Wednesday, 9 April 2014

புத்திசாலி சான்றிதழும், தேர்வறை அனுபவமும்

சென்ற முறை தேர்வெழுத சென்றபோது மெயின் ஹாலில் என்னுடைய நம்பர் இருந்தது. அந்த அறை எல்லா பாடங்களில் தேர்வு எழுதுபவர்களால் சூழப்பட்டதைப் போல எல்லா வயதிலும் உள்ளவர்களாலும் பால் பாகுபாடின்றி சூழப்பட்டிருந்தது.

கண்காணிப்பாளர்கள் என ஆணும், பெண்ணுமாய் பத்துப் பேர் வரை இருந்தார்கள். போதாக்குறைக்கு அவ்வப்போது சிலர் வந்து போனார்கள். அத்தனை கண்காணிப்பிலும் ஒரு தேர்வர் தன் செல் போனில் பிட்டை பதிவு செய்து கொண்டு வந்து எழுதிக் கொண்டிருந்தார். அதைக் கண்டுபிடித்து செல்லை பறிமுதல் செய்த பெண் கண்காணிப்பாளர் என் அருகில் வந்ததும் மணி பார்ப்பதற்காக டேபிளின் மேல் நான் எடுத்து வைத்திருந்த என் செல் போனை பார்த்து விட்டு அதையும் எடுத்துக் கொண்டார்.

ஏன் எடுக்குறீங்க? மணி பார்ப்பதற்காக தான் மேலே எடுத்து வைத்திருக்கிறேன். வேண்டுமானால் உள்ளே வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னேன். அவர் தர மறுத்து விட்டார். அது கூட பரவாயில்லை. அதற்கு பிறகு தான் பிரச்சனை ஆரம்பமானது. அந்த கண்காணிப்பாளர் தன் சக கண்காணிப்பாளரிடம் ரொம்ப புத்திசாலின்னு நினைப்பு போல.....செல்லுல மணி பார்க்குறதுக்காக மேலே வச்சிருந்தாராம். பறித்து வந்து விட்டேன் என்று சொன்னது என் காதில் விழுந்தது.

சட்டென அந்த கண்காணிப்பாளரை அழைத்து உங்க புத்திசாலி தனத்துக்கு வாழ்த்துகள். ஆனால், இந்தத் தேர்வறையில் பிட் கொண்டு வரக்கூடியவர்களாக இருப்பார்கள் என நீங்கள் சந்தேகம் கொண்டால் அது அறிவியல் பாட தேர்வு எழுதுகிறவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். அவர்களை கண்காணிக்காமல் தமிழ் பாடத்தில் தேர்வெழுதிக் கொண்டிருக்கும் என்னிடம் செல்லை எடுத்துக் கொண்டதோடு இல்லாமல் என்னுடைய புத்திசாலித் தனத்திற்கு நீங்கள் சான்றிதழ் தர வேண்டியதில்லை என்றேன்.

சங்கடமான ஒரு இறுக்கம் அறையெங்கும் நிலவ தேர்வறையை விட்டு வெளியேறும் போதுசாரிஎன்றேன். அந்த கண்காணிப்பாளர் பதிலுக்கு ஒரு புன்னகை மட்டும் செய்தார். அதன் பின் அடுத்த மூன்று தேர்வு நாட்களும் பரஸ்பரம் காலை வணக்க பரிமாறல்களோடு கழிந்தது