Saturday, 12 March 2016

ஆயுதமற்ற ஆயுதம்!

ஒரு கருத்தை, செயலாக்கத்தை, படைப்பை, நபரை அல்லது அமைப்பை மதிப்பீடு செய்து முன் வைக்கும் கருத்துக்களுக்கு ”விமர்சனம்” என்று விக்கிப்பீடியா விளக்கம் தருகிறது.  இந்த மதிப்பீடுகளின் வழி வைக்கப்பட்ட, வைக்கப்படும் விமர்சனங்களில் பெரும்பாலானவை இன்று விமர்சனங்களுக்குரியதாகி விட்டது!

மனித குலம் தோன்றிய காலம் தொட்டே விமர்சனங்களும் தழைக்கத் துவங்கின. அதன் கட்டமைவிற்குள் தன்னுடைய வாழ்வியல் செயல்பாடுகளை உட்படுத்திச் சுய மதிப்பீடு, சுய பரிசோதனை என்று செய்து பார்த்த மனித மனம் அத்தகைய உட்படுத்தல்களைப் பொது வெளிக்குத் தந்த போது எழுந்த விமர்சனங்களின் வீரியம் மிதமாகத் தொடங்கி காலத்தின் சக்கர ஓட்டங்களுக்கேற்ப பல்வேறு கோர வடிவங்களாக  உருமாற ஆரம்பித்தன.

துவேஷங்கள், வசைகள், எள்ளல்கள் எனத் தனிமனிதன் மீதான குற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் என்ற பெயரில் குடையாய் விரிந்தன. புதிய சொல்லாடல்களின் துணையோடு ஆயுதமற்ற ஆயுதமாக மாறத் துவங்கின. சக மனிதன் மீதும், அவனின் செயல்பாடுகள், உருவாக்கங்கள் மீதும் பிரயோகிக்கப்பட்ட இந்த ஆயுதத்திற்குச் சிக்காதவர்கள் எவருமில்லை. இந்தியா தேசப்பிதாவாகக் கொண்டாடும் காந்தியடிகள் பெண்களின் தோளில் கை போட்டுக் கொண்டு நடந்து சென்ற போது அவர் ”காமத்தின் உச்சம்” என விமர்சனத்தின் முகமூடி கொண்டு வர்ணிக்கப்பட்டதை வரலாறு சொல்கிறது.  இதன் எச்சமாய் சமீபத்தில் மறைந்த அப்துல் கலாம் மீது வீசப்பட்ட விமர்சனங்களைச் சொல்லலாம்.

தனிமனிதன் மீது இப்படி ஆதிக்கம் செலுத்திய விமர்சனம் சமூகம் நோக்கி வந்த போது இனம், சாதி என ஒரு வட்டத்தையும் அவனோடு சேர்த்தது. இதன் செயல்பாடுகளை அரசியல் களங்களும், மத பீடங்களும் முன்னெடுத்துச் சென்றன. தனிமனிதன் மீதான பகை உணர்வுகளும், பழிவாங்கல்களும் இனத்தோடும், சாதியோடும் இணைக்கப்பட்டு விமர்சனங்களாகப் பந்தி வைக்கப்பட்டன. இன்றளவும் உலகம் முழுக்க அபாயகரமான விளைவுகளை உருவாக்கும் காரணிகளில் முதலிடம் வகிக்கும் இனக்குழுக்களுக்கான பகைகளுக்கு இப்படிப் பந்தி வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும், மலிவான வகையில் முன் வைக்கப்பட்ட கருத்துகளுமே காரணங்களாக இருக்கின்றது.

ஆக்கப்பூர்வமற்ற முறையில்,  முன்னேற்றச் சிந்தனையின்றி வைக்கப்பட்ட இப்படியான விமர்சனங்களின் விரல்கள் காலத்தின் சாயல்களைத் தலைமுறைகளுக்கும் கடத்தி வரும் படைப்பிலக்கியங்களின் மீதும் இதே கடப்பாட்டைச் செலுத்த ஆரம்பித்தது. இலக்கியங்கள் என்பது காலம் தோறும் படைக்கப்பட்டு அதற்கு முந்தையப் படைப்புகளோடு இணைந்து வழிவழியாகக் கடத்தப்படுவதாகும். அப்படிக் கடத்தப்பட்டு வந்ததாலயே சங்ககாலம் தொடங்கி இன்றைய பின் நவீனத்துவ காலம் வரையிலான வாழ்வியலின் பரிணாமங்களை, சமூகத்தில், காலாச்சாரத்தில் நிகழ்ந்த மாற்றங்களைப் படைப்பிலக்கியத்தின் துணை கொண்டு நம்மால் வரிசைப்படுத்திப் பார்க்க முடிகிறது.

இந்த வரிசைப்படுத்தலைத் தொடர்வதற்கு ஏதுவாக நம் காலத்தில் சமூகம் சார்ந்தும், தனிமனித வாழ்வியல் சார்ந்தும் நிகழ்ந்த, நிகழும் மாற்றங்களை, இடர்களை, எதிர் கொண்ட மூர்க்கங்களைப் படைப்பிலக்கியங்களாக உருமாற்றிச் சேமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது. இந்த அவசியமானது அசட்டுத்தனமானதாக, ஆரோக்கியமற்றதாக இருந்து விடக்கூடாது. அவைகளின் அடிப்படை நோக்கம் சிதைந்து போய்விடக்  கூடாது என்பதற்காக படைப்பிலக்கியங்கள் படைக்கப்பட்ட கால கட்டத்திலேயே தரவுகளின் வழியாகத் தர மதிப்பீடுகளின் மூலம் ஆரோக்கியமான விவாதங்களுக்குள் உள்ளாக்கிப் பார்க்கப் பட்டன. நல்ல பல படைப்புகள் தொடர்ந்து உருவாகவும், படைப்பாளி தன்னுடைய படைப்பின் மீதான விவாத உரையாடல்களினால் கண்டடைந்த கூறுகளின் துணையோடு அடுத்த படைப்பை உருவாக்கவும் விமர்சனங்கள் பாதை வகுத்துக் கொடுத்தன. விமர்சனத்தின் நோக்கமும் அது தான்!. ஆனால் பொறுப்பற்ற தன்மையில் உள் நோக்கங்களுடன் களமாடப்பட்ட விமர்சனங்கள் காலப்போக்கில், “எது இலக்கியம்? நீ செய்வதெல்லாம் இலக்கியமே இல்லை. வெறும் குப்பை” என பொது மேடைகளில் குழு மனப்பான்மையோடு கோசங்களாகத் தடம் புரண்டன.

படைப்பிலக்கியங்களை நேர் செய்வதற்காக அறிவு, கொள்கை, தர்க்கம் முதலியவைகளை மையமாகக் கொண்டு  சிசு.செல்லப்பா, மெளலி, க.நா.சு, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி போன்றவர்கள் செய்து வந்த ”விமர்சனம்” என்ற கலையைப் பின்னர் வந்தவர்கள் தங்களின் சாடல்களுக்கும், வன்மத்திற்கும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கும் சுய நல நோக்கோடு பயன்படுத்தத் துவங்கினர். அதன் விளைவு விமர்சனங்கள் படைப்புகளைக் கூர் பார்ப்பதற்குப் பதிலாக படைப்பாளிகளைக் கூறு போட ஆரம்பித்தன. படைப்பாளிக்கும், வாசகனுக்கும் இடையே விவாதங்களைக் கிளர்ந்தெழச் செய்து அவர்களுக்கிடையே பாலமாக மாறுவதற்குப் பதில் பெரும் பள்ளங்களை இடைவெளிகளாக உருவாக்கின.

எந்த விதக் காழ்ப்புணர்ச்சியும், உள்ளாடல்களும் இல்லாமல், தன் அறிவுஜீவித் தனத்தை நிலைநிறுத்துவதற்குரிய வலிந்த முயற்சிகள் ஏதுமின்றி பொது வெளியில் வைக்கப்படும் விமர்சனம் நிச்சயம் விவாதங்களை கிளர்ந்தெழ வைக்கும். இவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் போது அடுத்தடுத்த தலைமுறைகளிலும் சம்பந்தப்பட்டப் படைப்பை சம காலத்தோடு ஒப்பீடு செய்து பார்க்க வைக்கும். தலைமுறைகள் கடந்த படைப்பாளிகளின் படைப்பிலக்கியங்கள் குறித்து இன்று நாம் முன் வைக்கும் கருத்துகள் அனைத்தும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் மூலமே உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இப்படியானத் தொடர் விவாதங்களைத் தூண்டக் கூடிய விமர்சனங்கள் இன்று வெகு சொற்பமாகி விட்டது. விமர்சனம் என்ற கலை வடிவம் மெல்ல தன் அடிவேரை இழந்து  அழிந்து வரும் கலையின் சாயல் தரிக்க ஆரம்பித்து விட்டன.

தன் இயலாமையை, சக படைப்பாளிக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை மறுக்கும் வசைகளாகவே படைப்பின் மீதான பெரும்பான்மையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. அந்தந்த கலைவடிவத்திற்கென இருக்கின்ற வரையறைகளை தன்னுடைய சாடல் சார்ந்த விமர்சனத்திற்கான சல்லடைகளாக்கித் தன்னை முன்னிலைப்படுத்திக் காட்ட எத்தனிக்கும் விமர்சகன் தனக்கென நிலைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நியதிகளை மறந்து போகின்றான். தரவு, மதிப்பீடு, ஒப்பீடு என்ற வகைப்பாட்டிற்குள் படைப்பை நிறுத்தி அதன் வழி தன் விமர்சனத்தை முன் வைக்காமல் பொத்தாம் பொதுவாய் சொல்லிச் செல்வதும், எழுதிச் செல்வதும் இன்று சாதாரண விசயமாகி விட்டது. இணையங்களில் இப்படியான குப்பைகள் மலிவாக வாசிக்க கிடைக்கின்றன.

விமர்சனத்தை முன் வைப்பவர் ஒரு படைப்பாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரம் படைப்பின் மீதான விமர்சனத்தை முன் வைப்பதற்குத் தகுதிநிலை உடையவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் வாசிப்பின் வழியாகப் படைப்பிலக்கியத்தின் மீதான அறிவு சார்ந்தவராக இருக்க வேண்டும் ஆனால் இவ்விரண்டு நிலையிலும் இல்லாதவர்கள் விமர்சனம் என்ற பெயரில் தங்களுடைய எண்ணங்களை, குமுறல்களை தரவுகளோ, அதற்கான விளக்கங்களோ இல்லாமல் விமர்சனங்களாகச் சொல்லிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பதால் விமர்சனங்களின் மூலமாகப் படைப்பாளி தன்னைப் புதுப்பித்துக் கொள்ளத் தயங்குகிறான். அல்லது மறுத்துப் புறந்தள்ளி விட்டுப் பயணப்பட எத்தனிக்கிறான். வாசகனோ இன்னும் ஒரு படி மேலே போய் ”விமர்சனம் என்பது வேண்டாத வேலை” எனச் சொல்லி அவைகள் தரும் நுட்பங்களின் மூலம் பெற வேண்டிய வாசிப்பனுபவத்தைப் பெறாமலே இலக்கியங்களையும், படைப்புகளையும் வெறும் வாசிப்பின் ஊடாக மட்டுமே கடந்து போகிறான். வாசிப்பனுபவத்தைத் தராத அசட்டு வாசிப்பினால் தான் இன்றைய தலைமுறைகளிடம் பாடப்புத்தகங்களுக்கு வெளியேயான வாசிப்பு என்பது வெகுவாகக் குறைந்து போனது.

படைப்பிற்குள் மறைந்து கிடக்கும் இலக்கியக் கூறுகள், நுட்பமாகச் சுட்டப்பட்டிருக்கும் அங்கதங்கள், சமூகச் சாடல்கள். வாழ்வியல் கட்டமைவுகள் ஆகியவைகளைக் கட்டுடைத்து வாசகனுக்கும்-

படைப்பில் கொண்டிருக்கும் முரண்களை, கண்டடையத் தவறிய நிலைகளை படைப்பாளிக்கும் சுட்டிக் காட்டுவதே ஒரு விமர்சகனின் பணி. தேர்ந்த தேடல்கள், வாசிப்பனுபவங்கள் வழி நிகழ்த்த வேண்டிய இந்தப் பணியைப் பலரும் ”அருமை”, ”அற்புதம்”, ”கச்சிதம்” என ஒற்றை வரி வாழ்த்துரைகளால் நிரப்புவதும், சுட்டிக்காட்ட வேண்டிய விசயங்களைச் சாடல்களுக்கு அஞ்சி மறைப்பதும் படைப்பிலக்கியத்தின் வளர்ச்சிக்கும், வாசிக்கின்ற வாசகனுக்கும், வருங்காலத் தலைமுறைகளுக்கும் எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. உதவாதவைகளையும், பயன் தராதவைகளையும் ஒன்றன் மீது தொடர்ந்து செலுத்துவதும் கூட ஒரு விதமான வன்முறை தான்! அப்படியான வன்முறைக்கு இன்றைய தமிழ் படைப்பிலக்கியங்கள் மெல்ல, மெல்ல ஆட்பட்டு வருகின்றன, ஆரோக்கியமற்ற விமர்சனங்கள் மூலம் கிருமிகளைக் போல படைப்பிலக்கியங்களின் மீது ஏவப்பட்டு வரும் இத்தகைய வன்முறையை ஆரோக்கியமான, மிகச் சரியான, தேர்ந்த  விமர்சனங்கள் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும். அந்த நம்பிக்கையோடு தமிழ் படைப்பிலக்கியத்தையும், உங்களையும் போலவே நானும் காத்திருக்கிறேன். 

நன்றி : தி சிராங்கூன் டைம்ஸ்