Monday 31 December 2018

கெத்து!

ஓவியங்கள் வரைவதில் மகனுக்கு ஈர்ப்பு இருந்தது. உள்ளூரில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கு கொண்டு வந்தான். அந்த ஈர்ப்பை ஈடுபாட்டுடன் கூடியதாய் மாற்ற சில முயற்சிகளை அவ்வப்போது செய்து வந்தேன். அதன் தொடர்ச்சியாக பத்திரிக்கைகளுக்கு அனுப்பலாம் எனச் சொன்னபோது பிரசுரமாகுமா? என எதிர் கேள்வியை சந்தேகமாய் கேட்டான்.

அனுப்புவோம். பிரசுரமாவதைப் பற்றி இப்போது யோசிக்க வேண்டாம்? எனச் சொன்னேன்.

நான்கு படங்கள், நான்கு பத்திரிக்கைகள் என முடிவு செய்தோம். நான்கு படங்களை வரைந்து தந்தான்.

அனுப்பி வைத்து விட்டு வாரம் தவறாது பிரசுரமாகி இருக்கிறதா? எனத் தேடத் தொடங்கினேன். அதுவே ஒரு பிரசவ வலியாய் இருந்தது. அவனோ, அது பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. நேரம் கிடைக்கும் போது ஓரிரண்டு படங்களைத் தொடர்ந்து வரைந்து தந்து கொண்டிருந்தான்

அவைகளை அனுப்பாமல் காத்திருந்தேன். எதிர்பாராத ஒரு தினத்தில் வீடு வந்தபாவையர் மலர்இதழில்  அவனின் முதல் ஓவியம் பிரசுரமானது. அடுத்துதமிழ் இந்துவில் பிரசுரமானது. நான் நினைத்தது போலவே அவனிடம் ஒரு மாற்றம் தெரிய ஆரம்பித்தது.

முகநூலில் பதிவேற்றி அதற்கு வந்த வாழ்த்துகளையும், விருப்பக்குறிகளையும் அவனிடம் காட்டினேன். அச்சமயத்தில் எழுத்தாளர் சுப்ரஜா சார் அவர்கள் அவனை வாழ்த்தியதோடு உள்பெட்டியில் அவனுக்கு பரிசாய் புத்தகங்கள் அனுப்புவதாய் சொல்லி இருந்தார். அதை அவனிடம் சொன்னேன். கூடவே, சிங்கப்பூரில் நடந்த ஒரு பரிசுப்போட்டிக்கு தேர்வான என் கதைக்கான சிறப்புப் பரிசை நான் சுப்ரஜா சாரிடமிருந்து தான் பெற்றேன் என்றேன்

தம்பிக்கு மட்டுமல்ல பாப்பாவுக்குமாக புத்தகங்கள் அனுப்பி வைக்கிறேன். அவளின் பெயரையும் எனக்கு அனுப்புங்கள் என சுப்ரஜா சார் கேட்டிருந்தார். அதையும் அவனிடம் சொன்னேன். புத்தகத்தில் இருவரின் பெயரையும் எழுதி கையெழுத்திட்டு அனுப்புவார் என நினைத்திருந்தேன். நம்ம புத்திக்கு அம்புட்டு தானே எட்டும்!

சில தினங்கள் சென்றிருந்த நாளில் பள்ளியில் இருந்து திரும்பிய மகன் அலைபேசியில் அழைத்தான்.

என்ன? என்றேன்.

உங்க சுப்ரஜா சார்ட்ட இருந்து புக் வந்துருக்குஎன்றான்.

 ”அதான் தெரியுமே!” என்றேன்.

உங்களுக்குத் தெரியுங்கிறது எனக்கும் தெரியும். ஆனா, என் பெயரும், இலக்கியா பெயரும் எழுதி அட்ரஸ் போட்டு வந்திருக்கு. உங்க பேர் போட்டு வரல. அதான் கெத்துஎன்றான்.

இந்த "கெத்து" இருந்தா ஈடுபாடு வராமலா போகும்? அந்தகெத்தைவார்த்தையாலும், பரிசுப் பொருளாலும் மட்டுமல்ல அதைக் கொடுக்கும் விதத்திலும் படைப்பாளிக்குத் தர முடியும் என்பதற்கு இதை விட என்ன வேண்டும்?

1 comment:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete