ஊருக்கு வாரீங்களாம்?
ஆமாம்.
சீக்கிரம் வாங்க,
நிறைய வேலை இருக்கு.
எனக்கென்ன வேலை
இருக்கு?
எங்களோடு விளையாட,
சண்டை போட, நாம
எல்லாம் ஊர்
சுத்த வேணாமா?
"நான் அழைத்தால் உங்க அப்பா உடனே போனை எடுத்துடுவாங்க. எனக்குன்னு எதையும் செய்யமாட்டாங்க. ஆனால், நீ அழைத்தால் உடனே எடுக்கமாட்டாங்க. உனக்கு மட்டும் எல்லாம் செய்றாங்க" என்று தன்னிடம் அம்மா சொன்னதைச் சோதித்துப் பார்ப்பதற்காக மகள் அழைத்திருக்கிறாள். இந்த விபரம் தெரியாமல் அன்று அந்த அலைபேசி அழைப்பை உடனடியாக நான் ஏற்றதும் இந்தத் தகவலைச் சொன்னவள், “அம்மா சொல்றது உண்மையா டாடி?” என்றாள்.
ஆமான்னு சொன்னா ஒரு ஆப்பு! இல்லைன்னு சொன்னா டபுள் ஆப்பு!! அதனால் மெளனத்தை மட்டுமே பதிலாய் அவளுக்குத் தர முடிந்தது.
அழுதா உங்களுக்குப் பிடிக்காதுன்னு சொல்லி இருக்கீங்கள்ள?
ஆமாம். அப்புறம் ஏன் நேத்து நீ அழுதியாம்?
இலக்கியா பிள்ளை ஸ்கெட்ச் பென்சில் தரலைல.
அதுக்காக அழுவியா?
அதுவா வந்துருதுல...
நேத்து இருந்த கோபம் இப்ப போயிடுச்சா? இன்னும் மிச்சம் இருக்கா?
தெரியல.
தெரியலைன்னு சொன்னா நான் எப்படி எடுத்துக்கிறது? போயிருச்சுன்னு நினைக்கிறதா? இன்னும் இருக்குன்னு நினைக்கிறதா?
அது உங்க இஷ்டம். HAVE A NICE DAY
DADDY. BYE. BYE.
ஏன்டா அக்காவோட சண்டை போட்டுக்கிட்டே இருக்க? என மகனிடமும், அம்மாவுக்குக் கூடமாட உதவி செய்யக் கூடாதாம்மா? என மகளிடமும், ஏன்டி அம்மாவும், பிள்ளைகளுமா எப்பத் தான் உங்க பஞ்சாயத்தை நிறுத்துவீங்க? என மனைவியிடமும் கேட்காத ஒரு தினம் வேண்டும். இப்படியான வரம் கேட்டால் கடவு்ளுக்குக் கடுப்பு வராமல் இருக்குமா என்ன?!