Sunday, 29 December 2019

வரை ஓவியமும் – வாழ்த்து வாசகமும்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நண்பர்கள், உறவினர்களின் இல்ல நிகழ்வுகளில் அதுவும் குறிப்பாக திருமணங்களில் பல வண்ணங்களில்வடிவங்களில்வகைகளில் சுவர்கடிகாரங்கள் அன்பளிப்பாய் வரும். அதற்கு பேட்டரி வாங்கிப் போட்டு மாள முடியாது என்பதால் பலரது வீடுகளிலும் அவைகள் பரண் ஏறிக் கிடக்கும். இவைகளை எல்லாம் பார்க்கும் பாக்கியம் கிட்டியதாலோ என்னவோ எதன் பொருட்டும்  எங்களிடமிருந்து சுவர்கடிகாரங்கள் எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டோம். அதற்குப் பதிலாக கடைகளில் வாழ்த்துமடல்களை வாங்கி அன்பளிப்பாய் கொடுத்து வந்தோம்ஒரு நண்பரின் திருமணத்தில் எங்களைப் போலவே வேறு சில நண்பர்களும், உறவினர்களும் அப்படியான வாழ்த்துகளை வாங்கித் தந்திருந்தனர்ஒரே மாதிரியான இந்த வாழ்த்துகளை நண்பர் என்ன செய்வார்? என்ற கேள்வி அன்றிரவு முழுக்க மண்டைக்குள் மணியடித்துக் கொண்டே இருந்தது.  நிச்சயம் அவைகளைப் பரண் ஏற்றுவார் என்றே தோன்றியது. அதனால், சுவர்கடிகாரங்கள் வரிசையில் கடைகளில் விற்கும் அன்பளிப்பு வாழ்த்துகளும் சேர்ந்தன.

தனித்தும், தனிப்பட்டும் அன்பளிப்பு தெரிய வேண்டும். பட்ஜெட்டும் எகிறி அடிக்கக்கூடாது. என்ன செய்யலாம்? என்ற யோசனை தேடல்களாய் மாறிக் கொண்டிருந்தது. கவிதை வாசிப்பு நுகர்வு கொஞ்சம் இருந்ததால் சம்பந்தப்பட்ட திருமணத் தம்பதிகளின் பெயர், திருமணத்தேதி, கிழமை உள்ளிட்ட விசயங்கள் அடங்குமாறு சுயமாக வாழ்த்துகளைத் தயார் செய்து அச்சு எழுத்தாக்கி அன்பளிப்பாய் கொடுத்து வந்தோம். இந்த அன்பளிப்பு முறையை வேறு சில நண்பர்களும் பின்பற்ற ஆரம்பித்தனர். இதனால்  எங்களின் அன்பளிப்புக்கென இருந்த தனித்த அடையாளங்கள் மங்க ஆரம்பித்தது. பத்தோடு பதினொன்றாய் என்ற நிலைக்கு வந்து சேர்ந்தது.

விருந்து ஒன்றில் கையினால் சாப்பிட்ட நம் குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர். இராதாகிருஷ்ணனிடம் கரண்டியால் சாப்பிடாமல் கையால் சாப்பிடுகிறீர்களே?. கரண்டியால் சாப்பிடுங்கள். அது தான் சுகாதாரமானதுஎன வின்ஸ்டண்ட் சர்ச்சில் சொன்னாராம். அதற்கு இராதாகிருஷ்ணன், ”என் கையை என்னைத் தவிர மற்றவர்கள் உபயோகப்படுத்துவதில்லை. அதனால் கரண்டியை விட என் கை அதிக சுகாதாரமானதுஎன்று பதில் கூறினாராம். எங்கோ படித்த இந்த நிகழ்வு நினைவுக்கு வர வாழ்த்துகளை அச்சு எழுத்துக்குத் தராமல் என் சொந்தக் கையெழுத்தில் எழுதி சட்டத்திற்குள் அடக்கிக் கொடுத்து வந்தோம். ”கையெழுத்து நல்லாயிருந்தால் தலை எழுத்து நல்லாயிருக்காதுஎன்பது எங்கள் பகுதி சொலவடை. தலை எழுத்தை விட்டுத்தள்ளுங்கள். என் கையெழுத்து அத்தனை மோசமில்லை என்பதால் அப்படி எழுதித் தருவதற்கு வீட்டில் மறுப்பு ஏதும் இருக்கவில்லை. பல நண்பர்களின் வீட்டுச் சுவர்களில் எங்கள் அன்பளிப்பு வாழ்த்துகளும் இடம் பிடித்திருந்தது. அவர்களின் வீடுகளுக்குச் செல்ல நேரும் பொழுதெல்லாம் அவைகளைப் பார்த்த நொடி மனசுக்குள் ஒரு மென்கர்வம்  ஊடேறி ஓடும்

வருடங்கள் உதிர, உதிர நவீனங்கள் பூக்க ஆரம்பித்தன. எழுத்துகள் அச்சுக் கோர்ப்பில் இருந்து கணினிக்கு மாறின. வர்ணங்கள் வாகைசூடி நின்றன. இதனால் கை எழுத்து அன்பளிப்புகளை தரும் யோசனையை கழுவிலேற்ற வேண்டியதானது. உஜாலாவுக்கு மாறிட்டேன் கதையாய் நாங்களும் எங்கள் அன்பளிப்பு வாழ்த்துகளை நவீனத்துக்கு நகர்த்தினோம். சம்பந்தப்பட்ட திருமண தம்பதிகளின் புகைப்படத்தை  முன்னரே வாங்கி எங்கள் ரசணைக்கும், எண்ணத்திற்கும் ஏற்ப வடிவமைப்புச் செய்து அதில் ஹைக்கூ போல இரண்டு வரிகளையும், எங்கள் பெயர்களையும் இணைத்து கொடுத்து வந்தோம். பல நண்பர்களின் வரவேற்பறை அலமாரிகளில் அவைகள் இடம் பிடித்தன

மல்டி பிளக்ஸ் பேனர் உலகம் தன் சிறகை விரிக்கத் தொடங்கியதும் எங்கள் புகைப்பட அன்பளிப்பு வாழ்த்துகள் சாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டன. மீண்டும் கடைகளில் அன்பளிப்புப் பொருட்களைத் தேட ஆரம்பித்தோம். இம்முறை கைவினைப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து திருமண நிகழ்வுகளில் அன்பளிப்பாய் கொடுத்தோம். ஆனால், அவைகளின் விலை விரலுக்கேற்றதாய் இருக்கவில்லை. அதனால் அந்தப் பக்கம் நீண்ட நாள் நிற்க முடியவில்லை. புத்தக அன்பளிப்பை சிலகாலம் செய்து வந்தோம். சில நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புத்தக அன்பளிப்புகள் லயிக்கவில்லை, அதனால் மாற்று அன்பளிப்பு குறித்து யோசிக்க வேண்டிய அவசியம் உருவானது.

அந்த நேரத்தில், ஓவியர் ஆனந்த் அவருடைய முகநூல் பக்கத்தில் தான் வரைந்திருந்த சில பென்சில் ஓவியங்களை பதிவேற்றம் செய்திருந்தார். புகைப்படத்தை விட வரை ஓவியம் இன்னும் ஈர்க்கும். அப்படியான அன்பளிப்பு பத்தில் ஒன்றாய் நிச்சயம் நிற்கும் எனத் தோன்றியது. நண்பர் என்பதற்காக அவரிடம் வரையக் கொடுக்கும் ஓவியத்திற்கு பேரம் பேசி விடக்கூடாது. அப்படியான சூழல் உருவாகி விடக்கூடாது என்ற எண்ணம் தடையாக இருந்ததால் இதுபற்றி ஓவியர் ஆனந்திடம் கலந்துரையாட ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. அந்த சமயத்தில் என் புத்தகங்களின் பதிப்பாளரும் - கற்பகம் புத்தகாலயத்தின் நிறுவனருமான திரு. நல்லதம்பி அவர்கள் தன் மகனின் திருமண அழைப்பிதழை அனுப்பி இருந்தார். நேரில் பங்கேற்க இயலாத நிலையில் நிகழ்விற்கு வாழ்த்து அன்பளிப்பை அனுப்ப நினைக்கையில் தயக்கம் தானே உடைந்து விழுந்தது.

தயக்கத்தை தள்ளி வைத்து விட்டு ஓவியர் ஆனந்திடம் எங்கள் யோசனையைச் சொன்னேன். ”நல்ல யோசனை. புகைப்படத்தை அனுப்புங்கள்என்றார். வரைகூலியும் பணப்பையை பதம் பார்க்காத நிர்ணயத்தில் இருந்தது. “வரை ஓவியமும், வாழ்த்து வாசகமுமாய்இருந்த அந்த அன்பளிப்பு அற்புதமாய் உருப்பெற்றிருந்ததுஇனி ஒரு புது வாசல் திறக்கும் வரை இதையே தொடர்வது என்ற திட்டத்தின் அடிப்படையில் மகளின் தோழி திருமணத்திற்கு வரை ஓவியமும்வாழ்த்து வாசகமுமாய் இன்றும் ஒரு அன்பளிப்பு கொடுத்தோம்.

இப்படியான அன்பளிப்புகளைச் செய்தால் -

நீங்கள் நேசிப்பவருக்கோ, உங்களின் நண்பருக்கோ மறக்கவியலா அன்பளிப்பு தந்த திருப்தியும்

ஒரு ஓவியனுக்கு பணி தந்ததோடு, அவன் திறமையை இன்னும் சிலருக்கு எடுத்துச் சென்ற திருப்தியும் கிடைக்கும். முன்னது சுயநலம். பின்னது பொதுநலம். இரண்டும் இருப்பவனை இந்த சமூகம் கொண்டாடும் என்பது வரலாறு. நமக்கெல்லாம் வரலாறு முக்கியமில்லையா?!

1 comment: