எழுத்தாளர் பா. ராகவன் எழுதிக் கொண்டிருக்கும் புதிய நாவல் “கபடவேடதாரி”. இதில் ஒன்றும் புதுமை இல்லை. வாசகர்களுக்காக அறிவித்த போட்டி தான் புதுமை! வழமைக்கு மாறானது. நாவல் மொத்தம் 50 அத்தியாயங்கள். ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் BYNGE APP ல் வெளிவரும் அத்தியாயத்தை படித்து ஒவ்வொன்றிற்கும் ஒரு விமர்சனம் எழுத வேண்டும். 50 அத்தியாயம் 50 விமர்சனம் என்பது விதிமுறை. ஒரு அத்தியாயத்திற்கு விமர்சனம் இல்லை என்றாலும் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் அடைய வேண்டியிருக்கும்.
கொஞ்சம் சவாலானது என்ற போதும் பா.ரா. வின் எழுத்து நடையும், முதலிரண்டு அத்தியாயத்தின் நகர்வும் நாமும் ஒரு அட்டண்டென்ஸ் கொடுத்தால் என்ன? என்று நினைக்க வைத்தது. தவிர, ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொண்டு விட்டு முழு ஓய்வில் இருக்க வேண்டியிருந்ததால் முடியும் எனத் தோன்றியது. தோன்றியதை செய்து விடுவோமே என ஆரம்பித்து விட்டேன். வடிவேலு சொல்ற மாதிரி “ஓப்பனிங் எல்லாம் நல்லாத் தான் இருக்கு. உனக்கிட்ட ஃபினிசிங் சரியில்லையப்பா” என்பது போல ஆகாமல் இருந்தாலே பெரிய விசயம் எனத் தோன்றுகிறது.
அத்தியாயம் – 1 (நான் ஒரு சூனியன்)
ஒரு குழுவானது அழிப்பு நடவடிக்கைகளுக்காக ஒருவரைத் தயார் செய்யும் போது அதிலிருந்து அவர் விலகவோ, பின் வாங்காமலோ இருப்பதற்காக முழுமையான தயாரிப்புக்கு மனதளவில் உருவாக்கப்படுவர். சூனிய உலகத்துக்கும் அது பொருந்தும் போல! துவாரயுகத்தில் யாதவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்ட வரலாறு வழியாக சூனியனும் உருவாக்கப்படுகிறான்.
தனக்குத் தரப்பட்ட இலக்கினை அடையும் முயற்சியில் சூனியன் ஏன் துரோகியாக்கப்பட்டான்? அந்த துரோகத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவன், “ஒரே இலக்கிற்காக அனுப்பப்பட்ட இருவரில் ஒருவர் செயல் மட்டும் நியாயமாகி அதற்காக அவர் நியாய கோமானாகவும் ஆகிறார். இன்னொருவர் குற்றவாளியாக்கப்படுகிறார் என்றால் அதில் என்ன நியாயம் இருக்கிறது?” எனக் கேட்கும் கேள்விக்கு யூதாஸிடம் பதில் இல்லாதது போலவே நம்மிடமும் இல்லை. ஒருவேளை அந்த கேள்விக்கான முடிச்சில் தான் சூனியன் நம்மை நகர்த்திப் போக இருக்கிறானோ என்னவோ? காத்திருப்போம்.
No comments:
Post a Comment