Thursday, 12 May 2016

அன்பென்னும் ஆயுதம்!

இவ்வுலகில் இன்று பலருக்கும் கிடைக்காத விசயமாக பலரும் ஏங்கக்கூடிய விசயங்களில் ஒன்றாக இருப்பது அன்பு தான்! விலைகொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லாத நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற இந்த அன்பை நாம் பரிமாறிக் கொள்வதில்லை. ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு பெற்றோர்கள் பிள்ளைகளிடம், உயரதிகாரிகள் தன் சகஊழியர்களிடம், கணவன் மனைவியிடம், மனைவி கணவனிடம், அண்டைவீட்டார்களிடம், சகமனிதர்களிடம் அன்பை வெளிப்படுத்தாமல் முரண்பட்டு நிற்கின்றோம். ”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்என்பதை மறந்து போனதன் விளைவாக நம் மனக்கதவுகளோடு நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மனக்கதவுகளையும் மூட வைத்து விட்டோம். இன்று வீடு தொடங்கி பணியிடங்கள் வரை விரிந்து கிடக்கும் விரிசல்கள் எல்லாமே இதன் வெளிப்பாடு தான்.

அன்பிற்கும், வெற்றிக்கும் என்னய்யா சம்பந்தம்? என கடிந்து கொள்ளாதீர்கள். சம்பந்தம் இருக்கிறது. நன்கு கூர்தீட்டப்பட்ட கத்தியைக் கொண்டு வீட்டில் சமையலுக்கு தேவையான காய்கறியும் வெட்டலாம். ஒரு உயிரைக் காக்கும் அறுவை சிகிச்சையும் செய்யலாம். ஏறக்குறைய அன்பும் கத்தி மாதிரியானது தான். அதை நீங்கள் எங்கு, எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் பலன் கிடைக்கும்.

மனைவியிடம் அன்பை காட்டினால் அது அக்கறையாக மாறும். குழந்தைகளிடம் காட்டினால் பாசமாக மாறும். உறவுகளிடம் காட்டினால் உங்களின் வெற்றிக்கான ஒரு வாய்ப்பாக மாறும். ஒருவழிப்பாதையாக இல்லாமல் இருவழிப்பாதை போல் பலனுக்கு பலன் தரக்கூடிய அன்பை வெறும் வாய் வார்த்தைகளாக சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதை வெளிப்படுத்துவதிலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடத்துவதிலும் தான் அது ஆளுமையாக மாறி பலன்களைத் தரும். அப்படி அன்பை ஆளுமையாக மாற்றிக் காட்டியவர் புத்தர்.

ஒருநாள் காட்டில் அவர் தன் சீடர்களுடன் தங்க வேண்டிய சூழ்நிலையாகி விட்டது. அவரோடு அவருடைய சீடர்களும் தங்கினர். இரவில் அவர்கள் உறங்கிய சமயத்தில் அவ்வழியே வந்த ஒரு திருடன் அவர்களிடமிருந்த கிண்ணம் ஒன்றை திருடிக் கொண்டு ஓடினான். தற்செயலாக விழித்துக் கொண்ட ஒரு சீடன் திருடன் கிண்ணத்துடன் ஓடுவதைக் கண்டு புத்தரை எழுப்பினான். கிண்ணம் இருந்த இடத்தைப் பார்த்த புத்தர் அடடா….. அவன் ஓட்டைக்கிண்ணத்தை அல்லவா எடுத்துக் கொண்டு ஓடுகிறான். நீ உடனே அவனை துரத்திச் சென்று இந்த நல்ல கிண்ணத்தைக் கொடுத்து விட்டு வா என்றார். சீடனும் திருடனை விரட்டிச் சென்று பிடித்து புத்தர் கூறியதைச் சொல்லி நல்ல கிண்ணத்தை அவனிடம் கொடுத்த நொடி காலம் காலமாய் திருட்டுத் தொழிலை செய்து வந்த அந்த திருடன் தன் தொழிலையே விட்டுவிட்டு திருந்தினான். புத்தரின் அன்பு ஒரு திருடனை மடைமாற்றி நல்லவனாக்கியது.

காந்தியடிகள் பயணம் செய்து கொண்டிருந்தபோது வழியில் ஒரு தொழுநோயாளி வேதனையில் அவதியுறுவதைக் கண்டார். உடனே அவனருகில் சென்று அவனுடைய புண்ணுக்கு மருந்திட்டு தன் ஆடையிலேயே துடைத்தும் விட்டார். பலரும் தடுத்த போதும் காந்தியடிகள் அவனை சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்து தன் படுக்கையிலேயே படுக்க வைத்து நாள்தோறும் மருந்திட்டு வந்தார். உங்களுக்கும் அவனுடைய நோய் ஒட்டிக்கொள்ளப்போகிறது என பலரும் கூறியதைக் கேட்ட காந்தி, “இந்த நோயால் இவனுடைய குடும்பம், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் வெறுத்து ஒதுக்கியதால் தான் வீதிக்கு வந்துவிட்டான். அவனை நாமும் அவர்களைப் போல் ஒதுக்கி விட்டால் எங்கு போவான்என திருப்பி கேட்டார். இப்படியான அன்பின் வெளிப்பாடான நடவடிக்கைகள் காந்தியை மகாத்மாவாக போற்ற வைத்தது.

தன் இல்லத்து குழந்தைகளுக்காக ஏந்திய கையில் எச்சில் உமிழ்ந்தவனிடம் அன்னை தெரசா காட்டிய அன்பு கலந்த பேச்சு அவனின் அகங்காரத்தை உருவி எறிந்தது. ஆனி என்கின்ற ஆசிரியை காட்டிய அன்பு கண்பார்வையை இழந்து இருளில் மூழ்கிக் கிடந்த ஹெலன் என்ற சிறுமியை விஞ்ஞானியாக்கியது. திரெளபதி கண்ணனிடம் காட்டிய அக்கறை கலந்த அன்பு அவளுடைய மானத்தை காப்பாற்ற உதவியதுஇப்படியான மாற்றங்களை தரக்கூடிய அன்பு என்பதற்கு தனித்த வரையறை ஏதுமில்லை. அது ஒரு வெளிப்பாடு. வெளிப்படுத்தும் முறை. மற்றவர்களிடத்தில் நீ அன்பு செலுத்துகின்றாய் என்றால் அதை அவர்களை புகழ்வதினால் காட்ட வேண்டியதில்லை. அவர்களுக்கு தொண்டு செய்வதன் வழி காட்டு என்கிறார் விவேகானந்தர். அப்படி காட்ட நீங்கள் புத்தனாகவோ, காந்தியாகவோ, தெரசாவாகவோ மாறவேண்டியதில்லை. நீங்களாகவே இருந்து அன்பை அக்கறையுடன் வெளிப்படுத்தினாலே போதும்.

வீட்டில் ஓடித்திரியும் ஒரு குழந்தை ஏதாவது கதவு, கட்டில் தட்டி அழ ஆரம்பித்ததும், குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வரும் அம்மா அந்த குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு கால்களை நீவிவிட்டு வலிக்குதாடா செல்லம்….….அம்மா மருந்து போட்டு விடுறேன். வலி போயிடும் என சொன்னவுடன் குழந்தையின் கண்ணில் அருவியாய் ஓடிய கண்ணீர் சட்டென நின்றுவிடும். காரணம் அம்மாவின் அன்பு மட்டுமல்ல. அதை வெளிப்படுத்திய விதம்! இப்படி அன்பை வெளிப்படுத்தும் விதத்தை வளர்ந்து நிற்கும் அம்மாக்களிடம் மட்டுமல்ல வளர்ந்து வரும் குழந்தைகளிடமும் கூட கற்றுக் கொள்ள முடியும். தலைவலிக்குது என படுத்துக் கிடக்கும் மனைவியிடம் மாத்திரை எடுத்துக்க….…..கொஞ்சம் ரெஸ்ட் எடு…………சரியாயிடும் என அன்பை போதனையாக தரும்போது அது தப்பு என்பதைப் போல தலைவலியோடு படுத்துக் கிடக்கும் அம்மாவின் தலையை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு தன் பிஞ்சுக்கரங்களில் தலைவலி தைலத்தை அள்ளி எடுத்து தடவத்தெரியாமல் தடவி அன்பை வெளிக்காட்டி நம்முடைய வெற்றுவார்த்தை போதனைகளை தூக்கி குப்பையில் போடச் சொல்லுகின்ற குழந்தைகள் நமக்கு அன்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்ற வித்தையை கற்றுத்தருகின்றனர். நாம் தான் கற்றுக்கொள்வதே இல்லையே!

பரஸ்பர அன்பு என்பது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், துயரங்களின் போது தோள் கொடுத்தல், சந்தோசங்களின் போது அவர்களைக் கொண்டாடுதல் எனபதில் தான் அடங்கி இருக்கிறது. இப்படியான வெளிப்பாடு அமைய வேண்டுமானால் நீங்கள் மற்றவர்களை உங்களைப் போலவே மதிக்கவும், நேசிக்கவும் பழகுங்கள். அவனோஅவளோ எனக்குரியவர் என்ற எண்ணம் கொள்ளுங்கள். இந்த மனப்பக்குவம் வந்து விட்டால் நீங்களும் புத்தனாக, காந்தியாக, தெராசாவாக மாறமுடியும். அந்த மாற்றத்தோடு அம்மாவைப் போல, குழந்தையைப் போல அன்பை வெளிப்படுத்தும் விதத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு வெற்றி கிடைக்கும் போது உற்சாகம் தரவும், தோல்வி கிடைக்கும் போது தோள் கொடுக்கவும் உதவும்.

நன்றி : பாக்யா வார இதழ்