Wednesday, 26 February 2014

விளைநிலம்

(சிங்கப்பூரில் இயங்கும் கவிமாலை என்ற அமைப்பு நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்பு பரிசுக்கு தேர்வான கவிதை )

 

 விளைந்த நிலமாய் - விளையும் நிலமாய்

இருப்பவைகளை நாகரீக வாழ்வுக்காய்

விலை நிலமாய் மாற்றி அமைத்தோம்.

 

சர்ப்பத்தின் புணர்வுபோல

அடி பெருத்து நுனி சிறுத்த கல்மரத்தை

விளைநிலம் தோறும் நட்டு வைத்தோம்.

 

முப்போகம் விளைய வைத்து

உணவிட்டவனின் தற்கொலைக்கு

கணிணியில் கையறு நிலை பாடினோம்.

 

ஏட்டுப்படிப்பு போதுமென நினைத்த நாம்

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதை

ஏன் மறந்து போனோம்?

 

கண்ணை விற்று சித்திரம் வாங்கும் உண்மையை

கையூட்டிற்காய் பணியை இழக்கும் அபாயத்தை

எப்பொழுது உணரப் போகின்றோம்?

 

கழனிப்பானையவும் களத்து மேட்டையும்

தொலைத்த அவலத்தை

கல்லையும் மண்ணையும் தின்றா போக்க முடியும்?

 

இனி ஒரு விதி செய்து மாற்ற முடியாவிட்டாலும்

இனி ஒரு விளை நிலத்தையும்

விலை நிலமாய் - மனை நிலமாய் மாற்றாதிருப்போமே!

 

நன்றிவல்லமை