Saturday 5 April 2014

தன்மானத் தமிழனின் வெளிப்பாடு

முதன்மை நிறுவனத்தின் உயரதிகாரியின் பார்வைக்கு நான் பணிபுரியும் கம்பெனியின் கோப்பு ஒன்றை அனுப்புவது சம்பந்தமாக அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு காலையில் சென்றிருந்தேன்தினமும் பல்வேறு பணிகளுக்காக சென்று வரும் அலுவலகம் தான் என்ற போதும் சம்பந்தப்பட்ட பணிக்குரிய பிரிவுக்கு சென்று அது சார்ந்த பொறுப்பாளரை சந்தித்து சில தினங்களாக மட்டுமே நினைவூட்டி வந்தேன். இன்று வரை ஒரு பலனுமில்லாததால் அந்த உயரதிகாரியை நேரடியாக சந்தித்து வாய்மொழியாக தகவலை சொல்லி ஆவன செய்யும்படி கேட்டுவந்த பின் அதற்குரிய பொறுப்பாளரிடம் தகவலை சொல்லி கோப்பை அவர் பார்வைக்கு விரைவில் அனுப்பி தாருங்கள் என கேட்டேன்.

சொன்னது தான் தாமதம் பொங்கி எழுந்து விட்டார். தன் டேபிளின் மேல் இருக்கும் கோப்பை கணிணியில் பதிந்து விட்டு உயரதிகாரியின் டேபிளுக்கு அனுப்ப வாரங்களை கடத்தும் அந்த பொறுப்பு தன்னுடைய சுய மரியாதையே போய் விட்டது போல் விடாது கூவி நின்றது. தமிழ்மொழி அறியா அந்நிய நாட்டவரான அந்த உயரதிகாரிக்கு இருக்கும் தன்மை கூட அவர் ஊதியத்தில் கால்பங்கு கூட வாங்காத இந்த பொறுப்புக்கு இல்லாததை நினைத்துக் கொண்டேன். தன்னைப் போலவே கடல் கடந்து வந்திருப்பவனிடம் கூட கனிவாய் நடக்கத்தெரியாத அந்த பொறுப்புக்குரிய என் இனத்தைச் சேர்ந்த அந்த தமிழனை நோக்கிடே நீங்கள்லாம் எங்கேடா கிடந்து வர்றீங்க?.....…உங்களை எல்லாம் நம்பி எப்படிடா பொது தொடர்புக்குரிய வேலைய தந்தானுகன்னு? கேட்கத் தோன்றினாலும் முடியவில்லை.

என்ன செய்ய? அவன் சொல்லும் நிலையிலும், நான் கேட்கும் நிலையிலும் இருந்ததால் அமைதியாய் தவறாய் நடந்திருந்தால் மன்னிக்கவும் என சொல்லி விட்டு வந்து விட்டேன். இனி தான் தெரியும் அந்த தன்மான தமிழன் கோப்பை நகர்த்துவானா? இல்லை தமிழனுக்கு எதுக்கு உதவனும்னு தன் இனத்துக்கே உரிய துரோகத்தை காட்டுவானான்னு?