Friday, 18 March 2016

கவிதை பிறந்த கணம்

இணைய இதழ்களில் எழுதத் தொடங்கிய பின் புதிய, புதிய இணைய இதழ்களைத் தேடுவதும், வாசிப்பதும் வழக்கமாகிப் போனது. அப்படியான சந்தர்ப்பம் ஒன்றில் கவிஞர். ரியாஸ் குரானா அவர்களின் முகநூல் பக்கம் வழியாக “பதாகை” இதழ் பற்றி அறிந்தேன். இதழை வாசிக்க, வாசிக்க வாசிப்பின் வழி நான் அறிந்திடாத பக்கங்களை அறிந்து கொள்ள முடிந்தது. வாசிப்பின் வழியாகப் பயணிக்க வேண்டிய திசைகளையும் எனக்கு மெலிதாய் சுட்டியது. ஆளுமைகள் குறித்தான அதன் சிறப்பிதழ்கள் அவர்கள் குறித்து இன்னும் அறிந்து கொள்ள உதவின, ஒரு படைப்பாளியாய் நானும் அந்த இதழில் பங்கு கொள்ள முயன்றதில் வழக்கம் போல தோல்விகளே மிஞ்சியது. இந்த வருடம்  ஒரு கவிதை வழியே அந்த முயற்சி வெற்றி பெற்றது, ஒரு சிக்கலான மனநிலையில் எழுந்த மன உணர்வை கவிதையாக்கி அனுப்பிய பின் இதழில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. இந்தக் கவிதை எழுந்த சூழலைத் தர முடியுமா? என்று கேட்டிருந்தார்கள். இதழுக்கு எழுதி அனுப்பினேன். அதுவும் கவிதையோடு பிரசுரமானது, கவிதையைப் புரிந்து கொள்ள பலருக்கும் உதவிய அந்தச் சூழல் -
புலம் பெயர்ந்து வேலைக்காகச் செல்லும் வாழ்க்கை  என்பது மாயக் கூண்டுக்குள் நுழைவது மாதிரி. ஒரு வருடமோ இரண்டு வருடமோ மட்டும் அந்த வாழ்க்கையை வாழ்ந்து கொஞ்சம் சம்பாதித்து வந்து ஊரில் குடும்பத்தோடு இருந்து விட வேண்டும் என்றும், தான் செய்ய நினைத்ததைச் செய்து விட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு விமானம் ஏறுபவர்கள் அதன் பின் தன் வாழ்நாளின் பாதியை அப்படியான வாழ்க்கை முறையிலேயே வாழ்ந்து தீர்க்க வேண்டியதாகிப் போவது மிகப் பெரிய துயரம்!

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நுனிப்புல்லாய் சில வசதிகளை அந்த வாழ்க்கை கொடுத்திருப்பதாய் தெரிந்தாலும் இளமையின் பெரும்பகுதியைத் தொலைத்து விட்ட சூழலில் வேலை இல்லை என தான் வேலை செய்யும் நிறுவனங்களால் திடுமென அவர்கள் ஊருக்குத் திருப்பி அனுப்பப்படும் சூழலில் அவர்கள் படும் மனவேதனையும், மனக்குழப்பங்களும் சொல்லி மாளாதவைகள்!

ஆரம்பகாலத்தில் தான் செய்து பார்க்க நினைத்த முயற்சிகள், தொழில்கள் எல்லாம் கால ஓட்டத்தில் காலத்திற்கு ஒவ்வாதவைகளாகவும், போட்டித் தன்மை மிக்கதாகவும் மாறி விட்ட நிலையில் எழும் அச்ச உணர்வும், குடும்பத்தின் தேவைகள், குழந்தைகளின் கல்வி போன்ற கட்டாயப் பொருளாதாரத் தேவைகளும் அவர்களை மீண்டும் அதே வாழ்க்கை முறைக்கே பயணப் பட வைக்கிறது.

என்ன செய்வது? எனத் தெரியாத குழப்ப நிலையில் தற்காலிகத் தீர்வாய் இப்படி வாழ்நாள் முழுக்கப் பயணிப்பவர்களின் மனமானது அவர்கள் தங்களின் ஆரம்பகாலத்தில் செய்ய நினைத்த விசயங்கள், தொழில்கள் பற்றிய சிந்தனைகளைத் தாங்கி. குடும்பத்தோடு தொடர்ந்து இருக்க முடியாத துயருடனே நீள்கிறது,

இந்த நாட்டில்  இன்னும் இரண்டு வருடம் மட்டும் தான் இருப்பேன், அதன் பின் ஊருக்குச் சென்று குடும்பத்தோடு இருந்து நினைத்த தொழிலை, விசயத்தைச் செய்வேன் என ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர்கள் நினைக்கும் எண்ணங்கள் அனைத்துமே கானல் நீர் போல வெறும் நினைப்பாக மட்டுமே அமைந்து விடுகிறது, பொருளீட்டல் சார்ந்த புலம் பெயர்தலின் ஊடாக ஒரு பெண்டுலம் ஆரம்பத்திற்கும், முடிவுக்குமாய் நிற்காது அசைவதைப் போல அவர்களின் மனம் வாழ்நாள் முழுக்க இரண்டு நிலைகளுக்கும் அசைந்த படியே இருக்கிறது.

அவர்களில் ஒருவராய் நானும் இருக்கிறேன். 

பெண்டுல” மனசு
-----------------------------------
தவிர்த்திருக்கக் கூடிய
சாத்தியங்கள் இருந்தும்
தர்க்க ரீதியாய் ஏற்றுக் கொண்ட
சுவடுகளில் குதித்து ஓடுகிறது காலம்.

ஆண்டுகளைத் தின்று
செரித்துப் புதைந்த பாதத்தின்
ஆறாம் விரல்களின் வெற்றிடத்தை
மறைத்து நிற்கின்றன கரையோரப் புற்கள்.

குழுமைக்குள் விட்டு வந்தவைகளில்
மக்கி உளுத்தது போக
உள்ளங்கைகளில் உறைந்தவைகள்
காலத்திற்கு ஒவ்வாதவைகளாகின.

தன் வேரடியின் மீது
தடம் பதித்த பேருந்தின் கூரையில்
கிளை உதறிய மலராய்
இன்னொரு வேரடி தேடி நீள்கிறது பயணம்.
  
புலப்பட்டு பயணித்த புள்ளிக்கும்
கானலாகி எழும் புள்ளிக்கும் இடையே
முட்களின் முனங்களோடு நகரும்
பெண்டுலமாய் ஆடிக் கொண்டிருக்கிறது மனசு!

நன்றி : பதாகை.காம்