“நான் பார்க்கிற நேரமெல்லாம் கிளாஸ்
நடைபெறுகிற நேரத்துல இவனும்,
இவன் ஃப்ரெண்சும் வரண்டாவுல தான்
திரிவானுக. மிஸ்கிட்ட பெர்மிசன் கேட்டுட்டு தான்
வர்ரானுகளான்னு
தெரியல” என்று தன்
தம்பி மீது குற்றப் பத்திரிக்கை வாசித்து முடித்தாள் மகள்.
“முன்னாடி பார்த்திருப்ப. இப்ப
பார்த்தியா?” என மகன்
அவளோடு மல்லுக்கு நின்றான்.
அப்படின்னா, "இதுக்கு முன்னாடி கிளாஸ் நேரத்துல வெளியில சுத்திக்கிட்டு இருந்திருககேன்னு தானே அர்த்தம்" என மகனிடம் கேட்டேன்.
அது
ஒருகதை டாடி. இதுக்கு அதெல்லாம் தெரியாது என்றான்.
அப்படி என்ன கதை? என்றேன்.
மிஸ் கிளாசுக்கு வரும்போது சில நாள் சாக்பீஸ் எடுக்காமல் வந்துடுவாங்க கிளாஸ் ரூம்லயும் சாக்பீஸ் இருக்காது. அந்த சமயத்துல சாக்பீஸ் இல்லையா?ன்னு மிஸ் கேப்பாங்க. அப்படி கேட்டா போதும்.
நான்கைந்து பேர் கிளாஸ் ரூமில் இருந்து தெறிச்சு ஓடுவோம். பக்கத்து கிளாஸ் வாசல்ல ஆளுக்கு ஒருத்தரா போய் நிப்போம். ஸ்டாஃப் ரூமுக்கும் யாராவது ஒருத்தர் ஓடுவோம். யாருமே முழு சாக்பீஸ் வாங்கிட்டு வர மாட்டோம்.
"ஸ்டாப் ரூமிள தான் நிறைய சாக்பீஸ் இருக்கும்ல" என்றேன்.
இருக்கும். ஆனா முழு சாக்பீசும் எடுக்காமல் பாதி உடைஞ்சதை தான் எடுத்துட்டு வருவோம்.
ஏன்?
அப்பத்தானே அடு்த்த பீரியடுக்கும் ஓடலாம்.
இதே மாதிரி தான் டஸ்டருக்கும்! கிளாஸ் ரூம்ள மூனு டஸ்டர் இருக்கும். டஸ்டரைக் கிளீன் பண்ணச் சொன்ன உடனையே ஆளுக்கு ஒன்னைத் தூக்கிட்டு கிளாசுக்கு வெளியே வந்து தட்டிக்கிட்டே இருப்போம். ஐந்து நிமிடமாது ஆகிடும்.
மிஸ் பார்த்தாங்க. அன்னைக்கின்னு ஒரு புது சாக்பீஸ் பாக்ஸ் வாங்கிட்டு வந்து கிளாஸ் ரூமுக்குள்ளே வச்சிட்டாங்க. அதே போல மூனு டஸ்டர்ல இரண்டைத் தூக்கி வீசிட்டு ஒன்னை மட்டும் வச்சுட்டாங்க.
"இனிமேல் எவனாவது கிளாச விட்டு ஓடு அப்புறம் இருக்குன்னு சொல்லிட்டாங்க. அதுனால இப்ப கிளாஸ் நேரத்துல எங்கேயும் போறதில்ல டாடி" என்றான்.
என்ன செய்ய? என் பள்ளி நினைவுகளை மீண்டும் ஒருமுறை பதியம் போட்ட படியே உறங்கப் போனேன்.
அட...!
ReplyDelete