Wednesday, 12 February 2014

பாராட்டின் பலம்

என் முதல் நூலை வெளியீடு செய்ததோடு மட்டுமில்லாமல் என்னை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தியவரும், வணிகரீதியில் என் முதல் பதிப்பாளருமான திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் மணிவிழா சிறப்பிதழலில் அன்பின் அடையாளமாய் நான் எழுதிய கட்டுரை.

லேனா தமிழ்வாணன் சாரை முதன் முதலில் சந்தித்தது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். ஒரே நேரத்தில் தொண்டையை அடைக்கும் துக்கமும், பீறிட்டு வெளிக் கிளம்பும் சந்தோசமும் கலந்து ஒரு காக்டெயிலாய் எனக்குள் அந்த சந்திப்பு ததும்பி நிற்கிறது. அதனால் தான் ஆண்டுகள் பலவாகியும் அதன் ஈரம் இன்னும் காயாமல் என்னுள் இருக்கிறது.

என்னுடைய நான்கு நூல்களை மணிமேகலைப்பிரசுரம் வெளியிட்டிருந்த சூழலில் துபாயில் தமிழ் அமைப்பு ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த லேனா சாரை சந்திக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது. ரவி தமிழ்வாணன் சார் தான் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அதோடு, என்இஸ்லாம் கற்றுத்தரும் வாழ்வியல்என்ற நூலை லேனாசாரின் கரங்களால் விழா மேடையில் வெளியிட ஏற்பாடும் செய்திருந்தார். அப்பொழுது நான் துபாயில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளஅல்- அய்ன்என்ற இடத்தில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.

விழா நாளன்று என் நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு பெருமையோடு விழாவிற்குச் சென்றேன். மேடையில் என்நூல் வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்டது. என்னை மேடைக்கு வருமாறு அழைத்தார்கள். ஆனால், நான் மேடைக்கு செல்வதற்குள் மேடையில் ஒரு சலசலப்பு. அரங்கிற்கு வரவேண்டிய என் புத்தகப்பார்சலை விழாக்குழு நண்பர்கள் தவறுதலாக அறையிலேயே வைத்து விட்டு வந்துவிட்டார்கள். புத்தகம் இல்லாமல் நூல் வெளியீட்டை எப்படி செய்வது? நான் மிகுந்த ஏமாற்றத்தோடு மேடையை விட்டு இறங்கினேன்.

 

விழா முடிந்ததும் லேனா சாரை சந்தித்தேன். என் தோள் தொட்டு பேசிய லேனா சார், “கவலை பட வேண்டாம். உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது. இதுவரை வெளிவந்த நூல்கள் மூன்றை முப்பதாக்குங்கள். அதற்காக தொடர்ந்து எழுதுங்கள் என்றார். அந்த நேரத்தில் அவர் தட்டிக் கொடுத்துச் சொன்ன இந்த வரிகள் சுற்றி நின்ற விழா அமைப்பாளர்கள், முக்கிய பிரமுகர்களின் பார்வையை என் மேல் விழ வைத்தது.

சக ஊழியனாய், என் நண்பர்களால் அறியப்பட்டிருந்த நான் அதன்பின் புத்தகங்கள் எழுதுபவனாய் அடையாளப்படுத்தப்பட்டேன். அந்தப் பணியையும், நாட்டையும் விட்டு வந்து எட்டு ஆண்டுகளாகியும் இன்றும் என் பெயர் அங்குள்ள நண்பர்களால் புத்தகம் எழுதுபவனாகத் தான் அடையாளப் படுத்தப்பட்டு வருகிறது!

அன்று லேனா சார் என்னை ஊற்சாகப்படுத்தும் விதமாய் சொன்ன வார்த்தைகள், அந்த வார்த்தைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற அடையாளம் என்னை தொடர்ந்து எழுத வைத்தது

இன்று இருபத்தி மூன்று நூல்களை தமிழகத்தின் முண்ணனி பதிப்பகங்கள் வழி என்னால் எழுதவும், தொடர்ந்து வெளியீட்டிற்காக பதிப்பகங்களுக்கு நூல்களைத் தரவும் முடிகிறதென்றால் அதற்கு லேனா சாரும், அவர் சொன்ன அந்த உற்சாக வார்த்தைகளும் தான் காரணம் என நினைக்கிறேன். அந்நாளின் இனிய நிகழ்வை இந்த மணிவிழா மலரில் பதிவு செய்து லேனா சாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

நன்றிநம்பிக்கை வாசல்.