிக் கோர்வைகள் முதலிய பலவீனங்கள் கதையின் எழுச்சியை மட்டுப்படுத்தி விடுகின்றன

வாசகன் தான் வாசித்துச் செல்லும் கதைப் போக்கில் இருந்து விலகி எஞ்சிய பகுதிகளைத் தானாகவே கட்டமைக்காமலிருக்க வேண்டுமானால் கதையின் ஆரம்பத்தில் இருக்கும் வேகம் கடைசி வரையிலும்  இருக்க வேண்டும். பங்பங்கின் வேகக் குறைபாடு அத்தகைய வாசக கட்டமைவிற்கான அதிக பட்ச சாத்தியங்களைத் தருகிறது.

படைப்பாளி வாசகனுக்குத் தரும் தகவல், சம்பவம், விசயம் எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால் அப்படி தருகின்ற ஒன்று அந்த வாசகனுக்குள், ஓட்டை உடைத்துக் கொண்டு வரும் குஞ்சின் விழிகளில் விரியும் வானின் பரப்பாய் கொஞ்சமேனும் மாற்றத்தை விசாலத்தை தர வேண்டும். அப்படித் தர வைக்கும் கதைபங்பங்”!

ஆசிரியர்  : அழகு நிலா

    கதை     : பங்பங்

 வெளியீடுஅழகு நிலா