Monday 28 January 2019

அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு

   இன்பச் சுற்றுலாவுக்காக இன்று அந்தமான் வருபவர்களுக்கும், பிழைப்பிற்காக வந்து அங்கேயே குடியேறிவிட்ட இந்தியாவின் இதரப் பகுதியினருக்கும், இன்றைய தலைமுறையினருக்கும் அந்தமானின் முந்தைய கொடூர முகத்தின் சுவடுகளைச் சொல்லும் எச்சங்களாய் நிற்கிறது அந்தமான் கூண்டுச் சிறை! தனிமனிதனுக்கு இருக்கும் வரலாற்றைப் போல இச்சிறைக்கும் ஒரு வரலாறு உண்டு. 

ஹிட்லர். முசோலினி, இடிஅமீன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுக்கும், அந்தமான் கூண்டுச்சிறையின்  வரலாறுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரு வரலாறுகளும் கொடூரத்தின் உச்சங்களில் உருவானவை. கவிஞர் வைரமுத்து பதிவு செய்துள்ள வரியில் சொன்னால் சுதந்திரத்திற்காகச் சிந்தப்பட்ட இரத்தத்தின் வாசனையை இச்சிறைச்சாலையில் நுகரலாம். அந்த அளவுக்குக் கொடூரங்களின் கட்டமைப்பினைக் கொண்டது அந்தமான் கூண்டுச் சிறையின் வரலாறு! தாங்கள் அடைபட்டுக் கிடக்கப்போகும் சிறைச்சாலையைத் தாங்களே கட்டிக் கொண்டதும், கட்டிய சிறையில் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்படதுமான வரலாறு வேறு எந்தச் சிறைச்சாலைகளுக்கும் இல்லை.

அக்காலப் பேரரசர்களின் கட்டட, சிற்ப, ஓவியக் கலைகளுக்குச் சான்றாக இந்தியா முழுவதும் விரவிக் கிடக்கின்ற எத்தனையோ சான்றுகளைப் போல நம் விடுதலைப் போராட்டத்தில் புரட்சி முகம் கொண்ட வீரர்களின் பங்களிப்பிற்கான சான்றாகவும், “சுதந்திரம்என்பதை ஏளனமாய், எகத்தாளமாய் நினைக்கும் இன்றைய தலைமுறைகளுக்குச் சுதந்திரமற்று இன்னொருவரின் அடிமையாய் இருப்பதன் கொடூரத்தைக் காட்டுக் காலக்கண்ணாடியாகவும் அந்தமான் கூண்டுச் சிறைச்சாலை திகழ்கிறது என்றால் அது மிகையற்ற உண்மை.

சுதந்திரம் வெறும் அகிம்சையால் மட்டும் வரவில்லை. அதற்காக ஆங்கிலேயர்களிடம் இம்சைகள் பட்ட வரலாறும் நம் சுதந்திரத்திற்கு உண்டு. அகிம்சைவாதிகள் ஆங்கிலேயர்களிடம் அடிபட்டுக் கொண்டே குரல் கொடுக்க, அடித்தவனின் அடித்தளத்தையே ஆட்டுவித்து குரல் கொடுத்தவர்கள் புரட்சியாளர்கள். “ நான் புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகிறேன்என முழங்கி நின்ற பகத்சிங்கைப் போல விதையாய் விழுந்து மற்றவர்களை வீரத்தோடு எழ வைத்த அத்தகைய புரட்சி வீரர்களில் பலர் விதைக்கப்பட்ட இடம் அந்தமான் சிறைக்கூடம்! அதுவும் சாதாரணமாக விதைக்கப்படவில்லை. சித்திரவதைகளால் சிதைக்கப்பட்டும் வார்த்தைகளால் வஞ்சிக்கப்பட்டும், கால்களால் உதைக்கப்பட்டும் புதைக்கப்பட்டனர்.

கத்தியின்றி, இரத்தமின்றி பெறப்பட்ட சுதந்திரம் எங்கள் சுதந்திரம்என போலி வேசம் போட்டு பிதற்றித் திரியும் போலித்தனம் என்று ஒழிகிறதோ அன்று தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின், தன் தாய் நாட்டின் விடுதலை வரலாற்றை நம் தலைமுறைகள் முழுமையாகவும், உண்மையாகவும் அறிந்து கொள்ள முடியும். அத்தகைய அறிதலுக்கு வகை செய்யும் வழிகளில் ஒன்றாக செந்நீர் ( இரத்தம் ) சிந்தியும் பெற்றது தான் எங்கள் சுதந்திம் என உரக்கச் சொல்ல ஆசைப்பட்டேன். அந்த ஆசையின் வெளிப்பாடு தான் இச்சிறிய தொகுப்பு!

       புத்தகம் வாங்கபாரதி புத்தகாலயம்சென்னை

ஆன்லைனில் வாங்க - https://www.amazon.in/Andaman-Cellular-Sirai-Oru-Varalaru



 

1 comment:

  1. சிறந்த புத்தகம் ஒன்றை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete