நாம் ஒவ்வொருவருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என விரும்புகிறோம். வெற்றியாளராக வலம் வர ஆசைப்படுகிறோம். இவ்விரண்டுமோ அல்லது இவ்விரண்டில் ஒன்றோ நிகழ வேண்டுமானால் அதற்கு “இலக்கு” என்ற ஒன்று அவசியம் வேண்டும். அந்த ஒன்றை நோக்கி செயல் படுகின்ற போது தான் வெற்று வாழ்க்கை வெற்றி வாழ்க்கையாக மாறுகின்றது. “இலட்சியத்துக்காக பாடுபடாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல” என்கிறார் மாஜினி.
இலக்கு குறித்து நம்மில் பலருக்கும் ஒரு தெளிவு இருப்பதில்லை. அது ஏதோ தனிப்பட்டவர்களுக்கும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கும் உரியதாய் எண்ணிக் கொள்கின்றனர். விண்ணில் ஏவுகணை ஏவுவதும், புதிய கண்டுபிடிப்புகளை செய்வதும், தன் ஆற்றலுக்கும், திறமைக்கும் மீறிய விசயங்களைச் செய்து காட்டுவதும் மட்டுமே இலக்கு என வரையறையற்ற இலக்குகளை குறிப்பிட்ட வரையறைகளுக்குள் வைக்கப் பழகி விட்டதன் விளைவாக நாம் வாழும் வாழ்க்கையை மிகச் சாதாரணமானதாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்கிக் கொள்கின்றோம்.
எல்லைகளற்ற பரப்பில் நமக்கு நாமே, உங்களுக்கு நீங்களே உருவாக்கிக் கொள்கின்ற எல்லை தான் இலக்கு! ஓட்டப்பந்தயத்தில் ஓடுகின்ற ஒருவனுக்கு எப்படி ஒரு எல்லைக்கோடு அவசியமோ அதுபோல வாழ்க்கை என்ற ஓட்டத்தில் வெற்றி, மகிழ்ச்சி, நிறைவு இவைகளைப் பெறுவதற்கும் ஒரு எல்லைக்கோடு அவசியம்.
உங்களின் ஒட்டு மொத்த செயல்பாட்டையும் இலக்கை நோக்கியே வைத்திருக்கப் பழகுங்கள். இலக்கை நிர்ணயிக்கும் முன் மற்றவர்களிடமிருந்து யோசனைகளைப் பெறுங்கள். ஆனால், முடிவை நீங்கள் மட்டுமே எடுங்கள். ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டேன்……….எனக்கு அப்பவே தோணுச்சு………அவன் சொன்னான்னு செஞ்சது தான் நான் செய்த முட்டாள் தனம்….இப்படி சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள் அல்லது நீங்களே கூட புலம்பியிருப்பீர்கள். இப்படியான புலம்பல்களுக்கு அடுத்தவர்களின் யோசனைகளைக் கேட்டு உருவாக்கிக் கொண்ட தெளிவற்ற இலக்குகள் தான் காரணம்!
நீங்கள் உருவாக்கிக் கொண்ட இலக்கை நோக்கி செயல்படப்போவது நீங்கள் தான் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். பிரபல அமெரிக்க தன்னம்பிக்கை எழுத்தாளர் நெப்போலியன் ஹில், "வெற்றிக்காக ஒரு மனிதன் முழு நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருந்தால் அது அவனுக்கு கட்டாயம் கிடைக்கும்” என்கிறார்.
உங்களுடைய இலக்கினை உருவாக்கும் போது கீழ்கண்ட விசயங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். அது உங்களின் இலக்கு வெற்றி இலக்காக அமைவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தித் தரும்
- உங்களின் இலக்கு உங்களுக்கு விருப்பமானதில் இருக்கிறதா
- உங்களின் ஆற்றலுக்கும், திறன்களுக்கும் உட்பட்டு இருக்கிறதா?
- தெளிவாக, மிகச் சரியான வரையறைகளுடன் இருக்கிறதா?
- சவாலானதாகவும், சாத்தியமாகக்கூடிய அளவிலும் இருக்கிறதா?
- அடையும் வழிமுறைகளைக் கொண்டதாக இருக்கிறதா?
- விவரித்து எழுத, பேசக்கூடியதாக இருக்கிறதா?
- குறிப்பிட்ட கால அளவைக் கொண்டிருக்கிறதா?
என்ற இந்த ஏழு கேள்விகளின் வழி வெற்றிக்கான, மகிழ்ச்சிக்கான உங்களின் இலக்கை அமையுங்கள். இப்படியான வழிமுறைகளோடு இலக்கை உருவாக்கி விட்டால் மட்டும் போதுமா? அந்த இலக்கை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும். அதற்கு அந்த இலக்கை எட்ட வேண்டும்.
ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் அதன் எல்லைக்கோட்டை அடையும் போது தான் அவனாலும், மற்றவர்களாலும் வெற்றியாக கொண்டாடப்படுகிறது. அதுபோல வாழ்க்கை என்ற ஓட்டப்பந்தயத்தில் ஓடுகின்ற நீங்கள் இலக்கு என்ற எல்லைக்கோட்டை எட்டும் போது தான் அது வெற்றியாக கொண்டாடப்படும். இலக்கை எட்டிப்பிடிப்பதற்கு ”திட்டமிடுதல்” என்பது அவசியம். மிகச் சிறந்த திட்டமிடலின் மூலம் தான் உங்களுடைய இலக்கை மிகச் சரியான வழிகளில் அடைய முடியும். ஒரே நாளில் எதுவும் சாத்தியமாகி விடாது.
திட்டமிடுவதற்கு முன் நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் இலக்கின் கால அளவைப் பகுதி பகுதியாக உடையுங்கள். உதாரணமாக, ஐந்து ஆண்டுகளில் உங்களின் இலக்கு எட்டப்படுவதாக இருப்பின் ஐந்தாண்டுக்குமாகத் திட்டமிடாமல் அவைகளை ஐந்து தனித்தனி ஆண்டுகளாக பிரித்துத் திட்டமிடுங்கள். “ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை” என்பதன் அர்த்தம் உணர்ந்து திட்டமிடுங்கள். அப்படித் திட்டமிடும் போது -
- ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டியவைகள் என்ன?
- அதைச் செய்வதற்கு சாத்தியமான வழிமுறைகள் என்ன?
- அந்த வேலைகளைச் செய்வதில் இருக்கும் பிரச்சனைகள் என்ன? அதை எப்படி எதிர்கொள்வது?
- தொழில் முறை ஆலோசகர்களின் ஆலோசனை தேவையா?
- பொருளாதார வளம் போதுமான அளவு உள்ளதா? இல்லையெனில் அதைத் தேவைக்கேற்பத் திரட்டுவதற்கான வழிமுறைகள் என்ன?
- பிறருடைய உதவிகள் தேவைப்படுமா? தேவையெனில் அதை யாரிடமிருந்து பெறுவது?
- ஒருவேளை எதிர்பார்த்தவர்களிடமிருந்து உதவிகள் கிடைக்காத நிலையில் அதற்குரிய மாற்று வழிகள் என்ன?
- தனிப்பட்ட முயற்சி போதுமா? அல்லது கூட்டு முயற்சி வேண்டுமா? கூட்டு முயற்சி எனில் அதை எவ்வளவு காலத்திற்குத் தொடர்வது?
- இலக்கை நோக்கிய செயல்பாட்டிற்காக ஒரு நாளில் செலவழிக்க வேண்டிய நேரம் எவ்வளவு? அந்த நேரத்தை எப்படி ஒதுக்குவது?
- முதலாண்டுக்குரிய இலக்கின் அளவை எட்டிய பின் அடுத்த ஆண்டிற்கான வேலையை உடனே தொடங்க வேண்டுமா? இல்லையெனில் எவ்வளவு காலம் கழித்து ஆரம்பிப்பது?
- இந்த வழிமுறைகளைப் பின்பற்றிச் செல்வது ஐந்தாண்டுகளில் அடையப் போகும் என்னுடைய இலக்கிற்கு எந்த அளவில் பயன் தரக் கூடியதாக இருக்கும்?
– போன்ற கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அதன் வழி உங்களுக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு பதிலும் மிகச்சிறப்பான திட்டமிடலுக்கும் அதன்வழி நீங்கள் சிறப்பாக செயல்படவும் உதவும். தெளிவான இலக்கு, மிகச்சரியான திட்டமிடல் இரண்டும் இருந்தால் போதும். அது மகிழ்ச்சியோடு கூடிய வெற்றிக்கான உங்களின் முதல் அகல் விளக்கை ஏற்றி வைக்கும்.
நன்றி – பாக்யா வார இதழ்