Friday 22 March 2013

மாத்தியோசி!


நண்பனுக்கு கிப்ட் (GIFT) வாங்குவதற்காக கிப்ட் விற்பனை செய்யும் கடை ஒன்றிற்கு சென்றிருந்தேன். அச்சமயத்தில் அங்கு கிப்ட் வாங்க வந்தவர் கடையிலிருந்த பையனிடம் என் பிரண்டுக்கு பிறந்தநாள் பரிசு தரனும்.....நல்லதா கிப்ட் காட்டுங்கன்னு சொல்லிட்டு, கூடவே இதுவரையும் அப்படி ஒரு கிப்ட யாரும் அவனுக்கு தந்திருக்க கூடாது. அது மாதிரி காட்டுங்கன்னு சொன்னாரு.

கடையிலிருந்த பையன் சற்றும் யோசிக்காமல் அருகில் இருந்த சின்ன பிளாஸ்டிக் குப்பை வாளியைக் காட்டி சார்...... இதை பேக்கிங் பண்ணிடவா? உங்க பிரண்டுக்கு மட்டுமல்ல, யாருக்குமே இந்த கிப்ட் கிடைச்சிருக்காதுன்னு சொன்னான். இந்தச் சூழல் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?  யோசித்த படியே தொடர்ந்து வாசியுங்கள்.

கடையிலிருந்த பையன்  அப்படி சொன்னதும் ஙொய்யால வம்ப வெலைக்கு வாங்கிட்டான்டான்னு பக்கத்துல நின்ன நாங்க நினைச்சோம்ஆனால் அங்கே ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது.

கிப்ட் கேட்ட அந்த நபர்  யே.......ஆமால - ன்னு சொல்லிட்டு.... அழகான சின்ன குப்பை வாளி ஒன்றை வாங்கினார். பின்னர் ஒரு வெள்ளை பேப்பர் கட்டு, ஒரு நல்ல விலையுள்ள பேனா, கடிதம் அனுப்பும் கவர், ஒரு சின்ன லட்டர் பேடு ஆகியவைகளை அந்த கடையிலிருந்தே வாங்கி அதையெல்லாம் அதனுள் போட்டார்.

ஒரு சின்ன பேப்பரில்.....உன் எண்ணங்கள் இந்த காகிதம் வழியே திசையெங்கும் பயணிக்கட்டும். அதன் பொருட்டு வரும் நிராகரிப்புகள் இந்த வாளியில் குப்பைகளாக போகட்டும் என குறிப்பு எழுதி அதனுள் வைத்து கிப்ட் பேப்பரில் பேக்கிங் செய்யச் சொன்னார்.

சுமார் அரைமணி நேரமாக நடந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்த நான் மற்றும் அங்கிருந்தவர்கள் அசந்து போனோம். அவரிடம் பேசிய போது தெரிந்தது. அவரின் நண்பர் கவிதை, கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவராம். பையன் சொன்ன யோசனை சூப்பர் என்றார்.

என் சக நண்பர் ஒருவரிடம் இந்த நிகழ்வின் ஆரம்பத்தை மட்டும் சொல்லி இந்தச் சூழல் உனக்கு ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருப்பாய்? என்று கேட்டேன்.......அவன் சொன்ன பதில்! முடியல.......நம்ம பிரண்டு நம்மளைப் போல தானே இருப்பான்!