வரலாற்றின் எச்சங்களாய் நிற்பவைகளையே இன்றைய நினைவுகளின் மிச்சங்களாய் பாதுகாத்து வருகிறோம். அவைகள் நம் மண்ணின் தடயங்களாக நின்ற போதும் அதன் கீழ் இருப்பவைகளில் ஆயிரமாயிரம் புது தகவல்களும், மர்மங்களும், வியப்புகளும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அழகன்குளம், தேவிபட்டிணம், அரிக்கமேடு, கீழடி ஆய்வுகள் இதைத் தான் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆவணங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள், சமகால வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவைகளில் சூழ் கொண்டு கிடக்கும் தகவல்கள் நம் மண்ணின் சிதைந்த அடையாளங்களை நமக்கு மீட்டெடுத்து தருகின்றன. மனதளவில் நம்மை கொண்டு செலுத்துகின்றன. அப்படி சேது சீமையின் (இன்றைய இராமநாதபுரம்) முந்தைய காலத்திற்கும், களத்திற்கும் நம்மை அழைத்துச் செல்லும் நூல் “மண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்”. விகடன் பிரசுரம் வழி வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் ஜெகாதா. சமீபத்தில் வெளியான என்னுடைய “தமிழகப் பாளையங்களின் வரலாறு” நூலுக்காகத் தரவுகளைத் தேடிய சமயத்தில் இந்நூல் வாசிக்க கிடைத்தது.
சேதுபதி மன்னர்களின் நீதி பரிபாலணம், ஆலயங்கள், பிற மத வழிபாடுகளுக்கு அவர்கள் கொடுத்த நன்கொடைகள், நாணய செலவாணி முறை, சேதுசீமையில் இருந்த துறைமுகங்கள், அதன் வழி எல்லைகள் கடந்து நடைபெற்ற வணிகங்கள், டச்சு, போர்ச்சுகீசிய, ஆங்கிலேய அரசுகளுடன் இருந்த உறவு, வரி விதிப்பு முறைகள், படையெடுப்புகள், மன்னர் குடும்பங்களுக்குள் நிகழ்ந்த உள்ளடி வேலைகள், கோட்டை, கொத்தள விபரங்கள், சீதக்காதியுடன் இருந்த தொடர்பு, இலக்கியங்களுடன் சேதுமண்ணுக்கான பிணைப்பு, சேதுசீமையில் கிறிஸ்தவ மதம் பரவிய விதம், சமீபத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வுகள் என அனைத்தும் சேர்ந்த வரலாறாய் இந்நூல் அமைந்திருக்கிறது.
ஆலயங்களில் சேதுபதிகளுக்கு ஒரு கட்டளை. மற்றவர்களுக்கு ஒரு கட்டளை இருந்து வந்தது.
இராமேஸ்வரம் கோவிலில் பூஜைகள் செய்ய தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பிரிவினரும், வடநாட்டு மக்களுக்கு ஒரு பிரிவினரும் இருந்ததோடு, அவர்களுக்கான வருவாயை பிரித்துக் கொள்வதில் பிணக்கும் இருந்தது.
சேதுநாடு 2368 ஊர்களைக் கொண்டிருந்தது. “பிள்ளைக் குழி” என்ற ஒரே நில அளவை முறை பின்பற்றப்பட்டது.
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் இலங்கையில் உறுதியானதும் இராணுவ சேவைக்காக இராமேஸ்வரத்தில் இருந்து பெரிய தோணிகளில் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
யார் சேதுபதியாக முடிசூட்டப் பட வேண்டும் என்ற அதிகாரம் வெள்ளையன் சேர்வைக்காரர் என்ற தளவாய் வசம் இருந்தது. அவரே மதுரை மீனாட்சி அம்மன் சிலையையும், சுந்தரேசுவரரையும் இஸ்லாமிய படையெடுப்பில் இருந்து காத்தார்.
தனுஷ்கோடியில் ‘ஹிரண்ப கர்ப்பதானம்” (பசுவின் வயிற்றில் இருந்து மனிதன் பிறப்பது) நிகழ்த்தப்பட்டது.
சமீபத்தில் சூயஸ் கால்வாயில் கரை தட்டி நின்ற கப்பலின் மீட்பு முயற்சிகள் பற்றி அறிந்திருப்போம். இதே போன்ற ஒரு நிகழ்வு சேதுசீமையில் அப்போது நிகழ்ந்திருக்கிறது. பாம்பன் கடல்வழிப் பாதையில் 1,20,000 மதிப்புள்ள சரக்குகளுடன் மூழ்கிய “எலிசா” சரக்குக் கப்பலை 14 படகுகள் உள்பட 308 பேர் சேர்ந்து மிதக்க விட்டனர்.
மதுரை திருமலை நாயக்கர், இராமநாதபுரம் சடைக்கண் சேதுபதியுடன் நிகழ்ந்த போரில் போர்ச்சுகீசியர்கள் தனக்கு ஆயுத உதவிகள் அளிக்க நிபந்தனையாக பாம்பனுக்கும், தொண்டிக்கும் இடையே ஒன்பது கிறிஸ்தவ ஆலயங்களை அமைத்துக் கொள்ள அனுமதி அளித்தார்.
தன் உறவினர்களை மத மாற்றம் செய்த பாதிரியாரை சேதுபதி மன்னர் ஓரியூர் கோட்டைக்கு அனுப்பி வெட்ட வெளியில் தலையைத் துண்டித்து கொலை செய்தார்.
இன்று வருமானமற்ற வறண்ட பகுதியாக இருக்கும் தொண்டியில் இருந்த துறைமுகத்தில் தான் பாய்மரப் படகுகளில் காரைக்குடி பகுதி செட்டிநாட்டு வீடுகளுக்கான பர்மா தேக்குகள் வந்திறங்கின.
மன்னராக முடிசூட்டப்பட்டவர் கும்பெனியை பகைத்துக் கொண்ட ஒரே காரணத்திற்காக 14 ஆண்டுகள் சிறைவாசம் செய்யப்பட்டார்.
கிழவன் சேதுபதி இறந்த போது அவருடைய 47 மனைவியரும் உடன்கட்டை ஏறினர்.
போர்களில் பயன்படுத்துவதற்காக வாங்கப்பட்ட குதிரைகளை, வளர்க்கும் முறை தெரியாததால் தமிழ் மக்கள் அவற்றிற்கு நெய் கலந்த பார்லியையும், பசுவின் பாலையும் கொடுத்து கொட்டிலில் அடைத்து வைத்து கொழுக்க வைத்தனர். அதன் பிறகே குதிரைகளை பராமரிக்க அரேபிய வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஜமீன் ஆட்சி முறை அமலானதும் இம்மண்ணின் கோட்டைகளை இடித்து தரைமட்டமாக்க 32398 – 10.40 ஆற்காடு பணம் செலவழிக்கப்பட்டது. இதுதவிர, சிறு கோட்டைகளை இடிக்க, ஆயுதங்களைத் திரும்பப் பெற செலவழிக்கப்பட்ட பண மதிப்புகளையும் ஆவண குறிப்புகள் மூலம் தருகிறார்.
இப்படியாக தொகுப்பின் 59 கட்டுரைகளுக்குள் சிற்சில வரிகளில் இருக்கும் குறிப்புகளும், தகவல்களுமே மறவர் சீமை மர்மங்களை நமக்கு வெளிச்சமிடுகின்றன.
செப்பேடுகள், கல்வெட்டுகள், அகழ்வாய்வு ஆவணங்கள், காப்பக ஆவணங்கள் ஆகியவைகளை கட்டுரைகளுக்கான தரவுகளாக பயன்படுத்தியிருந்த போதும் நாட்குறிப்பின் குறிப்புகளைப் போல பெரும்பகுதி கட்டுரைகளை முடித்திருப்பதும், சொல்லப்பட்ட தகவல்களை மீண்டும், மீண்டும் அடுத்தடுத்த கட்டுரைகளுக்கு பயன்படுத்தியிருப்பதும் இந்நூலை சேதுசீமையைப் பற்றிய முழுமையான வரலாற்று நூலாக மாற்றவில்லை. அதேநேரம், புதிதாக சேதுமண் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு வாயிலாக இருக்கும்.
No comments:
Post a Comment