Wednesday 19 March 2014

குழந்தைகளின் உலகமும், எண்ணமும்

குழந்தைகளை எப்பொழுது கொண்டாடப் போகிறீர்கள்

தன் தோழி சுபிக்சாவுக்கு நாளை பிறந்தநாள் என்று சொன்னாள் மகள். மறுநாள் பள்ளி விட்டு திரும்பியதும் வழக்கம்போல் பேசிக் கொண்டிருந்தபோது டாடி…..சுபிக்சா பாவம் என்றாள். ஏன்? என்றேன். இன்னிக்கு பெர்த்டேவும் அதுவுமா சுபிக்சாவை மிஸ் ரெம்ப திட்டிட்டாங்க என்றாள். ஏன் திட்டுனாங்க? என்றேன். ஒரு சப்ஜெக்ட்லமார்க் குறைவா வாங்கிடுச்சு டாடி என்றதும் எவ்வளவு? என்றேன். 41 (இப்போதைய குழந்தைகளுக்கு இந்த மதிப்பெண் மிக குறைவாம். தப்பிச்சடா சரபோஜின்னு நினைத்துக் கொண்டேன்) என்றவள், ஏன் அப்படி வாங்குச்சுன்னு தெரியல. ஆனா, நல்லா படிக்கும் டாடி என்றாள். கூடவே அவள் சொன்னது தான் என்னை கொஞ்சம் இறுக்கியது. இன்னைக்கு மிஸ் திட்டாம இருந்திருக்கலாம் டாடி. பாவம் அழுதுச்சு. நான் சுபிக்சா கையை பிடிச்சுக்கிட்டேன் என்றாள். அந்த குழந்தை மதிப்பெண் குறைவாக எடுத்ததற்கு காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். ஆசிரியர்களே….உங்களின் தடித்த வார்த்தைகளால் குழந்தைகளை காயப்படுத்தி விடாதீர்கள்பிஞ்சுகளை பிடுங்கி எறிந்து விடாதீர்கள். மலர நிற்கும் பூக்களை மலடாக்கி விடாதீர்கள். இதற்கெல்லாம் மேல் மதிப்பெண்கள் என்ற பெயரில் எண்களின் கூட்டுத்தொகை எண்ணிக்கையில் குழந்தைகளை கொச்சைப்படுத்துவதை தயவு செய்து விட்டு விடுங்கள். கவிக்கோ அப்துல்ரகுமான் குழந்தைகளை எப்பொழுது கொண்டாடப் போகிறீர்கள்? என கேட்டாரே அதை தயவு செய்து உண்மையாக்கி விடாதீர்கள்.

குழந்தைகளின் உலகமும், எண்ணமும் அலாதியானது:

மகளிடம் பேசிக்கொண்டிருந்த போது உன் தோழி சுபிக்சா பற்றி நீ சொன்ன விசயத்தை முகநூலில் போட்டிருக்கிறேன் என்றேன். எப்படின்னு சொல்லுங்க? என்றாள். சொல்லி முடித்ததும் அதில் இரு தப்பு இருக்கு. அதுனால அதை உடனே டெலிட் பண்ணுங்க என்றாள். என்ன தப்பு? என்று கேட்டேன். சுபிக்சாவை அவங்க அம்மா வேறு ஸ்கூலுக்கு மாத்துறதா சொன்னது தனி. அதை இதோட சொல்லி இருக்கீங்க. அதேமாதிரி மார்க்கையும் தப்பா சொல்லியிருக்கீங்க டாடி என்றாள். உடனே நான் இரண்டையும் எடிட் செய்து விடலாம். அதற்கான எடிட் ஆப்சன் இருக்கிறது என்றேன். ஆனால் அதை அவள் ஏற்கவில்லை. அதுதான் தப்பாகிடுச்சுல டாடி என்றவளிடம் எடிட் செய்து விட்டு வாசித்து காட்டியதும்…..ம்…. இப்ப சரி என்றாள். யோசிக்கையில் ஒன்று தெரிந்தது. வளர்ந்த நாம் தப்பை திருத்தி கொள்ளலாம் என நினைக்கிறோம். ஆனால், வளரும் அவர்களோ தப்பே நிகழக்கூடாது என நினைக்கிறார்கள். அவர்களின் உலகம் மட்டுமல்ல எண்ணங்களும் அலாதியானது தான்!