Friday, 4 March 2016

இராமர் நீராடிய சேதுதீர்த்தம்

இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் கட்டும் வேலையில் அனுமனும், மற்றவர்களும் ஈடுபட்டிருக்க பொங்கி வரும் கடல் அலைகளும், அதன் சீற்றமும் அதற்குப் பெரும் தடையாக இருந்தன. அதனால் இராமர் கடலரசனிடம் கடல் அலைகளையும், சீற்றத்தையும் அடக்கிக் கொள்ளும்படிக் கூற அவனோ பதில் ஏதும் சொல்லாமலும், தன் சீற்றத்தை அடக்கிக் கொள்ளாமலும் இருந்தான். இதனால் கோபம் கொண்ட இராமர் தன்னுடைய அம்பை எய்தி கடலையே வற்றிவிடச் செய்வதாகக் கூறினார். இதைக் கேட்டதும் கடலில் இருந்து எழுந்த கடலரசன் இராமரை வணங்கி, “தங்களின் பாதம் பட்ட இந்திய நாட்டின் எத்தனையோ நதிகள் புனிதமாகி விட்டன. அந்தப் புண்ணிய நதிகள் எல்லாம் இந்தக் கடலில் தான் கலந்து இருக்கின்றன. அப்படிப்பட்ட இந்தப் புண்ணியக் கடலை உங்களால் வற்றி விடச் செய்ய முடியாதுஎனக் கூறியதோடு தன் அலைகளையும், அதன் சீற்றத்தையும் அடக்கிக் கொண்டான். அதனால் தான் இராமரின் பாதம் பட்ட நதிகளில் நீராடினால் புண்ணியம் என்பதால் அவர் பாலம் அமைக்க வந்த இராமேஸ்வரம், தனுஷ்கோடி, சேதுக்கரை, தேவிபட்டிணம் போன்ற இடங்களில் உள்ள தீர்த்தங்களில் மக்கள் நீராடுகின்றனர். மற்ற தீர்த்தங்களுக்கெல்லாம் இல்லாத ஒரு சிறப்பு தனுஷ்கோடி சேதுதீர்த்தத்திற்கு உண்டு. இலங்கையிலிருந்து இராவணவதம் முடிந்து திரும்பிய  இராமர் இத்தீர்த்தத்தில் தான் நீராடினார். இதுதவிர, சேது புராணமும், தேவையுலாவும் 24 பெரிய நீராடும் துறைகளுள் ஒன்றாக இச்சேதுதீர்த்தத்தை குறிப்பிடுகின்றன.

வேட்டையாட காட்டிற்குச் சென்ற தர்மகுப்தன் என்ற அரசன் இரவு நேரமாகி விட்டதால் விலங்குகளுக்கு அஞ்சி ஒரு மரத்தில் ஏறி இருந்து கொண்டான். அச்சமயத்தில் ஒரு சிங்கம் கரடியைத் துரத்திக் கொண்டு வர கரடியும் மரத்தின் மீது ஏறிக் கொண்டது. அங்கு அரசனைக் கண்ட கரடி, “அரசனே! பயப்படாதே. முன்னிரவில் கவலைப்படாமல் நீ தூங்கு. நான் காவல் காக்கின்றேன். பின்னிரவில் நான் தூங்கும் போது நீ காவல் காக்கலாம்என்றது. கரடியின் யோசனைக்கு அரசனும் ஒப்புக் கொண்டான். அரசன் தூங்க ஆரம்பித்ததும் தரையில் நின்ற சிங்கம் கரடியிடம், “அவனைக் கீழே தள்ளி விட்டு விட்டு நீ பிழைத்துக் கொள்என்றது. கரடியோ, “நம்பியவனை ஏமாற்றுவது பாவம்எனச் சொல்லி மறுத்து விட்டது. முன்னிரவு நேரம் முடிந்து அரசன் விழித்ததும் கரடி தூங்கியது. தரையில் நின்ற சிங்கம் கரடியிடம் சொன்னதையே அரசனிடம் கூறியது. உடனே அரசன் கரடியை கீழே தள்ள அது விழாமல் ஒரு மரக்கிளையை கெட்டியாக பிடித்துக் கொண்டது. தன்னை ஏமாற்றத் துணிந்த அந்த அரசனிடம் கரடி, “அரசனே! நான் கரடி உருவில் வந்த தியானநிஷ்டன் என்ற முனிவன். கீழே நிற்கின்ற சிங்கமோ முன்பு யட்சனாய் இருந்தது. சொன்னபடி நடந்து கொள்ளாமல் நீ துரோகம் செய்து விட்டாய். அதனால் உனக்குப் பித்துப் பிடிக்கட்டும்என சாபம் கொடுத்தது. பித்துப் பிடித்த அரசன் சித்தம் கலங்கி பைத்தியமானான். அதன்பின் ஜைமினி என்ற முனிவரின் சொல்படி இச்சேது தீர்த்தத்தத்தில் நீராடி சித்த பிரமை நீங்கினான் என்று புராணக் கதைகளிலும்

மகாபாரதப்போரில் துரோணாச்சாரியாரை பாண்டவர்கள் தந்திரமாகக் கொன்றதோடு, பீமன் துரியோதனணை கதாயுத நெறிமுறைகளுக்கு மாறாக நாபிக்குக் கீழே அடித்து விழ்த்தினான். இதனால் கோபம் கொண்ட துரோணாச்சாரியாரின் மகன் அசுவத்தாமன் பாண்டவர்களை வஞ்சம் தீர்க்க முடிவு செய்தான். பதினெட்டாம் நாள் யுத்தம் முடிந்த இரவில் பாண்டவர்களின் பாசறைக்குள் புகுந்து அங்கு உறங்கிக் கொண்டிருந்த இளம் பாண்டவர்களை பாண்டவர்கள் என நினைத்துக் கழுத்தை அறுத்துக் கொன்றான். அவர்களோடு உறக்கத்தில் இருந்த சிகண்டி, திட்டதுய்மன் ஆகியோரையும் கொன்றான். அதோடு நில்லாமல் அபிமன்யுவின் குழந்தையாக உத்தரையின் வயிற்றில் வளரும் கருவை அழிக்க தர்ப்பைப் புல்லை மந்திரித்து அனுப்பினான்.

பாவங்களிலேயே பெரிய பாவமாக கருதப்படும் கருவிலிருக்கும் குழந்தையை அழிக்க முயல்வது, உறங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்வது ஆகிய பாவங்களைச் செய்த அசுவத்தாமன் இச்சேது தீர்த்தத்தில் நீராடி தன் பாவத்தைப் போக்கிக் கொண்டான் என்று இதிகாசங்களிலும்

 

புயலுக்குப் பிந்தைய தனுஷ் கோடியின் எச்சங்கள்

காசியிலும், சிதம்பரத்திலும் பத்து மாதம் தங்கிய பலனையும், நைமி சாரண்யம், திருப்பதி, ஸ்ரீபர்வதம், மதுரை, திருவரங்கம், திருவனைக்கால், கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருவாரூர், திருவெண்காடு, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்களத்தி ஆகிய இயங்களில் ஒரு வருடம் தங்கிய பலனையும் தனுஷ்கோடியில் உள்ள இத்தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வணங்கி மூன்றே நாளில் பெறலாம் என்றும் இச்சேது தீர்த்தத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது.

இவைதவிர, இத்தீர்த்தத்திற்கு வேறு ஒரு சிறப்பான மருத்துவ குணமும் உண்டு. மலைகள், காடுகள், சிகரங்கள், பள்ளத்தாக்குகள் வழியே பாய்ந்து வருகின்ற நதிகள் அங்கு விளைந்து, விரிந்து கிடக்கின்ற பல அபூர்வமான, ஆற்றல் வாய்ந்த, மருத்துவ குணமிக்க மூலிகைகளையும், செடி, கொடிகளையும் ஆரத்தழுவி அள்ளி வருகின்றன. அப்படி அள்ளி வருகின்ற நதிகள் இறுதியில் கடலில் வந்து சங்கமமாகும் போது அதில் உள்ள மூலிகைகளின் உயிர்சத்துகள் கடலின் அடியில் உறைந்து விடுகின்றன. “மகோதயம்எனப்படும் அமாவாசையன்றும், “அர்த்தோயம்எனப்படும் பெளர்ணமியன்றும், கிரகணங்கள் ஏற்படும் காலத்திலும் கடலின் நீரோட்டம் அதிகமாகும் போது அதன் வேகத்தால் சுழற்சி ஏற்பட்டு உறைந்து கிடக்கக்கூடிய மூலிகைகளின் உயிர்ச்சத்துகள் மேல்நோக்கி வருகின்றன. அதனால் தான் உயிர்சத்துக்களின் உறைவிடமாய் திகழும் இருபெரும் கடல்களான வங்காள விரிகுடாவும், இந்து மகாசமுத்திரமும் கூடும் இடமான தனுஷ்கோடியில் இந்நாட்களில் புனித நீராடுவது விசேசமானதாக கருதப்படுகிறது.

பொதுவாகத் தீர்த்தங்களில் நீராடுவதற்கென சில நியதிகள் உண்டு. ஆனால், அத்தகைய நியதிகள் சேதுதீர்த்தத்தில் நீராடுவதற்குக் கிடையாது. எந்த இடத்தில், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீராடலாம் என சேதுமகாத்மியம் இத்தல சிறப்பை கூறுகிறது.

நன்றி : முத்துக்கமலம். காம்