Wednesday 28 April 2021

வரலாறு ஒரு தேனாறு – பெரும் வறட்சி

 

கல்லூரி காலங்களில் நான் மிகுந்து வாசித்த தன்னம்பிக்கை எழுத்தாளர்களில் மெர்வின் குறிப்பிடத்தக்கவர். நிறைய தகவல்களோடு கட்டுரைகளை எழுதுவார். இன்றும் சில சந்தர்ப்பங்களில் அவருடைய நூல்களை எடுத்து வாசிப்பதுண்டு. நண்பர் மூலமாக அவருடைய சமீபத்திய நூல் ஒன்று வாசிக்கக் கிடைத்தது. நூலின் பெயர்  “வரலாறு ஒரு தேனாறு”.

அவரின் முந்தைய நூல்களை வாசித்திருந்தவன் என்ற முறையில் மனதில் இருந்த முன்முடிபோடு இந்த நூலையும் வாசிக்க ஆரம்பித்தேன். பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. இந்நூல் அவரின் சுயசரிதையா? அவர் உதவி செய்தவர்களின் பட்டியலா? அவருக்கு உதவி செய்தவர்களுக்கான நன்றி நவிலலா? தன் ஏமாற்றத்தையும், தன்னை ஏமாற்றியவர்களையும் (அதில் கூட சிலர் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை) பட்டியலிடுகிறாரா? தான் சார்ந்த கிறிஸ்தவ மதத்தை உயர்த்திப் பிடிக்கிறாரா? அவரின் புகைப்பட ஆல்பமா? என்று ஒரு முடிவுக்கு வராத வகைமையில் புத்தகம் இருக்கிறது. ஒரு புத்தகம் வாசிக்கிறவனை எதிர்வினையாற்ற வைக்கலாம். அதுவே, எதிர்நின்று இத்தனை கேள்விகளை எழ வைத்தால் என்ன செய்வது?

வாங்கப்போகிற புத்தகத்தை லேசாக ஒரு புரட்டு புரட்டிப் பார்த்து வாங்கும் வசதி இருப்பதாலயே கண்காட்சிகளிலும், கடைகளிலும் நேரில் சென்று புத்தகங்கள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறேன் என நண்பர் ஒருவர் சொன்னதன் அர்த்தம் இப்படியான நூல்களை வாசிக்கும் தருணங்களில் உண்மையாகிப் போகிறது.

இப்படியான புத்தகங்களை தன் குடும்ப நிகழ்வுகளுக்கு வேண்டுமானால் அதன் ஆசிரியர்கள் இலவசமாகத் தரலாம். நன்றி தெரிவிப்பதையெல்லாம் ஒரு நூலாக்கி, புகைப்படங்களால் பக்கங்களை நிரப்பி, விலை நிர்ணயித்து பொது வெளிக்கு அனுப்பி வாசிக்கத் தந்தால்  நம்பி வாங்கும் வாசகனுக்கு அதை விட துயரம் என்று வேறு எதையும் சொல்ல முடியாது.

வரலாறு ஒரு தேனாறு தலைப்பு மட்டுமே. நூல் முழுக்க கடந்து போக முடியாத அளவுக்கு பெரும் வறட்சி!


 

No comments:

Post a Comment