Friday, 23 April 2021

எனக்கு வாசிப்பு எதைத் தந்தது ?

இன்றைய புத்தக தினத்தில் ஒரு படைப்பாளியாய் எங்கிருந்து கிளம்பி இருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். பள்ளி, கல்லூரி நாட்களில் பாடப் புத்தகங்களே  வாழ்க்கையாக இருந்தது. யாரும் நுழைய அஞ்சும் கல்லூரி நூலகத்திற்குச் சென்று வைரமுத்து, மு. மேத்தா, கவிக்கோ உள்ளிட்டவர்களின் புதுக்கவிதைத்  தொகுப்புகளை எடுத்து வந்து வாசித்து அப்படியாக சிலவற்றை எழுதிப் பார்த்து புழங்காகிதப் பட்டுக் கொள்வதுண்டு. அந்த சமயத்தில் வாசித்த ஒரு கவிதை புத்தகம் ஒரு தூண்டலைத் தர நாமும் கவிதை எழுதியே தீர வேண்டும் என்ற வெறியோ, வேட்கையோ அடங்க மறுத்து பொங்கி நின்றது. அடுத்த ஒரு மாதத்திற்குள் எழுதி “விந்தை மனிதன்  என காந்தியின் அட்டைப் படத்தோடு ஒரு தொகுப்பைக் கொண்டு வந்து கல்லூரி நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கவிஞனாக முடி சூட்டிக் கொண்டேன். 1999 ல் இந்த அலப்பறை எல்லாம் முடிந்தும் இன்னும் கவிதை எழுதுவதும், புரிந்து கொள்வதும் பிடிபடவில்லை.

Thursday, 22 April 2021

காம்கேர் C.E.O. உடன் ஒரு நேர்காணல்

COMPCARE SOFTWARE நிறுவனத்தின் C.E.O. உயர்திரு. காம்கேர். புவனேஸ்வரி அவர்கள் I.T. துறையில் 28 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். தன் தொழில்நுட்பத் துறை சார்ந்த நூல்கள் உள்பட பலதரப்பட்ட துறைகள் சார்ந்து 150 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பல நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடங்களாக உள்ளன. 

தன் கிரியா ஊக்கிகளை நம்மைப் போன்றவர்களும் இயங்குவதற்காக தன்னுடைய எழுத்து, பேச்சுகளின் வழியாக தரக்கூடியவர். நாள் தவறாது, நேரம் தவறாது 2019 ம் ஆண்டிலிருந்து இரண்டாண்டிற்கும் மேலாக தன் முகநூல் பக்கத்தில் அவர் எழுதி வரும் பத்திகளை வாசிக்கும் போது மனதில் சில கேள்விகள் எழும். அவைகளைத் தொகுத்து அவருக்கு அனுப்பி இருந்தேன். சில சமயங்களில் கேள்வியை விட அதற்காகச் சொல்லப்படும் பதிலால் அந்தக் கேள்வி அர்த்தமுள்ளதாகவும், அடர்த்தியானதாகவும் மாறிவிடும். அப்படி தனது பதில்களால் என் கேள்விகளை தனித்துக் காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். 

என் கேள்விகளை அவர் நேர்காணல் போலக் கருதி மிக அழகாக தொகுத்து பதில் கொடுத்திருந்தார். தனக்குக் கிடைத்த அனுபவங்கள், தான் எதிர்கொண்ட, பார்த்த நிகழ்வுகளின் வழியாகவே அமையும் அவரின் பதில்களிலிருந்து நம் அன்றாட தேவைக்கான ஆக்சிஜனைப் பெற முடியும். நான் பெற்றிருக்கிறேன். அவரிடம் நான் கேட்டிருந்த கேள்விகள் - 

Tuesday, 20 April 2021

தமிழகப் பாளையங்களின் வரலாறு

[தினமணி கலாரசிகனில்  "தமிழகப் பாளையங்களின் வரலாறுநூலுக்கான  அறிமுகமும் - விமர்சனமும்]

தமிழக வரலாற்றில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதது பாளையக்காரர்களின் வரலாறு. அவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களைப் போல அரசர்கள் அல்லர். நாயக்கர்களையும், மராட்டிய சரபோஜிகளையும் போல மன்னர்கள் அல்லர். மத வெறியால் நாடு பிடித்த நவாபுகளும் அல்லர். ஜமீந்தார்களை விட சற்று மேலான ஆளுமை உள்ள குறுநிலக்கிழார்கள். அவ்வளவே.

கிருஷ்ண தேவராயரின் விஜயநகரப் பேரரசால் உருவாக்கப்பட்டவர்கள் தான் பாளையக்காரர்கள். “பாலாறா” என்கிற தெலுங்கு சொல்லில் இருந்து “பாளையம்” என்கிற பெயர் உருவானது. “பாலாறா” என்றால் ராணுவ முகாம் என்று பொருள். அதை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். நாயக்கர் ஆட்சிக்கு முன்பே தமிழ்கத்தில் பாளையங்கள் சிற்றரசர்களுக்கு உரிய அதிகாரத்துடன் இருந்தன என்றும் சிலர் கூறுகிறார்கள்.

“ஈரோடு மாவட்ட வரலாறு” நூலில் இடம் பெற்றுள்ள  அம்மைய நாயக்கனூர் ஜமீந்தார் வம்சாவளி ஆவணப்பதிவு தரும் செய்தி இது – “தளவாய் அரியநாத முதலியார் அவர்களும், விசுவநாத நாயக்கரும் இருவருமாக மதுராபுரிக்கு வந்து பாண்டியன் முன்னர் போர் புரிந்த கோட்டையைச் சுற்றி விசாலமாய் 72 கொத்தளங்களைக் கோட்டை போட்டு 72 கொத்தளத்துக்கும் 72 பாளையக்காரர்களையும் நேர்முகம் செய்கிறது”.

Sunday, 11 April 2021

கபடவேடதாரி – விமர்சனப் போட்டி – 1

எழுத்தாளர் பா. ராகவன் எழுதிக் கொண்டிருக்கும் புதிய நாவல் “கபடவேடதாரி”.  இதில் ஒன்றும் புதுமை இல்லை. வாசகர்களுக்காக அறிவித்த போட்டி தான் புதுமை! வழமைக்கு மாறானது. நாவல் மொத்தம் 50 அத்தியாயங்கள். ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் BYNGE APP ல் வெளிவரும் அத்தியாயத்தை படித்து ஒவ்வொன்றிற்கும் ஒரு விமர்சனம் எழுத வேண்டும். 50 அத்தியாயம் 50 விமர்சனம் என்பது விதிமுறை. ஒரு அத்தியாயத்திற்கு விமர்சனம் இல்லை என்றாலும் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் அடைய வேண்டியிருக்கும். 

கொஞ்சம் சவாலானது என்ற போதும் பா.ரா. வின் எழுத்து நடையும், முதலிரண்டு அத்தியாயத்தின் நகர்வும் நாமும் ஒரு அட்டண்டென்ஸ் கொடுத்தால் என்ன? என்று நினைக்க வைத்தது. தவிர, ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொண்டு விட்டு முழு ஓய்வில் இருக்க வேண்டியிருந்ததால் முடியும் எனத் தோன்றியது. தோன்றியதை செய்து விடுவோமே என ஆரம்பித்து விட்டேன். வடிவேலு சொல்ற மாதிரி “ஓப்பனிங் எல்லாம் நல்லாத் தான் இருக்கு. உனக்கிட்ட ஃபினிசிங் சரியில்லையப்பாஎன்பது போல ஆகாமல் இருந்தாலே பெரிய விசயம் எனத் தோன்றுகிறது.

அத்தியாயம் – 1 (நான் ஒரு சூனியன்)

ஒரு பூரணத்தில் இருந்து இன்னொரு பூரணம் பிறப்பதாய் சொல்கிறது கீதை. அந்தப் பூரணத்தில் இருந்து பூரணத்தைப் பிரித்தால் பிறப்பவன் நான் என சூனியனைச் சுய அறிமுகம் செய்கிறார் பா. ரா. அந்த அசத்தல் அறிமுக வரிகளின் ஊடாக அவர்களின் உலகத்திற்குள் நம்மையும் அழைத்துச் செல்கிறார். அந்த உலகில் சிறை வைக்கப்படும் முறை, பறக்கும் தட்டு, விச நாக பற்கள், ஒளிச்சவரம், தண்டனை விதிக்கப்படும் விதம் பற்றிய விவரணைகளை வாசித்துக் கடக்கும் போதே அது நம் மனதினுள் சித்திரமாய் விரிவதை தவிர்க்க முடியவில்லை. காமிக்ஸ் நூல்கள் தூரிகையின் சலன ஓவியமாய் காட்டுவதை தன் சொற்களால் சித்திரமாக்கி விடுகிறார்.