Sunday 22 December 2019

அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு

 "அந்தமான் - செல்லுலார் சிறை ஒரு வரலாறு" குறித்து தன் நேரடி பயண அனுபவத்துடன் எழுத்தாளரும், காம்கேர் நிறுவனத்தின்  நிறுவனருமான உயர்திரு.  புவனேஸ்வரி  அவர்கள் முகநூலில் எழுதிய அறிமுகம்.

சென்ற வருடம் குடும்பத்துடன் அந்தமான் பயணம். அங்கு சுற்றுலா தளமாகியிருந்த அந்தமான் செல்லுலார் சிறையில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சி

அந்தமான் சிறையில் கொடுமைகளை அனுபவித்த நம் இந்திய வீரர்களின் தியாகத்தை உண்மை சம்பவம் போல நாடகமாக செய்து காண்பித்தார்கள்

நிகழ்ச்சி பொதுவாக மாலை நேரங்களில் மட்டுமே. ஏனெனில் அப்போதுதான் சிறை அறைகளில் விளக்கு வெளிச்சத்தைக் கொடுத்து எந்த அறையில் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்கள் பார்க்கவும் கேட்கவும் முடியும் என்பதால் அந்த ஏற்பாடு.

சிறைச்சாலை அறைகளில் இருந்து சிறை அதிகாரிகளின் கொடூரமான பேச்சுகளும், அவர்களின் பூட்ஸ் காலடி சப்தங்களும், அவர்கள் செய்கின்ற கொடூரங்களும், கைதிகளின் கூக்குரல்களும் நிஜமாகவே நடப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சி

நிகழ்ச்சியின் முடிவில் நானே சிறைச்சாலையில் இருந்தது போன்ற உணர்வும் வலியும் மிகுந்தது.

அந்த நினைவலைகளை கிளறிவிட்டதுஅந்தமான்செல்லுலார் சிறை ஒரு வரலாறுஎன்ற புத்தகம். நூலாசிரியர் திரு. கோபி சரபோஜியின் எளிமையான எழுத்து நடையில் நம் வீரர்களின் தியாகம் சித்தரிக்கப்பட்டுள்ளது

கைதிகளை இரும்பாலான முக்காலி சட்டத்தின் மீது படுக்க வைத்து கை கால்களை சங்கிலியால் கட்டிப் போட்டு தோல் உரிந்து சதை வெளியில் தொங்கும் அளவுக்கு சவுக்கால் அடிப்பார்களாம்...

கோணி ஊசியால் உடம்புடன் சேர்த்து ஆடையை தைப்பார்களாம்...

சாப்பிடும் உணவில் கல்லும் மண்ணும்... 

குடிக்கும் குடிநீரில் புழு பூச்சிகள்...

குளிப்பதற்கோ கடல்நீர்...

தூங்கும் அறையில் தேளும், பூரானும், எலியும் மூட்டைப் பூச்சிகளும் சர்வ சாதாரணமாய் அங்கும் இங்கும்.

வருடத்தின் ஏழு மாதங்கள் மழை மாதங்கள்... ஒழுகும் சிறை அறைகள்... நனைந்துகொண்டு ஈரத்துடன்தான் வாழ வேண்டும்...

உடல் சோர்ந்தால் கசையடிகள்... கொஞ்சம் எதிர்த்தால் நாக்கால் அதிகாரிகளின் பூட்ஸை துடைக்கும் தண்டனை...

நம் வீரர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா? தீவிர உண்ணாவிரதப் போராட்டம் செய்தனர். அதற்கும் சேர்த்து கொடூர தண்டனை கொடுத்தர்கள். பல வீரர்கள் நோயினாலும், தண்டனையினாலும் இறந்தனர். விடாப்பிடியான தீவிர போராட்டத்தில் இறுதியில் கைதிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

கைதிகளுக்கு புத்தகங்களும் பத்திரிகைகளும் வழங்கப்பட்டன.

கைதிகள் ஒன்றுகூடி புத்தகங்களை வாசிக்கவும், விவாதிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

தங்கள் குடும்பத்துக்கு கடிதம் எழுத அனுமதிக்கப்பட்டது.

இசைக் கருவிகள் தரப்பட்டன. ஓய்வு நேரங்களில் விளையாடவும் அனுமதிக்கப்பட்டனர்.

உணவு முறையிலும் மாற்றம் செய்தார்கள்.

சிறை அதிகாரிகளின் கொடூரங்களும் சற்று தளர்ந்தது.

அந்தமான் சிறையில் மாணவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என பல பிரிவுகளை சார்ந்தவர்கள் இருந்ததால் அவர்களைக் கொண்டு கல்வி வாரியம் ஒன்றை ஏற்படுத்தினார்கள். காலை மாலை என இரு வேலையும் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் வகுப்புகள் எடுக்கப்பட்டன. மொழி தெரியாதவர்களுக்கு அவரவர்கள் தாய்மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு பாடங்கள் தயாராகின

தாய்மொழியுடன் ஆங்கிலமும் இந்தியும் கற்றுக்கொடுக்கப்பட்டன. விடுதலைக்குப் பின்னர் அவர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்காக பேச்சுப் பயிற்சியும் எழுத்துப் பயிற்சியும் அளிக்கப்பட்டன. கைதிகளின் படைப்புகளை வெளியிடுவதற்காகவே Call என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார்கள்.

எங்கிருந்தால் என்ன? மொழியும் கல்வியும் எழுத்தும் வாசிப்பும் மட்டுமே மனித மனங்களை செழுமைப்படுத்தும் என்பதை உணர்த்தும்பாடசாலையான சிறைச்சாலைஎன்ற அத்தியாயத்தைப் படித்தபோது சொல்லணா மகிழ்ச்சி இழையோடியது.

நம் நாட்டு சுதந்திரம் அத்தனை சுலபமாய் கிடைத்துவிடவில்லை என்று நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சொல்ல அந்தமான் சிறைச்சாலையில் நம் சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களின் தியாகங்களை எடுத்துச் சொல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.



1 comment:

  1. நினைத்தாலே பயத்தை விட வேதனையாக உள்ளது....

    ReplyDelete