Saturday, 10 December 2016

திறப்புச் சொற்கள்

கையில் கொஞ்சம் பணம் இருந்தால் போதும். தன்னாலும் தமிழிலக்கியத்துக்கு ஒரு கவிதை நூலைத் தந்து விட முடியும் என்ற நம்பிக்கையின் வீக்கம் சீழ் பிடித்து கவிதைச் சந்தையில் இருந்து வாசகனை ஓட வைத்து விட்டது. கவிதைக்கு வந்த இப்படியான சோதனையும், வேதனையும் மெல்ல மற்ற படைப்பிலக்கியக்க வடிவங்களுக்கும் பரவத் தொடங்கி விட்டன. இந்தச் சூழலில் எந்த சமரசத்திற்குள்ளும் உட்படுத்திக் கொள்ளாமல் படைப்புகளின் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்படும் போதெல்லாம் அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலிப்பது வழக்கமாகி விட்டது. வழக்கொழிய வேண்டிய ஒன்று வழக்கமாகி வரும் சூழலில் விமர்சனங்கள் மட்டுமே படைப்புகளின் மீதான விவாதங்களை கிளர்த்தும் ஒரே வழியாகவும் இருந்து வருகிறது.

”விமர்சனம்” என்ற அந்தப் பொது வழியை விமர்சகனும், படைப்பாளியும் தனதாக்கிக் கொள்ள மல்லுக்கு நிற்கும் போது அவரவர் சார்ந்து மற்றவர்களால் எழுப்பப்படும் பிம்பங்கள் அவர்களின் தீவிரத்திற்கு இன்னும் தீனி போட்டு படைப்பின் மீதான விமர்சனத்தை தன் மீதான விமர்சனமாக படைப்பாளியைப் பார்க்க வைத்து விடுகின்றது. அதன் நீட்சி வன்மமாய், வக்கிரமமாய், மிரட்டல்களாய் புரவி எடுக்கின்றன. இந்தக் குரல்களின் வீச்சில் அந்தப் படைப்பு சார்ந்த உண்மையான மதிப்பீடுகள் பின் தள்ளப்பட்டு நிகழ வேண்டிய ஆக்கப்பூர்வமான மாற்றங்களும், கண்டடைவுகளும் நிகழாமலயே போய் விடுகின்றது.

காலத்தின் கண்ணாடியாய் நின்று சமூகத்தைத் தனக்குள் வாங்கும் படைப்பானது அதன் சமகாலத்தில் வாசிக்கின்ற வாசகனிடம் தாக்கங்களை, தர்க்கங்களை நிகழ்த்த வேண்டும். படைப்பின் மீதான இத்தகைய உரையாடல்களைப் பின் இணைப்பாய் கொண்டிருக்கும் படைப்புகள் மட்டுமே காத்திரமாய் தன்னை அடைகாத்துக் கொண்டு அடுத்த தலைமுறைகளிடம் மீண்டும் சிறகு விரிக்கின்றன. இதை உணராமல், ”எழுத்து என்ற ஒற்றை மந்திரத்தை வைத்து நீ எழும் போதெல்லாம் அதே மந்திரத்தை வைத்து உன்னைத் தட்டுகிறேன் பார்” என படைப்பாளியும், விமர்சகனும் முட்டிக் கொள்வது தமிழ் இலக்கியத்திற்குப் புதிதல்ல என்பதற்காக அதைப் போற்றவும் வேண்டியதில்லை. இதை நன்கு உணர்ந்திருக்கும் வாசகன் படைப்பு சாராது எழுதப்படுகின்ற விமர்சனங்களின் மீது விவாதிக்க மறுத்து அதை வேடிக்கை பார்த்துச் செல்கிறான்.

விமர்சனம் என்பது, ”விமர்சகர்களின் முன்னெடுப்பில் வாசகர்களால் கட்டமைக்கப்படும் பேரியக்கம்”. அந்தப் பேரியக்கத்தைத் தன் படைப்பின் வழியாக படைப்பாளி உருவாக்குவது அத்தனை எளிய காரியமல்ல! அதற்குத் திரண்ட அனுபவ அறிவும், வாழ்க்கையின் கூறுகளையும், சமூகத்தின் அக, புறவயங்களையும் தனக்கான பார்வையில்  உள்முகமாகப் பார்க்கப் பழகுவதும் படைப்பாளிக்கு எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அதை வாசகனுக்குக் கடத்துவதும்! தான் அடைந்த அதே மனநிலையை வாசகனுக்குச் சொல்லி அவன் மனநிலையை அந்தப் புள்ளியில் இருந்து விரிவாக்கித் தருவதில் ஒரு படைப்பாளி தோற்கும் போது அந்தப் படைப்பும் தோற்றுப் போய் விடுகிறது. இந்தத் தோல்வியிலிருந்து படைப்பை மீட்க வைப்பதற்காகத் தான் ஒவ்வொரு படைப்பிற்குமென சில அடிப்படைக் கூறுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

சொல்லாடல்களும், அதைக் கையாளும் முறைகளும் காலம் தோறும் மாறி வந்தாலும் அடிப்படைக் கூறுகள் நிலையானவை. இதிலிருந்து விலகும் படைப்புகள் தன் அடையாளங்களை இழக்க ஆரம்பித்து விடுகின்றன. புதுமை, நவீனம் என்ற அடிக்கோட்டின் கீழ் படைக்கப்படும் படைப்புகளில் அதற்குரிய அடிப்படைக் கூறுகளின் இழப்பைச் சுட்டிக்காட்டவும், அதன் மீதான படைப்பாளியின் அலட்சியத்தை கவனிக்க வைக்கவும் ”விமர்சனம்” என்ற மதிப்பீட்டால் மட்டுமே முடியும். முடிகிறது. இந்த மதிப்பீட்டை விமர்சகன் தன் வாசிப்பனுபவத்தின் வழியாக நிகழ்த்தாமல் தன்னளவில் நிகழ்த்த ஆரம்பிக்கும் போது அந்த விமர்சனத்தின் மீது விமர்சனம் பிறக்கிறது. படைப்பாளிகளை குழுக்களாக வகைப்படுத்தியதில் இப்படிப் படைப்பியல் சாராத அக, புறவியல் காரணங்களை வைத்து தன்னளவில் முன் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முக்கிய பங்குண்டு.

தன் படைப்பின் மீதான பார்வையாளனாக மட்டும் இருக்காமல் பங்கேற்பாளனாகவும் வாசகனை உள் நுழையச் செய்வதற்கு மெனக்கெடும் படைப்பாளி அதற்குத் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்வதும் முக்கியம். இந்த தகுதி நிலைக்கான வழிகளை, யுக்திகளை, கண்டடைவுகளை விமர்சனம் மட்டுமே முன் மொழிகிறது. விமர்சகனின் முன் மொழிபை அப்படியே படைப்பாளி வழி மொழிய வேண்டியதில்லை என்ற போதும் அதன் அசலுக்குள் தன்னை உரைத்துப் பார்க்க மறுக்கிறான்.  விமர்சகன் படைப்பு சார்ந்து முன் வைக்கும் விசயங்களை தன் அறியாமையின் வெளிப்பாடாக நினைக்கிறான். இந்த மனநிலையின் மையத்தில் நிகழும் நுண் அரசியல் படைப்பின் வழி களமாட வேண்டிய உரையாடலை மடை மாற்றி படைப்பாளியின் வழி நிகழ்த்த ஆரம்பித்து விடுகிறது.

ஆக்கப்பூர்வமான விமர்சனம் படைப்பாளியைத் தீண்டுவதில்லை. மாறாக, அது அறிவுப்பாய்ச்சலை உருவாக்கிறது. படைப்பு சார்ந்த விமர்சனம் என்பது - 

படைப்பில் (கதையோ, நாவலோ) நிகழ்ந்து இருக்கின்ற கட்டமைவு முறைகள் குறித்து முந்தைய படைப்புகளின் தனித்தன்மைகள் அல்லது காத்திரமான வாசிப்பு அனுபவங்கள் மூலமாக தொடர் விவாதங்களைக் கிளர்த்த முனையும்.

படைப்பானது சமகாலத்தில் நிகழ்த்தி இருக்க வேண்டிய தாக்கத்தைப் பேசும். அல்லது நிகழ்த்திய தாக்கத்தை வாசகனுக்கு அடையாளம் காட்டும்.

படைப்பில் துருத்தி நிற்கும் முகங்களை (கதாபாத்திரங்கள்) வாசகனுக்கு அடையாளம் காட்டி விட்டு அதன் அவசியம், அவசியமின்மை குறித்த வாசகனின் மனநிலையை வெளிக் கொணர வைக்கும்.

படைப்பாளி தன் படைப்பின் மூலமாக அடைந்திருக்க வேண்டிய விசயங்களை, தவற விட்ட நிலைகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக படைப்பாளிக்கும் வாசகனுக்குமான நேரடி விவாதத்திற்கான வாசலைத் திறந்து வைக்கும்.

படைப்பின் உள்ளடக்கத்தை உடைத்தெறியாத வகையில் அதன் களநிலைகளை ஆராயும். அதில் படைப்பாளி பிறழ்ந்த அல்லது அவனால் பிறழவைக்கப்பட்ட தகவல்களை ஆதாரப்பூர்வமாக தரவுகளின் சான்றோடு முன் வைக்கும்.

படைப்பிற்கே உரிய அடிப்படைக் கூறுகளை தன் அலட்சியத்தால் படைப்பாளி புறந்தள்ளியதைக் கோடிடும். வரைமுறைகள் காலந்தோறும் மாறினாலும் அடிப்படைக் கூறுகள் மாறுவதில்லை என்பதை நிறுவ முனையும்.

”படைப்பின் உள்ளடக்கம் என்பது படைப்பாளியின் திரண்ட அனுபவத்தின் வெளிப்பாடே அன்றி விமர்சகனின் அனுபவ வெளிப்பாடல்ல” என்ற விமர்சன வரையறையை மீறாது படைப்பின் உள்ளடக்கதின் மீதான மாற்றுக் கருத்துகளை தன்னளவில் முன் வைக்குமே ஒழிய அதை விமர்சனம் ஒரு போதும் பகடி செய்யாது.

படைப்பில் சம்பந்தப்பட்ட படைப்பாளி நிகழ்த்திக் காட்டி இருக்கும் வாழ்வியலின் சகல கூர்முனைகளையும் கொண்டாடும் அதேநேரம் அதற்குள் அவன் தன்னைப் பிரதிபலிக்க கையாண்ட சூட்சுமங்களைக் கடை விரிக்கும்.

ஆக்கப்பூர்வமான விமர்சனம் வாசகனை தன்னுள் இழுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட படைப்பு குறித்து அவன் கொண்டிருக்கும் முன் முடிபுகளை, பொது அவதானிப்புகளை உடைத்து மறு கட்டமைவு செய்ய உதவும்.

தேர்ந்த விமர்சனம் என்பது வாசகனின் வாசிப்பனுபவத்தை இன்னும் சுவராசியமானதாக்கித் தரும்.

இவைகள் இன்றி சுய வன்மத்தோடு விமர்சகன் என்ற போர்வைக்குள் அமர்ந்து கொண்டு படைப்பாளியின் அந்தரங்கத்தை கட்டவிழ்த்து விட நினைக்கும் விமர்சனங்களும் உண்டு. அப்படியான விமர்சனங்களையும், விமர்சகர்களையும் சாதாரண வாசகனால் கூட எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அப்படிக் கண்டு கொள்ளும் பட்சத்தில் அவனே அதைப் புறந்தள்ளி விடுவான்.

காலம் கடந்தும் ஒரு படைப்பை நிலை கொள்ளச் செய்ய வேண்டுமானால் அந்தப் படைபின் மீது விமர்சனம் என்ற ”கட்டாயச் சடங்கு” நிகழ வேண்டியது அவசியம். இந்தக் கட்டாயச் சடங்கைப் பல நேரங்களில் ”சம்பிரதாயச் சடங்கு” போல நிகழ்த்திப் போவதற்கு அவரவர் அளவில் பல காரணங்கள் இருக்கலாம். அந்தக் காரணங்கள் ஆரோக்கியமான வளர்ச்சியைப் படைப்புக்கு மட்டுமல்ல  படைப்பாளிக்கும் தராது. 

”உற்சாகப்படுத்துகிறேன்”, “அடையாளப்படுத்துகிறேன்” எனச் சொல்லிக் கொண்டு ஒரு படைப்பாளியை போலி பாராட்டுரைகளாலும், சம்பிரதாய வழக்கங்களாலும் தட்டித் தட்டித் தூங்க வைப்பதை விட்டு அவனைத் தட்டி எழுப்பி கொஞ்ச தூரமேனும் ஓட வைக்கலாம். குறைந்த பட்சம் அவன் தூங்கிய இடத்தில் இருந்து நகர்ந்து படுக்க வைக்கவாது செய்யலாம். இந்த நகர்வு மட்டுமே இன்றைய தமிழ் எழுத்துலகத்திற்கான தேவை. அந்தத் தேவையை எந்த உள்நோக்கமும், காழ்ப்புணர்வுமின்றி விமர்சகன் செய்யும் போது அதற்கு எதிராக உணர்ச்சி வசத்தில் சாதி, பாலினம், சமூகம் ஆகியவைகளின் மேல் நின்று எழும் குரல்கள் நாம் அடிமை வம்ச மனநிலையில் இருந்து மீளாததையே காட்டுகிறது.

அறுவை சிகிச்சைக்குப் பயந்து ஆபரேசனைத் தள்ளி வைப்பதாலும், அதற்கான கருவிகளை மறைத்து வைப்பதாலும் நோயின் தீவிரம் அதிகமாகுமே தவிர குறையானது. எனவே ஆக்கப்பூர்வமான விமர்சனத்துக்கு எப்பொழுது ஒரு படைப்பாளி தன் படைப்பை எந்த முகாந்திரமுமின்றித் தரத் தயாராக இருக்கிறானோ அப்பொழுது தான் தமிழ் இலக்கியத்திற்கு அவனது பங்களிப்பும் சரியானதாய் இருக்கும்.

நன்றி : தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ்