Thursday, 26 May 2016

ஒப்பனை முகங்கள்

சவுக்குக் கழிகளால் கட்டப்பட்டிருந்த அந்தச் சார மேடையின் மீது நின்று கொண்டு ஒவ்வொரு செங்கலாய் கொத்தனார் வரிசைப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் இராமலிங்கம். அறுபது வயதைக் கடந்து விட்ட அவருக்கு அது ஒன்றும் அற்புதமான, வியக்கத்தக்க காட்சியல்ல. ஆனால், செங்கல்களாலும், சிமெண்ட் கலவையாலும் எழுந்து வரும் அந்தக் கட்டத்தின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் அவருக்குள் ஒரு ஆத்ம திருப்தியை அளித்துக் கொண்டே இருந்தது. மாலையில் வேலை முடிந்து பணியாளர்கள் கிளம்பிய பின் இரவு நேரக் காவலுக்காக கட்டிடத்திற்கு வரும் பெரியவரை எதிர்பார்த்து இருக்கையில் சாய்ந்த படி உட்கார்ந்திருந்தார்

ஒரு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியராய் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த இராமலிங்கத்திற்கு மனைவியின் ஊரான இந்தக் கிராமமும், இங்கிருக்கும் உறவினர்களும் கற்றுக் கொடுத்த விசயங்கள் அவரின் வாழ்நாளில் மறக்க முடியாதவைகள்.

தங்களுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளும் ஆண்பிள்ளைகள் என்பதாலோ என்னவோ சொத்துகள் வாங்குவதிலும், நகைகள், பாத்திரங்கள் சேர்ப்பதிலும் அவரும், அவர் மனைவியும் அக்கறை காட்டாததைப் போலவே தங்களுக்கென சொந்த வீடு கட்டிக் கொள்வதிலும் ஆர்வம் கொள்ளவில்லை. ஆனால், ஒரு துயரமான நிகழ்வின் தொடர்ச்சி தனக்கென ஒரு சொந்த வீடு இல்லாததை அவர் உணரும் படிச் செய்து விட்டது.

தன் சட்டையைத் தானே கழற்றி எறிந்து புதுப்பித்துக் கொள்ளும் சர்ப்பம் போல வருடங்களில் தன்னைப் புதுப்பித்துக் கொண்ட காலத்தோடு ஒட்டி வளர்ந்திருந்த பிள்ளைகளில் மூத்தவன் டிப்ளமோ முடித்து விட்டு வேலைத் தேடலில் இருந்தான். படிப்பும் அதன் மூலம் கிடைக்கும் வேலையும் பிள்ளைகளைக் காப்பற்றி விடும் என்பது இராமலிங்கத்தின் சித்தாந்தம்.

பள்ளிக்கூட வேலை சம்பந்தமாக பக்கத்து ஊருக்குக் கிளம்பிச் சென்று விட்டு மறுநாள் காலை வீட்டிற்கு வந்தவர் தன் வீட்டைச் சுற்றித் தெருவில் குடியிருப்பவர்கள் எல்லாம் நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் நடக்கக் கூடாத ஏதோ ஒன்று நடந்து விட்டதோ? என்று நினைத்தார். இத்தனை வருடங்களில் விசும்பிக் கூட பார்த்திராத தன் மனைவி பெருங்குரலெடுத்து அழும் சப்தமும் அவரின் காதுகளை நிரப்பியது. வழிப்பறித் திருடர்கள் பிரச்சனை தீவிரமாக இருந்த சமயம் என்பதால் கழுத்தில் போட்டிருந்த நகை எதையும் பறி கொடுத்து விட்டாளோ? என்று சந்தேகப்பட்டவர் பெரிதாகப் பதறவில்லை. அதற்காக ஏன் இப்படித் தெருவைக் கூட்டி வைத்து அழுது கொண்டிருக்கிறாள்? என்று மட்டுமே நினைத்தார். ஒரு மின்னல் வெட்டாய் வெட்டி மறைந்த எண்ணத்தோடு வாசலில் நின்ற கூட்டத்தை விலக்கிக் கொண்டு நுழைய முயன்றவரை வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த அவரின் நண்பர் உள்ளே போக விடாமல் தடுத்து ”பதற வேண்டாம்” என்று  சொன்னதில் இருந்த பதற்றம் நினைத்ததற்கு மாறாய் ஏதோ நடந்திருக்கிறது என்று நினைக்கச் செய்தது.

போர்வையில் போர்த்திய படி மாடியில் இருந்து சிலர் எதையோ தூக்கி வருவதைக் கண்டதும் அவருக்கு விசயம் பிடிபடத் தொடங்கியது.

”அவனுக்கு என்ன ஆச்சு?” எனக் கேட்டுக் கொண்டே முன்னோக்கி வந்தவரைக் கண்டதும் ”நம்மள விட்டுட்டு போயிட்டாங்க” என்று தலையில் அடித்துக் கொண்ட மனைவியைப் பக்கத்தில் இருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினர்.

”நேற்று அவனோடு பேசிக் கொண்டிருந்து விட்டுத் தானே சென்றேன். அதற்குள் என்னவாயிற்று? அதுவும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்சனை? அவ்வளவு கோழை இல்லையே அவன்!” என வார்த்தைகளை வெளியிடாமல் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு அருகில் சென்று மகனைப் பார்க்க இயலாதவராய் அங்கேயே சரிந்து அமர்ந்தார்.

பொத்திப் பொத்தி வளர்த்த பிள்ளையை பிணவறைக்குள் அனுப்பி விட்டு இறப்பிற்கான காரணமறியா காரணத்தைத் தனக்குள்ளேயே நினைத்து, நினைத்து எதுவும் பிடிபடாமல் வெறுமையோடு அங்கிருந்த வேப்பமரத்தின் கீழ் அமர்ந்திருந்தவரிடம், ”தம்பி….எல்லாம் முடிஞ்சிருச்சு. இனி வீட்டிற்கு எடுத்துப் போக வேண்டாம். நேரே காட்டுக்குக் கொண்டு போகலாம்” என உறவினர் ஒருவர் கூற பாடையில் போகும் மகனின் பின்னால் ஒரு நடைப் பிணமாய் சென்று நெருப்புக்குத் தின்னக் கொடுத்து விட்டு வீடு திரும்பியவர் இரண்டு தினங்களாகத் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார்.

உறவுகளைப் பிடித்திருந்த துக்கம் மெல்ல அகல அவரவர் பழைய வாழ்க்கைக்குக் கிளம்ப ஆயத்தமாயினர். இறப்பின் துயரை முழுமையாக உணர முடியாத வயதில் துக்கம் விசாரிக்க வருபவர்களின் முகத்தையும், அம்மாவின் அழுகையையும் பார்த்து அழுது கொண்டிருக்கும்  மற்ற பிள்ளைகளைக் கவனிப்பதற்காகவாது அந்தத் துயரில் இருந்து மெல்ல மீள வேண்டும் என நினைத்தார்.

அழுது, அழுது கண்ணீர் வற்றி, விழிகள் சுருங்கி உரித்துப் போட்ட வாழை மட்டையாய் தரையில் சுருண்டு கிடந்த மனைவியின் அருகில் சென்று மெல்லத் தொட்டார். அந்தத் தொடுதலில் இருந்த புரிதலை, கணவனின் எண்ணத்தை அறிந்தவளாய் எழுந்து முகம் கழுவி காப்பியைத் தயார் செய்தவள் பிள்ளைகளோடும், சில உறவுகளோடும் கூடத்தில் அமர்ந்திருந்த கணவனிடம் கொடுத்த கையோடு, ”ஏங்க………நாம இந்த ஊரை விட்டுட்டு வேற எங்கேயாவது போயிடலாமா?” என்றாள்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் “படிப்பெல்லாம் சம்பாதிக்கிறவனுக்கு. சம்பாதிக்கிற புருசனை கவனித்துக் கொண்டு குடும்பத்தை நடத்துறவளுக்கு கொணம் தான் முக்கியம்” என்ற கொள்கையோடு வளர்க்கப்பட்டவளைப் போல எழுத்தின் அடிச்சுவடு கூட அறியாது இருந்தவளோடு திருமணம் முடிந்த சில தினங்களிலேயே தான் வேலை செய்து கொண்டிருந்த ஊருக்குக் குடி வந்தார்.

தான் பிறந்த ஊரும், புகுந்த ஊரும் அங்கிருந்து மூன்று மணிநேரத்தில் போய் வரக் கூடிய தொலைவிலே இருந்த போதும் அவைகளோடு அவர் கொண்டிருந்த உறவு கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் தான் இருந்தது.

இங்கு வந்த இத்தனை ஆண்டுகளில் அவள் ஒரு தடவை கூட இப்படிக் கேட்டதில்லை. அவளுக்குப் பிடித்த ஊராகவே அது இருந்தது. இப்போது திடீரென இப்படிக் கேட்கிறாள் என்றால் அதை அலட்சியப் படுத்தி விடக்கூடாது என நினைத்தார்.

நினைத்தாரேயொழிய எங்கே போவது? என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இருக்கவில்லை. ”எங்கே போறது?” என்று மனைவியிடமே திருப்பிக் கேட்க, ”எங்க அம்மா வீட்டிற்குப் போகலாங்க”.

”அக்கா, தங்கச்சி, சொந்த பந்தம்னு நாழு சனம் வந்து போனா அவளுக்கும் கொஞ்சம் மாற்றமா இருக்கும். அதுனால அவ கொஞ்ச நாளைக்கு ஊருல வந்து இருக்கட்டும்னு” அருகில் இருந்த அவளின் அம்மாவும், மற்றவர்களும் சொல்ல அவரும் சம்மதித்தார்.

அடுத்த சில தினங்களில் மனைவியின் ஊருக்குக் குடும்பத்தை இடம் மாற்றினார். தன் பெற்றோரோடு இருந்தாலும் தனி சமையல் செய்து கொள்ளப் போவதாகவும், ”அதுதான் சரியாக இருக்கும்” என்றும் மனைவி அழுத்தமாய் சொன்ன விதம் அவருக்கு ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

எட்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில் ”வெளிநாட்டில் இருக்கும் தன் தம்பிக்கு திருமணம் பேசி முடித்திருப்பதால் நாம் வீட்டைக் காலி செய்து கொடுக்க வேண்டுமாம்” என மனைவி சொன்னதைக் கேட்டதும் நிற்கதியற்ற நிலைக்காகத் தன்னைத் தானே நொந்து கொண்டவர், ”யார் காலி செய்யச் சொன்னா?” என்றார்.

கண்கள் பனிக்க, ”எங்க அப்பாவும், அம்மாவும் தான்”

”காலி செய்து கொடுத்துடலாம். ஆனால் பிள்ளைகள் படிப்பு பாதிலேயே நின்று விடுமே. அதுவும் சின்னவன் பத்தாவது படிக்கிறான். இடையில் போனால் வேறு பள்ளிக்கூடத்துல சேர்க்க முடியாது. அதுனால அவனுக்குப் படிப்பு முடியிற வரைக்கும் இருப்பதற்குக் கேட்டுப் பாரேன்”.

பெத்த பிள்ளையை பெத்தவங்களிடமே பிச்சை கேட்கச் சொல்வதைப் போல தன் மனைவியை கேட்கச் சொன்னதை நினைத்து இரவெல்லாம் உறக்கம் கொள்ளாமல் படுக்கையில் புரண்டபடியே கிடந்தவரிடம் ”சும்மா போட்டு மனசை அலட்டிக்காதீங்க. நீங்க சொன்ன மாதிரி எல்லாம் போய் கேட்க வேணாம். இப்போதைக்கு இங்கேயே வாடகைக்கு ஒரு வீடு பார்த்துப் போயிடலாம். தம்பிக்கு கல்யாணம் முடிந்ததும் என் பங்குச் சொத்தாக வரும் மனையில் ஒரு வீட்டைப் போட்டுக்கலாம்” என்றாள்.

அது தான் கெளரவமாகவும் இருக்கும் என நினைத்தவர் விடிந்ததும் வழக்கமாகச் செல்லும் டீ கடைக்குச் சென்று அங்கு வந்த உறவினர்களிடமும், நண்பர்களிடம் தனக்கு வாடகைக்கு ஒரு வீடு வேண்டியிருப்பதாகச் சொன்ன போது ”அரண்மனை மாதிரி மாமனார் வீடு இருக்கும் போது எதுக்கு வாடகைக்கு வீடு தேடுறீங்க? என்று பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்குப் பதில் சொல்லிச் சமாளிப்பதே சங்கட்டமாக இருந்தது.

சொல்லி வைத்தவர்களிடம் இருந்து சாதகமான பதில் இல்லாததோடு சிலர் சொல்லத் தயங்கிய விதமும் சரியெனப் படாததால் தானே நேரடியாக விசாரித்து வீடு தேடுவது என முடிவு செய்தார். நெசவு ஆசிரியருக்குச் சொந்தமான வீடு காலியாக இருப்பதை அறிந்ததும் அவரைச் சந்தித்துக் கேட்டார்.

அண்ணே………தப்பா எடுத்துக்காதீங்க. உங்களிடம் மத்தவங்க சொல்ல சங்கடப்பட்டிருக்கலாம். நீங்களே நேரில் கேட்டு வந்துட்டதால சொல்றேன்.

”உங்க மாமனாரும், உங்க சகலையும் உங்களுக்கு வாடகைக்கு வீடு தரக் கூடாதுன்னு கூப்பிட்டுச் சொல்லிட்டாங்க. பல வருசமா தாயா, புள்ளையா நாங்க இங்கின பழகிட்டோம். உங்க குடும்பத்துக்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியல? சொந்த மகளுக்கே வீடு தரக்கூடாதுன்னு அவரு சொல்லுறப்ப நாங்க அவங்கள முறிக்க முடியாதுண்ணே” என்றார்.

வாழ்க்கை மனிதர்களை வைத்து நடத்தும் பாடம் எப்பொழுதுமே இயல்பாய் இருப்பதில்லை. சமயங்களில் அது புலப்படாத சில திகிலையும் சேர்த்தே அடையாளப்படுத்துகிறது. அதிர்ந்து பேசிப் பழகியிராத தன் மனைவி மீது அவளைப் பெற்றவர்களுக்கு அப்படி என்ன கோபம்? அவர்களோடு சகலையும்  சேர்ந்து கொள்ள என்ன காரணம்? கேள்விகள் மட்டுமே மனதில் நிற்க, “நன்றி தம்பி” எனச் சொல்லிவிட்டு கிளம்பினார்.

சில நாட்களுக்குப் பின் அதற்கான விடைகள் அவருக்குக் கிடைத்தது. வீட்டைக் காலி செய்யச் சொன்ன போது ஏற்பட்ட பிரச்சனையில், “மகனைப் பறி கொடுத்துட்டு வந்து நிக்கிற என்னைய உடனே வீட்டைக் காலி பண்ணச் சொன்னா எங்கே போவேன்? நான் காலி பண்ணனும்னா எனக்கான பங்கைப் பிரிச்சுக் கொடுங்க. அதுல ஒரு வீட்டை கட்டிக்கிட்டுப் போயிடுறேன். இல்லைன்னா என் கையெழுத்து வாங்காம உங்க இரண்டாவது மக புருசன் பேருல சொத்து எழுதிக் கொடுத்திருக்கிறதுக்கும் சேர்த்து கோர்ட்டுல கேஸைப் போட்டு எல்லோரையும் தெருவுல கொண்டாந்து நிப்பாட்டிடுவேன்” என தன் மனைவி சொன்னதன் எதிரொலி தான்  என்பதை அறிந்த போது அவருக்கே ”சீ” என்றாகிப் போனது. 

அடுத்த இரு மாதங்களில் மகனின் பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்து விட  வீட்டைக் காலி செய்த நாளன்று ”கடைசி, கடைசின்னு பொறந்த மன்ணுல கூட நிக்க முடியாம போச்சே” என கண்கலங்கிய படித் தன்னைப் பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும் தவிர மற்ற எல்லோரிடமும் வீடு தேடிப் போய் தன் மனைவி சொல்லி விட்டு வந்ததைப் பார்த்தவர் எப்படியும் ஒரு சொந்த வீட்டைக் கட்டி விட வேண்டும் என்று நினைத்தார்.

தான் வேலை செய்து கொண்டிருக்கும் ஊரே இனி தனக்குச் சொந்த ஊர் என முடிவு செய்தவர் அங்கேயே இடம் வாங்கி வீடு கட்டும் வேலையையும் ஆரம்பித்தார். ”வீட்டைக் கட்டிப்பார்” என்ற பழமொழி போல் வீடு கட்டுவது ஒன்றும் அவருக்குப் பெரிய விசயமாக இருக்கவில்லை. பணம் இருந்தால் அதுவே காரியத்தை நடத்தி விடாதா என்ன?

சில மாதங்களிலேயே உயிர் பெற்று நின்ற சொந்த வீட்டிற்குள் நுழைந்த பின் எதார்த்தமான பேச்சின் போது ”என்ன வாழ்க்கை இது? இருந்தும் இல்லாதவங்க மாதிரி ஒரு சொந்த, பந்தமில்லாம தனியா வந்து இங்கின உட்கார்ந்திருக்கோம். நாம தான் எல்லாத்தையும் ஒதுக்கிட்டு விலகி நின்னுட்டோம். பிள்ளைகளுக்காது கிடைக்கும்னு பார்த்தேன். இது தான் சொந்த வீடுன்னு ஆனதுகப்புறம் அதுக்கும் இப்ப வழியில்லாம போயிடுச்சு” என்று அங்கலாய்த்துக் கொண்ட மனைவியிடம் “உங்க ஊரில் குடியிருந்தால் மட்டும் பிள்ளைகளுக்கு எல்லாம் கிடைத்து விடுமாக்கும்?” என்றார் சற்றே எரிச்சலுடன்.

”ஏங்க கிடைக்காது? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு சும்மாவா சொன்னாங்க. என்னைப் பெத்தவங்களும், என் கூடப் பொறந்தவங்களும் தான் உறவா? இருபது வருசமா அங்கே வாழ்ந்திருக்கேன். அந்த ஊரே உறவுங்க”.  கட்டியவனுக்காக தன் விருப்பங்களை எல்லாம் புதைத்துக் கொண்டவள் இப்போதும் கூட பிள்ளைகளின் மீதான அக்கறையாகவே தன் ஆசையையும், எண்ணத்தையும் சொல்வது அவருக்கு வியப்பாகத் தான் இருந்தது. 

உறவுகளைப் புறந்தள்ளி எந்த ஊரை விட்டு வெளியேறினாரோ அதே ஊருக்குள் மனைவியின் விருப்பம் என்ற ஒரே காரணத்திற்காக மீண்டும் காலடி எடுத்து வைத்தவருக்கு  உறவல்லாத ஒருவர் உதவினார். குளமும், கோயிலும் சூழ அவரிடம் விற்பனைக்கு இருந்த ஒரு இடத்தை வாங்கி வீட்டைக் கட்டும் வேலையையும் ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நாளும் கட்டிட வேலைக்காக வரும் பணியாளர்களோடு தானும் வந்திருந்து அவர்களோடு அமர்ந்து, பேசி வீட்டை வார்த்தெடுப்பதில் அவருக்கு ஒரு ஆனந்தம் இருந்தது. கடந்த கால நினைவுகளோடு கலந்திருந்தவரை இரவு நேரக் காவலுக்கு கட்டிடத்தில் உறங்க வந்த பெரியவரின் குரல் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது.

”என்னப்பு பலத்த யோசனை? ஒன் மனசப் போல வீடும் நல்லா வரும்யா.  ஊருல பிள்ளைக காத்துக்கிட்டு இருக்கப் போகுதுக. கால காலத்துல கிளம்பிப் போ”. என்றார்.

அடுத்த நான்கு மாதத்தில் மார்பிளும், மரமுமாய் வீடு எழுந்து நின்றது. குடிபுகுதலை பத்திரிக்கை அடித்துச் சிறப்பாகச் செய்யலாம் என்ற பிள்ளைகளின் விருப்பத்திற்கு மறுப்புச் சொன்னவர் மனைவியை அழைத்து, “உன் ஊரில் யாரை எல்லாம் அழைக்க விரும்புகிறாயோ அவர்கள் எல்லோரின் வீட்டிற்கும் சென்று சொல்லி விட்டு வா. அது போதும்” என்றார்.

எதிர்பார்த்ததற்கும் அதிகமான உறவினர்கள் வந்திருந்தனர், அத்தனை முகங்களிலும் ஒரு ஏமாற்றுத்தனம் இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது. அழைத்து விட்டார்கள் என்பதற்காக எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்படி இவர்களால் படியேறி வர முடிகிறது? என்று நினைத்துக் கொண்டவர் தன் விருப்பம் நிறைவேறிய மகிழ்வோடு தனக்கும், தன் குடும்பத்திற்கும் உதவாது, உதாசீனம் செய்த உறவுகள் சூழ இருக்கும் மனைவியின் சந்தோச முகத்தைப் பார்ப்பதற்காக சமையலறைப் பக்கமாக வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

”உங்களுக்கு மட்டும் தான் தெரியுமாக்கும்? என் சொந்தக்காரனுகளைப் பற்றி இன்னைக்குப் படியேறி வந்திருக்கிற அத்தனை பேரும் தங்களின் உண்மையான முகத்தை ஒப்பனை செய்து கொண்டு வந்திருக்கும் கூட்டம். இவர்களைக் கவனிக்கிறதை விட்டுட்டு வேற வேலை இருந்தா போய் பாருங்க” எனச் சொல்லாமல் சொல்வதைப் போல வந்திருந்தவர்களைக் கவனிப்பதில் பெரிதாக அக்கறை காட்டாமல் “ஏங்க துணி ஊற வைக்கப் போறேன். காலையில நீங்க போட்டிருந்த வெள்ளைச் சட்டை வாழைக் கறையா இருந்துச்சு. அதை எடுத்துக் கொடுங்க” என்ற படியே தன் வழக்கமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

நன்றி : மலைகள்.காம்