Thursday, 19 May 2016

உங்களுக்கு நீங்களே!

சிவப்பு விளக்கு எரியும் போது சாலையைக் கடப்பது தவறு என வகுப்பறையில் படித்து விட்டு வரும் குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வரும் தந்தை சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போதே சாலையை விருட்டென கடந்து போவதைக் கண்டு குழம்பிப் போன அந்த குழந்தை, “அப்பா………இது தப்பில்லையா? சிவப்பு லைட் எரியும் போது போனா தப்புன்னு மிஸ் சொன்னாங்களே” என்றாள். அதற்கு அந்த மகா புத்திசாலி தந்தை அவசரத்துக்கு இப்படி போகலாம் தப்பில்லை என்றான். இப்படியான ரோல்மாடல்களோடு தான் நாமும், நம் குழந்தைகளும் வளர வேண்டியிருக்கிறது. அதனால் தானோ என்னவோ குழந்தைகள் பின்னாளில் அவசரம், அவசியம், கொள்கை, விருப்பம், தேவைகள் என ஏதோ ஒன்றின் பொருட்டு தங்களுடைய தனித்தன்மைகளை இழந்து நிற்கின்றனர். கலங்கரை விளக்காய் ஒளி தர வேண்டியவர்கள் சிமினி விளக்காய் மண்ணெண்ணெய்க்கு ஏங்கி நிற்கிறார்கள். நீங்கள் வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், அர்த்தமுள்ள வாக்கையை நீங்கள் வாழ வேண்டுமானால் அதற்கு “தனித்தன்மை” என்பது அவசியம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அது அவசியமான ஒன்று. அந்த அவசியத்தை உணர்ந்திருந்ததால் தான் தன் மகனோடு இருந்த தன் படைத்தளபதி தன்னைக் கண்டதும் எழுந்து நின்று மரியாதை செலுத்த போனபோது அதை நெப்போலியன் தடுத்தான். தனித்தன்மை என்று சொன்னதும் அது ஏதோ ஒரு பெரிய விசயமென நினைத்து விடாதீர்கள். உங்களுடைய பழக்கத்தால், நடவடிக்கையால் உங்களை மற்றவர்களுக்கும், உங்களுக்கும் விருப்பமானவராக மாற்றிக்கொள்ளுவது மட்டுமே!

ஈரானை ஆண்டுவந்த நெளஷர்கான் என்கின்ற பாதுஷா வேட்டையாடுவதற்காக காட்டுக்குப் போனார். அவருடன் சென்றிருந்த சமையல்காரர் ஒருநாள், “மன்னா! சமையலுக்கு உப்பில்லை” என்றார். பக்கத்து ஊருக்கு போய் விலை கொடுத்து வாங்கி வா. இல்லையென்றால் ஊரே பாழாகிவிடும்” என்றார் பாதுஷா. மன்னா……..ஒரு பிடி உப்பை விலை கொடுக்காமல் வாங்கினால் ஊர் முழுவதும் எப்படி பாழாகும்? என்று விளக்கம் கேட்டார் சமையல்காரர். அதற்கு ஷா, “தன் குடிமக்களிடம் அரசன் ஒரு பிடி உப்பை இனாமாக வாங்கினால் அவன் கீழ் உள்ள அதிகாரிகள் மறுநாள் அந்த ஊரையே முழுங்கி விடுவார்கள்” என்றார்.  

உபதேசங்களிலேயே மிகப்பெரிய உபதேசம் உபதேசித்தபடி உபதேசித்தவன் வாழ்ந்து காட்டுவது. அப்படி வாழ்ந்து காட்டியவர்களிடம் தான் வாழ்க்கை அடங்கிப் போயிருக்கிறது. வாழ்க்கையை இப்படி தான் வாழ வேண்டும் என உபதேசிப்பவர்களில் எத்தனை பேர் அப்படி வாழ்கிறார்கள்? தங்களுடைய தனித்த அடையாளங்களால் தன்னை தனித்துவமுடையவர்களாக மாற்றிக் கொண்டு தன் வாழ்க்கை முழுவதும் அப்படி வாழ்ந்து காட்டியவர்கள் வரலாறாகியும் வாழ்கின்றனர்.

இரஷ்யாவை ஆண்ட லெனின் முடி வெட்டிக் கொள்வதற்காக முடி திருத்தும் நிலையத்திற்கு சென்றார். அங்கு ஏற்கனவே நீண்ட வரிசை காத்திருக்கிறது. லெனினைக் கண்டதும் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். லெனினோ கடைசியாக இருப்பவர் யார்? என்று கேட்டார். அங்கு வரிசையிலிருந்தவர்கள் அரசாங்கத் தலைவராகிய நீங்கள் வரிசையில் காத்திருக்ககூடாது என்று கூறினர். அதற்கு லெனின், “உங்கள் மதிப்புக்கு நன்றி. எல்லோரும் வரிசையில் வர வேண்டும் என்பது நடைமுறை. அந்த நடைமுறையை நானும் பின்பற்றவே விரும்புகிறேன்” என்றார்.

காலஞ்சென்ற பேரறிஞர் விசுவேசுவரய்யா அவர்களுக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என 1955 ம் ஆண்டு இந்திய அரசாங்கம் முடிவு செய்தது. அப்போதைய குடியரசுத்தலைவர் இராஜேந்திர பிரசாத்தின் விருப்பத்திற்கிணங்க விசுவேசுவரய்யா குடியரசுத்தலைவர் மாளிகையிலேயே தங்கி இருந்தார். மூன்று நாட்கள் சென்றதும் நான்காவது நாள் தான் வேறொரு விடுதியில் சென்று தங்கப்போவதாகவும், தன்னை அதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் விசுவேசுவரய்யா கேட்டார். பட்டம் பெறுகிற வரையில் இங்கேயே தான் நீங்கள் தங்கி இருக்க வேண்டும் என்றார் இராஜேந்திர பிரசாத். மூன்று நாட்களுக்கு மேல் எந்த விருந்தாளியும் குடியரசுத்தலைவர் மாளிகையில் தங்கக்கூடாது என சட்டம் இருக்கிறதே என்றார் விசுவேசுவரய்யா. தங்களைப் போன்ற பெரியவர்கள் அந்த விதிமுறைப்படி நடக்க வேண்டியதில்லை என இராஜேந்திரபிரசாத் சொன்னதும் சற்றும் தாமதிக்காமல்  விசுவேசுவரய்யா சட்டத்தை மீறி இங்கு நான் தங்க இங்குள்ள வசதிகளை அனுபவிக்க மாட்டேன் எனச் சொல்லி வேறிடத்துக்கு சென்று தங்கினார். இந்த சம்பவம் நடந்தபோது விசுவேசுவரய்யாவுக்கு வயது 94. இன்று இப்படியான தலைவர்கள் அபூர்வம்! இருந்தால் ஆச்சர்யம்!!

புத்தனின் சீடரான ஆனந்தன் ஒருநாள் காட்டுப்பாதை வழியே சென்று கொண்டிருந்தார். கடுமையான வெயிலால் தாகம் ஏற்பட்டு அவரின் தொண்டை வறண்டு போனது. எங்காவது குடிக்கத் தண்ணீர் கிடைக்காதா? என்று கவனித்த படியே நடந்து சென்றார். அப்போது எதிர் திசையில் ஒரு பெண் தண்ணீர் குடத்தை சுமந்து வந்தாள்.

ஆனந்தன் அவளிடம் “அம்மா! ரொம்ப தாகமாக இருக்கிறது. குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்“ என்று கேட்டார். அதற்கு அந்தப்பெண் “ஐயா! நான் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவள்” என்றாள். உடனே ஆனந்தன் ”அம்மா! நான் உன் குலத்தைக் கேட்கவில்லையே. தண்ணீர் தானே கேட்டேன் என்றதும் அந்த பெண் மனமகிழ்வோடு தண்ணீர் கொடுத்தாள். இந்தப் பெண்ணைப் போல தான் நாம் பல நேரங்களில் சூழலுக்கு சம்பந்தமில்லாத விசயங்களை நாமாகவே நினைத்துக் கொண்டு தனக்குத் தானே தாழ்த்திக் கொள்கிறோம். ஆனால், வெற்றியாளர்கள் எந்த நிலையிலும் தங்களை தாழ்த்திக் கொள்ளவோ மற்றவர்கள் அப்படி செய்யவோ அனுமதிப்பதில்லை. எந்த சூழ்நிலையிலும் தனக்காகவோ, மற்றவர்களுக்காகவோ தன்னையும், தன் நிலையையும் அவர்கள் தாழ்த்திக் கொள்ள சம்மதிப்பதில்லை.

அதுவரையிலும் இந்தியப்பிரதமராக இருந்தவர்களை “மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்” என்றழைப்பதே மரபாக இருந்தது. அந்த மரபிற்கு இந்திராகாந்தி வடிவில் சோதனை வந்தது. அதுவரைக்கும் பிரதமராக ஆண்களே இருந்தனர். இப்போது பெண்பிரதமர் என்பதால் அவரை எப்படி அழைப்பது என்ற குழப்பம் பிரதம அலுவலக அதிகாரிகளுக்கு வர அவர்களின் சங்கடத்தைப் புரிந்து கொண்ட இந்திரா சொன்னார். என்னையும் ”மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்” என்றே அழையுங்கள். தன்னைத் தாழ்த்திக் கொள்ளாத இந்திராவின் துணிச்சல் அவரை இந்தியாவின் இரும்பு பெண்மணியாக்கியது.

வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காந்தியடிகள் இலண்டனுக்கு சென்றார். அதில் கலந்து கொள்ள வேண்டுமானால் மேலைநாகரீக உடையணிந்து தான் செல்ல வேண்டும் என சொன்னார்கள். காந்தியோ அசரவில்லை. ஒரு இந்திய பிரஜையின் ஆடையில் தான் கலந்து கொள்வேன் என உறுதியாகச் சொன்னார். அவர்களுக்காக காந்தி தான் கொண்டிருந்த கொள்கையை தாழ்த்திக் கொள்ளவில்லை. அந்த உறுதி அவரை அவர் விரும்பிய வண்ணமே அம்மாநாட்டில் கலந்து கொள்ள வைத்தது.

உடல்நிலை காரணமாக தனக்கென விசேசமாக வடிவமைக்கப்பட்ட படுக்கையை கவர்னர் ஜெனரலாக இருந்த போது இராஜாஜி பயன்படுத்தி வந்தார். அவர் கல்கத்தா கவர்னர் மாளிகையை விட்டு சென்றபின் அந்த படுக்கையை நேரு இராஜாஜிக்கு கொடுத்தனுப்பினார். நேரு எவ்வளவோ சொல்லியும் இராஜாஜி அதற்கான செலவு தொகையைக் கொடுத்தனுப்பிய பின்பே படுக்கையை எடுத்துக்கொண்டார். உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ளும்போது தான் உங்களின் தனித்தன்மையும் தாழ்ந்து போகிறது. உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ளாத வரையில் தான் லெனின், காந்தி, இந்திரா, விசுவேசுவரய்யா, இராஜாஜி போல தனித்தன்மையுடன் மிளிர முடியும். மற்றவர்களை ரோல்மாடலாக ஏற்றுக் கொள்வதற்கு முன் உங்களுக்கு நீங்களே ரோல்மாடலாக இருக்க பாருங்கள். பழகுங்கள். பக்குவப்படுங்கள். முன்மாதிரி என்பது உங்களிடமிருந்து தொடங்கட்டும். அந்த தொடக்கம் கடைசி வரையிலும் இருக்க, நீடிக்க வேண்டுமானால் அதற்கு உங்களின் நிலையிலிருந்து எதன் பொருட்டும் உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். ”காலம் காலமாக இருந்து வருபவைகளை பின்பற்றுபவன் அரசு ஊழியனைப் போன்றவன், அவர்கள் சட்டங்களை பின்பற்றுபவர்கள். வகுப்பவர்கள் அல்ல” என்கிறார் ஓஷோ. யார் மாதிரி இருக்கிறீர்கள் என்பதை விட யாராக உருவாகிறீர்கள் என்பதில் தான் வெற்றியின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. தனித்தன்மை என்ற ராஜபாட்டையின் மேல் அந்த வெற்றி சூட்சுமத்தை நிலை நிறுத்துங்கள்.  நீங்களும் வெற்றி நடை போட்டு பவனி வரமுடியும்.

நன்றி : பாக்யா வார இதழ்