(இரண்டு செங்கல்)
சூனியனைத் தூக்கி எறிந்து விட்டு சனிக்கோளம் நோக்கிப் போவதோடு மரணக் கப்பலின் கதையும், அந்த உலகத்தின் கதையும் முடிகிறது. தன் சாகசங்களால் தூசியினும் சிறிதாய் மாறி உயிரோடு நம் எதார்த்த உலகத்திற்குள் சுங்கச்சாவடி வழியாகவே வரும் சூனியன் கோவிந்தசாமி என்பவனின் உடம்பில் கூடு பாய்ந்து கொள்கிறான். தினத்தந்தி நாளிதழின் அன்றாடச் செய்தி கோர்வையாய் இருக்கும் துயரங்களால் சூழப்பட்ட வாழ்க்கை கோவிந்தச்சாமியினுடையது. அவன் பெயரை அறியும் முயற்சியில் சூனியனே அயர்ந்து போகிறான் என்றால் மற்றதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
தன் துயர வாழ்விலிருந்து விலகி புதிய பயணத்தை அவன் தொடங்குகிறான். சாமியும், சாமியார்களும் வழிகாட்ட இராமேஸ்வரம், தங்கச்சிமடம் என தென்கோடிக்கு ”பக்தனாக” வருகிறான். அங்கிருந்து இராமநாதபுரம் வந்து ஜம்புலிங்கத்தைச் சந்தித பின் ”பக்தாளாக” மாறிவிடுகிறான். பக்தாளுக்கான அத்தனை கைங்கரியங்களும் அவனுக்குப் போதிக்கப்படுகிறது. கரசேவைக்கு சென்று திரும்பிய கரசேவகர்கள் சொன்ன கதையைக் கேட்டவன் என்ற முறையில் கோவிந்தசாமியை இரசிக்க முடிந்தது! சுதேசிகள் எல்லோருமே ஒரு சிறு பத்திரிக்கையை நடத்துவார்கள்: நடத்தியிருப்பார்கள் என்ற வழக்கத்திற்கு கோவிந்தசாமியும் தப்பவில்லை.
கரசேவா செல்லும் புகைவண்டி பயணத்தில் கோவிந்தசாமி சந்திக்கும் பத்திரிக்கையாளர் சாகரிகாவுக்கும் ஒரு ப்ளாஷ்பேக் வருகிறது. அரசியலும், அயோத்தியும் கலந்து பகடியோடு நகரும் அவர்களின் உரையாடல் ஆரம்பத்தில் ஒருதலையாகவும், பின்னர் மனம் ஒத்த காதலாகவும் மலர்கிறது. கரசேவகன் காதல் சேவகானாக மாறி அதன் உச்சத்தில் சாகரிகா இன்னொருவனிடம் சுமந்திருந்த கருவை கழைத்து விட்டு கரம் பற்றுவது நவீன சினிமா சூத்திரம்!
கோவிந்தசாமியின் போதாத காலமோ என்னவோ 17 ம் நாளிலே கணவன், மனைவிக்கிடையே சண்டை ஆரம்பித்துவிடுகிறது. அப்பொழுது அவள் அவனை திட்டும் ”இரட்டை வார்த்தை”யோடு அத்தியாயம் நிறைவடைகிறது. கரசேவகர்களிடம் கல்லடியோ, சொல்லடியோ படாமல் இருந்தால் சரி!! சாகரிகா அப்படித் திட்டுமளவுக்கு கோவிந்தசாமி என்ன கேட்டிருப்பான்? அல்லது செய்திருப்பான்? என்ற கேள்வி மண்டையை குடைந்த படியே இருக்கிறது.
No comments:
Post a Comment