குடியிருப்பின் வலக்கோடியில்
ஈனுதலுக்கு காத்திருந்ததா?
உணவு விடுதி வாசல்களில்
குழவி திரிந்தவைகளில் எதுவுமா?
பிள்ளை பேறு அற்ற
முத்தப்பன் தம்பதி வளர்த்ததா?
விளையாட்டுத்திடலில்
குட்டிகள் சகிதம் ஓடி திரிந்ததா?
கடைக்கு செல்லும் போதெல்லாம்
காலிடுக்கில் சுற்றி,சுற்றி வந்ததா?
சிநேகம் நாடியோ, வேறு காரணமாகவோ
எதிர் குடியிருப்பிலிருந்து வருவதா?
எதுவென்று ஊகிப்பதற்குரிய
எந்த முகாந்திரமுமின்றி
தார்சாலையின் தடமாய்
உருமாறியிருந்த அந்த பூனை
தொடங்கியிருந்தது.
தன் இறப்பின் மீதான பிறர் சந்தேகங்களை
வாகன சக்கரங்களில் ஏற்றியும்
விசிறி கிடந்த தன் ரோமங்களை
வெளியெங்கும் சுழலவைத்தும்
மரணத்திற்கு பிந்தைய
தன் பிரபஞ்ச பயணத்தை!
நன்றி : மலைகள்