Sunday, 11 December 2016

புதுகையில் கை குலுக்குவோமா?

சிரங்கு வந்தவன் சும்மா இருக்க மாட்டான்னு சொல்ற கதையா எதையாவது செய்து கொண்டே இருப்பதும் அதுவே கொஞ்ச நாளில் ஒரு வெறுமை உண்ர்வை தருவதும் கல்லூரிக் காலம் தொட்டே என்னோடு பயணித்துக் கொண்டிருக்கும் பழக்கமாகி விட்டது. அப்படியான ஒரு வெறுமை சூழ்ந்த நிலையில் என்னில் அக்கறை கொண்ட நண்பர் ஒருவர் முகநூலுக்கும், மற்ற விசயங்களுக்கும் ஒதுக்கும் நேரத்தை வலைப்பக்கம் (BLOG) எழுதுவதற்கும் பயன்படுத்து என்றார். இருந்தால் தானே எழுதுவதற்கு! கணினி சார்ந்து பெரிதாக ஏதும் தெரியாது என்பதால் அவரிடமே எனக்கென ஒரு வலைப்பக்கம் உருவாக்கித் தாங்க…… எப்படி எழுதனும்னு சொல்லிக் கொடுங்க…...  என்றேன்.

உனக்கானதை நீயே சுயமா வடிவமைத்து எழுது என்றவர் சிலநாட்களுக்குப் பின் அழைத்து வலைப்பக்க வேலை நடக்கிறதா? என்றார்.  காரியம் செய்வதை விட அதைச் செய்யாததற்குக் காரணம் சொல்றது அத்தனை கஷ்டமா என்ன? சட்டென, ”பிரபலமானவர்கள் கூட இப்பொழுது வலைப்பக்கங்களில் எழுதுவதை விரும்புவதில்லை. முகநூல் தான் உடனடி கருத்துப் பரிமாற்றத்துக்கு பயன்படுதுன்னு கவிஞர். மகுடேசுவரன் கூட முகநூலில் ஒருமுறை சொல்லி இருக்கிறார்என்று சொன்னேன்

நண்பரோ, “உன்னை அவரளவுக்கெல்லாம் நினைத்துக் கொள்ளாதே. நீ ஏன் கருத்துப் பரிமாறலுக்குத் தான் வலைப்பக்கம் எழுதப்போறதா நினைக்கிற? உனக்கான விசிட்டிங்கார்டா (VISITING CARD) உன் வலைப்பக்கத்தை உருவாக்கு. இதுவரை நீ எழுதிய விசயங்களை மட்டும் அதில் பதிவு செய். உன்னைப் பற்றி எவரும் அறிய விரும்பினால் அதற்கான இணைய விசிட்டிங்கார்டாக உன் வலைப்பக்கம் இருக்கட்டுமேஎன்றார்.

நம்மளைப் பற்றி நான்கு பேருக்குத் தெரியனும்னா ஏதாவது செஞ்சு தானே ஆக வேண்டி இருக்கு! கணினி மொழி பற்றிய அடிப்படை அரிச்சுவடு கூடத் தெரியாத நிலையில் மூன்று மாதங்களாக இணையத்தில் வாசிக்கக் கிடைத்த தகவல்களோடு கட்டிப்புரண்டு எனக்கான வலைப்பக்கத்தை உருவாக்கினேன். ”ஒருக்கா படிச்சா மறுக்கா தொடவே மாட்டான். அப்படியே நினைவில் வைத்திருப்பான்என சர்ட்டிபிகேட் வாங்கும் அளவுக்கு ஒர்த் இல்லாதவன் என்பதால் மூன்று மாதம் தேவைப்பட்டதில் ஆச்சர்யப் பட ஏதுமில்லை!

வலைப்பக்கத்தை மேம்படுத்தும் ஆர்வக் கோளாறில் எதையோ செய்யப் போக ப்ளாக்கை ப்ளாக் பண்ணிட்டோம்னு கூகுள் கடவுளிடமிருந்து மின்னஞ்சல் வந்துடுச்சு. வடை போச்சேன்னு இரண்டு நாட்கள் உட்கார்ந்திருந்துட்டு தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வாசகத்திற்கு உதாரணமாய் இருக்கும் வலைச்சித்தரை அலைபேசியில் அழைத்து அழாத குறையாய் என் துன்பியலைச் சொன்னேன். நோயாளியிடம் மருத்துவர் சொல்வதைப் போலகவலைப் படாதீங்க. சரி பண்ணிடலாம்எனச் சொல்லி மீண்டும் உயிர் பெற வைத்துத் தந்தார்.

நேரம் வாய்க்கும் போதெல்லாம் வாசிக்கப் போகும் நண்பர்களின் வலைப்பக்கங்களைப் பார்க்கும் போது நம் வலைப்பக்கத்திலும் இப்படியான விசயங்கள் இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றினாலும் சுய பரிசோதணைக்கு மனம் ஒப்பவில்லை. மீண்டும் வலைச்சித்தரின் உதவியை நாடி என் நூல்களை வலைப்பக்கத்தில் அடுக்கி வைத்தேன். அதன் பின் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடியது.

இதை எல்லாம் நாமும் கொஞ்சம் தெரிந்து கொண்டால் நாலு பேருக்குக் கற்றுத் தராவிட்டாலும் வலைப்பக்க வடிவமைப்புப் பற்றி எனக்கும் தெரியும் என சட்டைக் காலரை தூக்கி விட்டுத் திரியலாமே எனத் தோன்றியது. கூடவே, இப்படியான விசயங்களை நேரடியாக யாரேனும் சொல்லித் தந்தால் பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மண்ட் வீக் என்ற கதையாக இல்லாமல் இருக்குமே என நினைத்தேன். நினைக்கிற விசயத்தில் நாம ஒன்னு நினைச்சா அது ஒன்னு நடக்கும் என்பது தான் விதி. அந்த விதியைப் பொய்யாக்கியது புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கம்!

வலைப்பக்கம் தொடங்குவது முதல் பல விசயங்களைக் கற்றுத் தருகிறோம். அதற்கு நுழைவுக் கட்டணம் இல்லைசரியான நேரத்திற்கு பேருந்து நிலையத்திற்கு வந்தால் எங்களின் பேருந்து மூலமே பயிற்சி நடைபெறும் இடத்திற்கு  அழைத்துச் செல்வோம் எழுது பொருட்கள், தேநீர் எல்லாம் நாங்களே தருவோம்இது எங்களின் பங்களிப்பு

உங்களின் பங்களிப்பு பெயரைப் பதிவு செய்து விட்டு 18.12..2016 ல் புதுக்கோட்டைக்கு வந்து விட வேண்டும் என்ற முத்து நிலவன் சாரின் வலைப்பக்க அறிவிப்பை பார்த்ததும் அன்றைய தினத்தை நாள்காட்டியில் குறித்து வைத்து விட்டேன். நீங்கள் குறித்து வைத்திருந்தால் நல்லது. இல்லையென்றால் இன்றே குறித்து வைத்துக் கொண்டு காத்திருங்கள். பதினெட்டு காலையில் புதுகையில் கை குலுக்குவோம்