Sunday, 30 March 2014

நிஜத்தின் நிகழ்வை நெகிழ்வாய் பரிமாறிக் கொள்ள.....

பள்ளி ஆண்டு விழாவில் டான்ஸில் சேர்ந்திருக்கிறேன் என சில தினங்களாக மகன் சொல்லிக் கொண்டிருந்தான். பெயர் கொடுத்திருப்பான்னு நினைக்கிறேன். இன்னைக்கு அவன் மிஸ்ஸிடம் கேட்கிறேன் என்று சொன்ன மனைவி மறுநாள் வருத்தமாக அவன் பெயரை மிஸ்ஸிடம் கொடுக்கவே இல்லையாம். நம்ம கிட்ட தான் சொல்லிக்கிட்டு இருந்திருக்கான். செலக்சன் லிஸ்ட் எல்லாம் முடிந்து விட்டதால் இனி ஒன்றும் செய்ய முடியாது. யாராவது விலக நேர்ந்தால் அவன் பெயரை சேர்த்து விட்டு தகவல் சொல்கிறேன் என அவன் மிஸ் சொல்லிட்டாங்க என்றாள். கூடவே, இதை அவனிடம் சொன்னா எப்படி எடுத்துக்கிடுவான்னு தெரியல. அவனுக்கு ஏமாற்றமா இருக்கப்போகுது. தவிர, அக்காவுக்கு மட்டும் டான்ஸ்க்கு சேர பணம் கொடுத்திருக்கீங்க. என்னைய மட்டும் சேர்க்கலைன்னு சொல்றீங்கன்னு சொல்லி அழப்போறான்னு வருத்தமாய் சொல்லிக் கொண்டிருந்தாள்.  

அடுத்த வருடம் முன் கூட்டியே பெயர் கொடுத்து விடலாம் என சொல்லி சமாதானப்படுத்து என மனைவியிடம் சொன்னாலும் அதை அவனிடம் அவள் எப்படி சொல்லிப் புரிய வைப்பாள்? என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

மகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது அம்மா தம்பியிடம் சொல்லிவிட்டாளா? என்று கேட்டேன் 

அவன் சின்னப்பையன் தானே டாடி…. புரிஞ்சுக்க தெரியாதுல. நானே அவனிடம் சொல்லிவிட்டேன். அவனும் சரின்னு சொல்லிட்டான். இப்ப விளையாடிக்கிட்டு இருக்கான் என்றாள்.

மகனை அழைத்து பேசினேன். அவனும் நாங்கள் பயந்த மாதிரி இல்லாமல் அடுத்த வருசம் சேர்ந்துக்கிறேன் டாடி என்றான். மகள் எப்படி சொல்லி இருப்பாள்? வார்த்தை ஜாலம் ஏதும் நிகழ்ந்திருக்காது. பொய் ஏதும் சொல்லி இருக்க மாட்டாள். பின் எப்படி அவனுக்கு ஏமாற்றம் தோன்றாத படி சொல்லி இருப்பாள்? என்று நினைத்துக் கொண்டேன்.

குழந்தைகளால் மட்டும் தான் நிஜத்தின் நிகழ்வை நெகிழ்வாய் பரிமாறிக் கொள்ளவும், அவர்களுக்குள் சொல்லிக் கொள்ளவும் முடியுமோ?!