சில கோப்புகளை ஒழுங்குபடுத்தி சரிபார்த்து தருவதற்காக அந்த துறையில் அனுபவமுள்ள ஒருவருக்கு அனுப்பி சில தினங்கள் ஆகி விட்டதால் நண்பனிடம் சொல்லி விபரம் கேட்கச் சொன்னேன். சில மணிநேரம் கழித்து அந்த நண்பன் போனில் மாப்ள…….கேட்டேன். ”கரெக்டா இல்லையாம்? அப்புறம் பேசுறேன்னு சொல்லிட்டாரு” என்றான்.
ஒருவேளை நான்தான் தவறாக அனுப்பியிருப்பேனோ? என்று நினைத்து அவருக்கு அனுப்பி வைத்திருந்தவைகளின் நகல்களை மீண்டும் சரிபார்த்து, நானாக அவசியமிருக்காது என ஒதுக்கிய சில படிவங்களையும், கோப்புகளையும் அவைகளோடு இணைத்து மீண்டும் ஒரு பிரதி எடுத்து அனுப்பி வைத்தேன். அந்த துறை சார்ந்தவரிடமிருந்து எனக்கு போன் வந்தது. ஏன் முன்பு அனுப்பியவைகளையே திருப்பி எனக்கு அனுப்பி உள்ளீர்கள்? என்று கேட்டார்.
தர்மசங்கடமான நிலையில் இல்லண்ணே……நண்பர் போனில் கேட்டப்ப கரெக்டா இல்லைன்னு சொன்னீங்களாம். அதான் முன்பு அனுப்பாமல் விட்ட சில படிவங்களையும் இணைத்து அனுப்பி இருக்கிறேன் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே உன் நண்பன் போன் செய்தபோது கரண்ட் இல்லை. பேரனை கையில வச்சுக்கிட்டு இருந்ததால தொடர்ந்து பேச முடியல. அதுனால ”கரண்ட் இல்லை. அப்புறம் பேசுறேன்னு சொன்னேன்னு” சொன்னார். ஒரு வழியாக சமாளித்து நன்றி சொல்லி வைப்பதற்குள் நாக்கு வறண்டு விட்டது.