Thursday 13 May 2021

நேரம் நல்ல நேரம் – விழிப்புணர்வு

தன்னம்பிக்கை நூல்களுக்கான விற்பனை வரிசை என்பது எல்லா வருடங்களிலும் சீராகவே இருக்கும் என பதிப்பாளர்கள் சொல்லும் அளவுக்கு அவைகள் தரும் நம்பிக்கைகளும் தேவையாகவே இருக்கிறது. அந்த வகையில் நேரம் சார்ந்த விழிப்புணர்வைத் தரும் இந்நூல் சிறந்த நேர நிர்வாகியான லேனா தமிழ்வாணன்  அவர்களால் எழுதப்பட்டது என்பது இதன் சிறப்பு. மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.

தமிழில் எழுதப்பட்டிருக்கும், எழுதப்படும் தன்னம்பிக்கை நூல்களில் பெரும்பாலானவைகள் இரண்டு வகையான டெம்ப்ளேட்டுகளை மட்டுமே கொண்டிருக்கும்.

முதல்வகை, ஜெயித்தவர்கள் – சாதித்தவர்களின் வாழ்விலிருந்து மேற்கோள்களைக் காட்டி அதன் வழியாக வாசிப்பவனுக்கு நம்பிக்கை தருவது. இரண்டாவது வகை, பிற உதாரணங்களை மேற்கோள் காட்டாமல் தன் சுய அனுபவ வார்த்தைகள் மூலம் வாசகனுக்கு நம்பிக்கை ஊட்டுவது. இதில், இரண்டாவது வகையைச் சேர்ந்தது இந்நூல். இந்த யுக்தி தான் லேனா தமிழ்வாணன் அவர்களுடைய படைப்பின் அடையாளம் எனலாம்.

முதல்வகை டெம்ப்ளேட் வகை நூல்களில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஒரு நூலில் வாசித்த அல்லது அறிந்த விசயங்கள் இன்னொரு நூலிலும் உதாரணமாய் உட்கார்ந்திருக்கும். இரண்டாம் வகை டெம்ப்ளேட் நூல்களில் இந்த துயரம் இருக்காது. அதனால் லேனா அவர்களுடைய நூல்களின் வாசிப்பு என்பது கூறியது கூறல் மனநிலையை ஒரு போதும் தருவதில்லை. இந்நூலும் அதற்கு விதிவிலக்கல்ல.

பணத்திற்குத் தரும் மதிப்பை நம்மில் பலரும் நேரத்திற்குத் தருவதில்லை. உண்மையில் நேரம் தான் உங்களின் பண மதிப்பை உயர்த்துவதற்கான சூட்சுமத்தை வைத்திருக்கிறது என்பதே இந்நூலின் சாரம். நேரத்தைச் சரியாக கையாளததால் எதையெல்லாம் இழக்கிறோம் எனச் சொல்லும் ஆசிரியர் எதையெல்லாம் சரியாகச் செய்தால் நேரத்தை மிசப்படுத்தலாம் என்பதையும் தெளிவாகவே அறிவுறுத்துகிறார்.

நேரத்தை எங்கெல்லாம் யோசிக்காமல் செலவழிக்க வேண்டும், எங்கெல்லாம் கஞ்சத்தனம் காட்ட வேண்டும் என்பதை நம் வீட்டு நிகழ்வுகளையும், அன்றாடச் செயல்பாடுகளையும் உதாரணமாக்கி நமக்குள் உறைக்க வைக்கிறார்.  எல்லாவற்றையும் நானே செய்வேன். அவனுக்கு / அவளுக்கு எதுவும் தெரியாது என பொதுப் புத்தியாய் யோசிப்பதாலும், குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாத விசயங்களைக் கற்றுத் தர தவறுவதாலும் இழக்கும் நேரத்தை மடை மாற்றி வாழ்வில் உயர  எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை ஆசிரியர் அடிக்கோடிட்டு காட்டும் போது ஏன் இப்படி இருந்தோம்? இருக்கிறோம்? என்ற நினைப்பு நமக்குள் உருவாகிறது.

ஒரு வேலையை எப்படி செய்வது? சிறு சோம்பேறித்தனத்தால் செய்யாமல் விட்ட வேலைகள் எவ்வளவு நேரத்தை வீணாக்குகிறது? நேரம் வீணாவது தெரியாமலே எங்கெல்லாம் சும்மா உட்கார்ந்திருக்கிறோம்? அந்த நேரத்தை எப்படி பயனுள்ள வழியில் பயன்படுத்துவது? பிறர் நம்முடைய நேரங்களை எப்படி திருடுகிறார்கள்? என்ற கேள்விகளின் வழியே நேர சேமிப்பின் அவசியத்தையும், அதில் நாம் காட்டி வரும் அலட்சியங்களையும் கண் முன் விரித்த படியே ஒவ்வொரு தலைப்பும் நகர்கிறது.

நேரத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும், நேர சேமிப்பின் வழி நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்குமான குறிப்புகளைத் தரும் கையேடு நேரம் நல்ல நேரம். நேரமிருப்பின் வாசித்துப் பாருங்கள்.

1 comment:

  1. நேரத்தின் அருமை குறித்த அவருடைய சொற்பொழிவை இரண்டுமுறை கேட்கும் வாய்ப்புக்கிட்டியது...முடிந்தால் இதையும் வாங்கிப்படிக்க ஆவல்...அருமையான விமர்சனம்..வாழ்த்துகள்..

    ReplyDelete