அக்டோபர் 15, 1931 ம் ஆண்டு இராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல்கலாமின் முழுப் பெயர் ஆவுல் பக்கீர் ஜைனுல்லாபுதீன் அப்துல் கலாம் ஆகும். ஆவுல் என்பது இவரின் கொள்ளுத் தாத்தாவின் பெயர். பக்கீர் என்பது தாத்தாவின் பெயர். பெற்றோர் பெயர் ஜைனுல்லாபுதீன். ஆஷியம்மா.
அப்துல்கலாமை விஞ்ஞானியாகத் தூண்டியது அவருடைய ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் சிவசுப்பிரமனியம் பறவைகள் பறப்பது குறித்து நடத்திய பாடமே!
டாக்டர் அலெக்ஸ் கோரல் எழுதிய அறியப்படாத மனிதன்(MAN THE UNKNOWN), திருக்குறள், வில்லியன் ஜஷ்லர் வாட்சன் எழுதிய பல விளக்குகளிலிருந்து ஒளி, புனித குரான் ஆகிய நூல்கள் அப்துல்கலாமிற்கு மிகவும் பிடித்த நூல்களாகும்.
சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள பழைய புத்தகக் கடையில் 1950 களில் தான் வாங்கிய “பல விளக்குகளிலிருந்து ஒளி” என்ற நூலை அறுபது வருடங்களாகப் பாதுகாத்து வந்தார்.
திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவ உணவு சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்பதால் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியவர் அதன்பின் சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.
அப்துல்கலாம் எம்.ஐ.டி.யில் படித்த போது ”நமது சொந்த விமானத்தை நாமே தயாரிப்பது எப்படி?” என்ற கட்டுரையைத் தமிழில் எழுதிப் பரிசைப் பெற்றார். எழுத்தாளர் சுஜாதா இவரின் வகுப்புத் தோழர்.
பறவைகளின் பிரியர். ஒரிஸ்ஸாவில் தான் வேலை செய்த சந்திப்பூர் ஆய்வு மையத்தில் அம்மாநில அரசின் உதவியுடன் ஏழு ஏக்கர் பரப்பளவில் இரண்டு குளங்களை வெட்டச் செய்து அதைப் பறவைகள் சரணாலயமாக மாற்றினார். தும்பா ஆய்வு நிலையத்தில் வேலையில் இருந்த சமயத்தில் தினமும் முப்பது கிலோ கோதுமையை வாங்கி அப்பகுதியில் இருந்த பறவைகளுக்கு உணவாகப் போடுவார்.
“பெரிலியம்” என்ற தாதுப் பொருளை வெளிநாடுகள் இந்தியாவிற்குத் தர மறுத்த போது அப்துல்கலாம் ஆய்வு செய்து இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள மண்ணில் பெரிலியம் அதிக அளவில் கலந்து இருப்பதைக் கண்டறிந்தார்.
நீலநிற ஆடைகளையே விரும்பி அணியும் அப்துல்கலாம் எஸ்.எல்.வி. திட்டத்தை ஆரம்பித்த பிறகே காதுகளை மறைக்கும் படியான நீண்ட கூந்தலை வளர்க்க ஆரம்பித்தார்.
பொக்ரான் அணுகுண்டுச் சோதனையில் முக்கியப் பங்காற்றியவர். திரிசூல், அக்னி, நாக், பிரித்வி, ஆகாஷ் ஆகிய ஐந்து ஏவுகணைகளின் தயாரிப்புத் திட்டக்குழுவின் தலைவராகவும் இருந்தார். ”அக்னியின் தந்தை” என்றழைக்கப்பட்டார்.
அக்னி ஏவுகணை ஏவப்படுவதற்கு முந்தைய நாள் இரவு நடந்த கூட்டத்தில் ”அக்னியின் வெற்றித் தினத்தைக் கொண்டாட நான் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார் பாதுகாப்புத் துறை அமைச்சர். ”இந்த வளாகத்தில் நடுவதற்கு ஒரு இலட்சம் மரக்கன்றுகளைக் கொடுங்கள்” என்றார் கலாம்.
தன் நண்பர் ”அருண் திவாரி”யுடன் இணைந்து தமிழில் எழுதிய இவரின் சுயசரிதை நூலான ”அக்னிச்சிறகுகள்” குறுகிய காலத்தில் இரண்டு இலட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தது.
பொது நிகழ்வுகளில் அதிக முறை திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியவர் அப்துல்கலாம்.
நாற்பது பல்கலைக்கழகங்களில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற அப்துல்கலாம் வீணை வாசிப்பதில் ஆர்வமுடையவர்.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் பெயரில் வழங்கப்படும் ராயல் சொஸைட்டி விருதைப் பெற்ற இரண்டாவது வெளிநாட்டவர் அப்துல் கலாம்.
ஜுலை 25, 2002- ம் ஆண்டில் இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். அந்த நிகழ்வுக்கு, தான் வசித்து வந்த ஏஷியாட் கிராமத்தின் தோட்டக்காரரையும் அழைத்திருந்தார்.
ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட சமயத்தில் அவரின் முடி அலங்காரம் எப்படி இருக்க வேண்டுமென கம்ப்யூட்டரில் வரைந்து அப்துல்கலாமிடம் காட்டிய போது ”முடி அலங்காரத்தை மாற்றும் திட்டம் இல்லை” என்றார்.
நீங்கள் விஞ்ஞானியா? தொழில் நுட்ப அறிஞரா? ஒரு முஸ்லீமா? அல்லது இந்தியனா? என்ற கேள்விக்கு ”முதலில் நான் மனிதன்” என்றார்.
குடியரசுத்தலைவர் மாளிகையில் மத்திய அரசின் உயரதிகாரிகளுக்கு வழங்கும் விருந்தில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வந்த உடைக் கட்டுப்பாடுகளை நீக்கியவர் அப்துல்கலாம்.
குடியரசுத் தலைவராக இருந்த போது தன்னுடைய குடும்பத்தினர் டெல்லியில் ஒரு வாரம் தங்கி இருந்து சுற்றிப்பார்க்க ஆன செலவுத் தொகையான மூன்றரை இலட்சம் ரூபாயைச் செக்காக செலுத்தினார்.
மணிக்கு 1500 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் சுகோய் போர் விமானத்தை ஓட்டிய முதல் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்!
குடியரசுத் தலைவராக பதவி வகித்த ஐந்தாண்டுகளில் 163 இந்திய நகரங்களுக்கும், ஏழு வெளிநாடுகளுக்கும் சென்ற அப்துல்கலாம் அமெரிக்காவுக்கு மட்டும் பயணம் மேற்கொள்ளவில்லை. தன் பதவிக்காலம் முடிந்த பின்னரே அங்கு சென்று வந்தார்.
தன் காலுறைகளை கழற்றுவதற்காக நியமிக்கப்பட்ட பணியாளரை இறுதி வரை அப்துல்கலாம் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை.
இந்திய ஜனாதிபதிகளில் அப்துல்கலாம் மட்டுமே எந்த ஒரு இயக்கத்தையும், அரசியல் கட்சியையும் சேராதவர்.
தன் பதவிக்காலம் முடிந்த போது தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்கள் எதையும் தன்னோடு எடுத்துச் செல்லாமல் அரசாங்கத்திடமே ஒப்படைத்து விட்டார். உடைமைகள் அடங்கிய இரண்டு சிறிய பெட்டி, தன்னுடைய சொந்தப் புத்தகங்கள் நிரம்பிய ஒரு பை ஆகியவற்றை மட்டுமே தன்னோடு எடுத்துச் சென்றார்!
பத்மபூஷன்(1981), பத்ம விபூஷன் (1990), பாரத் ரத்னா (1997) உள்ளிட்ட நாட்டின் உயர் விருதுகளைப் பெற்ற அப்துல்கலாமின் புகழ்மிக்க வாசகம் “கனவு காணுங்கள்”.
ஜூலை 27, 2015 ம் ஆண்டு மேகாலாயா மாநிலத்தின் ஷில்லாங் நகரில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த அப்துல்கலாம் திடீர் உடல் நலக் குறைவால் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிர் இழந்தார். அப்போது அவரின் வயது 84.
அப்துல்கலாமின் நினைவிடம் இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள “பேக்கருப்பு” என்ற இடத்தில் அமைந்துள்ளது. அவர் பிறந்த வீட்டின் முதல் மாடி அவருடைய புத்தகங்கள், அவர் பெற்ற விருதுகள், முக்கிய நிகழ்வுகளில் எடுத்த புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியகம் உள்ளது.
அப்துல்கலாமின் மறைவிற்குப் பின்னர், அவரின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய அரசால் சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. அவரின் பிறந்த தினமான அக்டோபர் 15, மகாராஷ்டிராவின் ”வாசிப்பு நாள்” ஆகவும், தமிழ்நாடு அரசு ”இளைஞர் எழுச்சி நாள்” ஆகவும் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
நன்றி – சுட்டி விகடன்