Saturday 28 December 2019

சுய சரிதை எனும் “சொரிதல்கள்”

கவிஞர். வைரமுத்து தன் சுய சரிதையின் இரண்டாம் பாகத்தை எழுத அனுமதி கேட்ட போது அப்போதைய ஆனந்த விகடனின் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள்வேண்டாம்எனச் சொல்லி விட்டாராம். முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகத்தில் உண்மைத் தன்மை இருக்காது என்பதை காரணமாகச் சொன்னாராம்அதன் பிறகேகள்ளிக்காட்டு இதிகாசம்எழுத ஆரம்பித்தார். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூலின் பிந்தைய பாகங்களில் அவர் உண்மைகளை மேம்போக்காகச் சொல்லிச் சென்றதால் அதில் அத்தனை லயிப்பில்லை என சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்

சுய சரிதைகளில் பல உண்மைகளைச் சொல்ல வேண்டும் என்பதாலயே ஆர்.வி. வெங்கட்ராமன், சோ ராமசாமி, டி.என்.சேஷன் ஆகியோர் வாய்ப்பும்வசதியும் இருந்தும் அதைச் செய்யவில்லை என வாசித்திருக்கிறேன்சுய சரிதை எழுதுவது என்பது அவ்வளவு சிக்கலானது. சிலாகித்து எழுத முடியாதது

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை இன்னொருவர் எழுதும் போது அதில் பொதுவான விசயங்கள், அறியப்பட்ட நிகழ்வுகள் அதிகம் இருக்கும்அதையே சம்பந்தப்பட்டவர் சுயசரிதையாக எழுதினால் பலரையும் சங்கடப்படுத்த வேண்டி வருமோ? என்ற தயக்கம் வந்து விடும். இந்த தயக்க தடுமாற்றம் சுயசரிதைகளை சக்கையாக மட்டுமே விரிக்க வைக்கின்றன. இதனால் தான் வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்ட அளவிற்கு சுயசரிதை நூல்கள் எழுதப்படவில்லை. தன்  சுயசரிதையை தன் காலத்திலேயே எழுதி விட நினைப்பவர்கள் கூட வாழ்க்கை வரலாறாகவே பதிவு செய்கின்றனர். இப்படியான நிலையில் தன்னம்பிக்கை நூல் வரிசையில் உச்சம் தொட்ட ஒருவரின்  சுயசரிதை நூலை வாசிக்க நேர்ந்தது. அவரே எழுதியது.  

வச்சு செய்து விட்டது. பதிப்பாளர்களால், சக எழுத்தாளர்களால் தான் ஏமாற்றப்பட்டதையும், தான் ஏமாறியதையும் ஒற்றை வரி விவரணையில் நிரப்பி இருந்தார். அதேநேரம் சம்பந்தப்பட்டவர்களின் பெயரையும், பதிப்பகத்தின் பெயரையும் கவனமாய் தவிர்த்திருந்தார். அவர் மறைமுகமாய் கோடிகாட்டும் பதிப்பாளர் இன்றும் பல நூறு புத்தகங்களை பதிப்பித்துக் கொண்டுதான் இருக்கிறார். எஞ்சிய பக்கங்களை பிரபலமானவர்களோடு, பிரியமானவர்களோடு தான் டீ குடித்ததை, இணைந்து நடந்து வந்ததைக் கொண்டு நிரப்பி இருந்தார். சுயசரிதை எழுதுபவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களை அடையாளப்படுத்துவதில் காட்டும் அக்கறையை விட்டு விட்டு அவர்கள் மூலம் தன் வாழ்வு எப்படியெல்லாம் மாறியது எனச் சொன்னால் வாசிப்பவர்களுக்கு தன்னம்பிக்கை உணர்வையாவது அது தரும்.

சுயசரிதை எழுதுபவர்கள் ஆர்வ மிகுதியால் எல்லாவற்றையும் எழுத நினைப்பது தப்பில்லை. அது அவர்களின் உரிமை. ஆனால் அதை அச்சாக்கி பொது வெளியில் கொண்டு வரும் போது எழுதியவரின் சந்தோசம் வாசிப்பவர்களின் துன்பமாகி விடுகிறது. எழுதியதை பட்டி, டிங்கரி கூட பார்க்காமல் அப்படியே பதிப்பித்துத் தரும் நவீன பதிப்பாளர்கள் வீதிக்கு வீதி இருக்கிறார்கள். போதாக்குறைக்கு சுயமாய் பதிப்பிக்கும் வசதிகள் இன்று சாத்தியமாகி விட்ட நிலையில் சுய சரிதைகளை வாங்கி வாசிப்பது சவாலான விசயமாகவே இருக்கும். வாசிக்கத் தகுந்த சுயசரிதைகளின் பட்டியலை எவரேனும் வரிசைப்படுத்தினால் பலருக்கும் உதவும்

சுயசரிதைகள் சுயம்புவாய் எழ வேண்டும், அதற்கு நிரம்ப தைரியம் வேண்டும். சுயசரிதை வாசிப்பவனுக்கு எதையாவது சொல்ல வேண்டும். அப்படியில்லாமல் எழுதியவரின் சுய சொரிதல்களாக இருந்தால் என்ன செய்வது? 2020 ல் போகிக்கு முதல் பலி தரவேண்டியது தான்! அப்படியான பலியிடலுக்கு என் நூலக அடுக்கில் இருந்து இந்த வருடம் மூன்று நூல்கள் எனக்கு கிடைத்தது. நீங்களும் உங்கள் நூலக அடுக்குகளில் தேடிப் பாருங்கள். உங்களுக்கும் கிடைக்கக்கூடும்

உனக்குக் கிடைத்த மூன்று சுயசரிதை நூலை எழுதியவர்களின் முகம் காட்டு. முகவரி கொடு என்றெல்லாம் கேட்காதீர்கள். இங்கு அதெல்லாம் தேவையில்லை என நான் நினைக்கிறேன். உங்களுக்குத் தேவை எனில் இந்த வருட புத்தகக் கண்காட்சியில் கொஞ்சம் மெனக்கெட்டால் கண்டடைந்து விட முடியும்.

No comments:

Post a Comment