வரிசையில் நின்னு சங்கூதவும் வேலை இடத்தை விட்டு வெளியேறி ஸ்கேன் பண்ணிட்டு வண்டி பிடிச்சு 9.30 க்குள் வந்திறங்கி திரும்பவும் வரிசையில் நின்னு ஸ்கேனிங்கில் முகத்தை காட்டிட்டு வீட்டுக்குள் வந்ததும் வராததுமா காலையில் ஊற வைத்து விட்டுப்போன சட்டி, பானையெல்லாம் கழுவிட்டு வரிசையில் வைத்திருந்த துணிவாளியை வாசிங்மெசினில் அலசப்போட்ட பின் அரிசி கழுவி குக்கரில் ஏற்றி சமையலை முடிச்ச உடனையே வரிசைபிடித்து பாத்ரூமில் குளிச்சு வந்ததும் வாசிங்மிசினில் கிடந்த துணியை கொடியில் உலற வைத்து விட்டு ஆறுக்கு ஆறு பெட்டில் கிடக்கும் தலையணை, போர்வையெல்லாம் ஓரங்கட்டி வச்சுட்டு காத்திருக்கும் சோத்துச்சட்டி, குழம்புச் சட்டியை எல்லாம் அதில் கொண்டுவந்து வைத்து துணைக்கறி இல்லாமல் சாப்பிட்ட கையோடு பெட்டுக்கு மேல் வைத்த சட்டி பானையை எல்லாம் அள்ளி பெட்டுக்கு கீழே தள்ளியதும் வீட்டுக்கு ஒரு போன் போட்டு ஆத்துக்காரி சண்டை மூடுல இருந்தா ஒரு சண்டை இல்ல லவ் மூடுல இருந்தா ஒரு முத்த சப்தம் வாங்கிட்டு அப்படியே மகளையும் மகனையும் அழைத்து பள்ளி நிகழ்வுகளை விசாரிச்சதும் வந்து மேல் பெட்டில், பக்கத்து பெட்டில் படுத்திருக்கிறவன் சரியா இருக்கானா? அல்லது அவனோடு சேர்த்து பெட்டையும் நம்ம மேல சரிச்சிடுவானான்னு செக் செய்த பின் படுக்கைய விரிச்சா மணி 11.30.
கண் அயர்வதற்குள் அக்கம் பக்க பெட் நண்பர்கள் ”நண்பேண்டா” என சொல்லாமல் சொல்வது போல் அருகில் வந்து டே எழுந்திரு….மணி 5.30 என்றதும், ஐயயோ இதுக்கு மேல தூங்குனா ஏழரையாயிடுமேன்னு வாரி சுருட்டி எழுந்திருச்சு வரிசையில நின்னு வயித்தைக் கழுவிட்டு வெளியில் வந்து வாயை கழுவிட்டு அன்றைய மதிய சாப்பாட்டுக்கு நேத்து வச்ச குழம்ப சுடவச்சு பாக்கெட்டிலும், நேத்து சமைச்ச சோத்தை பேப்பரிலும் கட்டிக்கிட்டு சட்டி பானைக்கெல்லாம் தண்ணீர் அபிஷேகம் செய்து வைத்துவிட்டு அடுத்தவன் சுட வைத்த தண்ணியில் கொஞ்சம் களவெடுத்து அதில் ஒரு த்ரீ இன் ஒன் காபி தூள் பாக்கெட்டை உடைத்து கொட்டி அந்த கவரையை கையால் சுத்தி கரண்டியாக்கி ஒரு கிண்டு கிண்டி ஊதியும், ஊதாமையும் நெஞ்சு எறிய குடிச்சிட்டு கட்டிய பொட்டலங்களையெல்லாம் அள்ளி பேக்குல போட்டு பேக்கை தூக்கி தோளில் மாட்டிட்டு பேக்கை விட கனமா இருக்குற சப்பாத்தை தேடி எடுத்து காலில் நுழைத்துக் கொண்டு மூன்று மாடி படிக்கட்டுல இறங்கி வந்து வரிசையில நின்னு முகத்தை காட்டி ஸ்கேன் பண்ணிட்டு வெளியில் வந்தா மணி 6.10
கழுத்தறுத்த பனியனால் காதைக்கட்டிக்கிட்டு அடைப்பில்லாத வண்டியில ஏறி தியேட்டர் வரிசையை விட நெருக்கமாய் அமர்ந்து ஊதக்காத்து வழியெங்கும் உருட்டி அடிக்க தூங்கியும் தூங்காமையும் ஒரு மணிநேரம் மேடு பள்ளமெல்லாம் வண்டியோடு குழுங்கி எழுந்து வேலை இடத்துக்கு வந்து வரிசையில் நின்னா மணி 7.10.
7.30 க்குள் ஸ்கேன் பண்ணிட்டு உள்ளே போகலைன்னா ஏழரை ஆயிடுங்கிறதால பொறுப்பா ஸ்கேன் பண்ணிட்டு உள்ளே போய் யார்க்கிட்டேயும் ஏழரை இல்லாம அன்றைய வேலையை முடிச்சதும் தூக்கிட்டு வந்த பேக்கை தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு வீட்டுக்கு போக வரிசையில வந்து நின்னா மணி8.30. இந்த புழுத்த வாழ்க்கையில எங்கன்னு புத்தகம் படிக்க? ஆனாலும் படிக்கணும். தொட்டியில தண்ணீரை நிரப்ப முடியலைன்னாலும் அப்ப அப்ப தண்ணி பிடிச்சு வைக்கக் கூடாதா? என எப்பொழுதோ ஓரிடத்தில் கேட்டது அவ்வப்போது மனதை பிசைய தொட்டியில் தண்ணீர் பிடிக்கும் முயற்சியாக மட்டுமே இருந்து கொண்டிருக்கிறது புத்தக வாசிப்பு!