Friday, 11 January 2013

ஆன்மிக சாண்ட்விச்


நமது இதிகாச புராணங்களுக்குள் நுழைந்தால் சுவராஸ்யத்திற்கும், சுவைக்கும் பஞ்சமே இல்லாத அளவு ஏராளமான கதைகள் கிடைக்கும். ஆசிரியர் இவற்றிலிருந்து 20 கதைகளை தேர்வு செய்து இந்த நூலில் நமக்கு வழங்கி உள்ளார். எல்லா கதைகளுக்கும் அருமையான ஓவியங்களையும் இணைத்து மிக நன்றாக வெளிக்கொணர்ந்திருக்கிறது வானவில் பதிப்பகம்.
-தினமலர்
அட்சயதிரிதியை, மார்கழிக்கோலம், சிவனாரும் நந்திதேவரும், பிரமனுக்கு வந்த பயம், ஸ்ரீஅனுமன்......என சின்ன, சின்ன விசயங்களை சுவைபடத் தந்துள்ளார் ஆசிரியர்.
-சக்தி விகடன்


Wednesday, 9 January 2013

பெய்யாகும் புலம்பல்கள்



எதுவும் சாதகமாக இல்லை.
எவரும் உதவிக்கரம் நீட்டவில்லை.
விதியோ
விடாது சதிராடுகிறது
தோல்வியோ
அதன்போக்கில் விரட்டுகிறது
இப்படியானப் புலம்பல்களின்
செவியேறும் தருணங்களை
தகர்த்தெறிந்து மாயையாக்குகிறது.

மண்ணும்
நீரும்
உரமும்
எவரும் இடாமலே
கொழுக்கொம்பின்றி
உயிர் பிடித்து
பாறையிடுக்கில்
எழுந்து நிற்கும் அந்த சின்ன செடி!

நன்றி : காற்றுவெளி 

Tuesday, 1 January 2013

கவலையாக மாறும் சந்தோசம்


ஊருக்காய் ஒன்றுகூடி 
பிள்ளையாரை களவெடுத்து வந்து 
பிரதிருஷ்டை செய்த சந்தோசத்தை 
கவலையாக மாற்றிக் கொண்டிருக்கிறது…. 

அடுத்த ஊரில் 
பிள்ளையாருக்கு கோயில் கட்டும் சேதி

நன்றி : வார்ப்பு

தவறிப்போன இளமை

ஓரடுக்கில்
இரண்டு வீடுகள்
வாசலை வசீகரிக்கும்
வாகனங்கள்
கழுத்திலும் கையிலும் வருடும்
தங்கக் குழல்கள்
சேமிப்பில் உறங்கும்
காந்தித் தாள்கள்
திரைகடல் ஓடியதில்
மிச்சமாய் இவை நிற்க
எச்சம் தேடி அலைகிறது
தவறிப்போன இளமை.

நன்றி : முத்துக்கமலம்