Thursday 27 May 2021

பண நிர்வாகம் – ஆரம்ப அறிதல்!

பணம் – ஒரு மாயை. புரிந்தவனுக்கு நிம்மதி. புரியாதவனுக்கு ஏமாற்றம் – இது இந்நூலில் பணம் சார்ந்து இடம் பெற்றிருக்கும் ஒரு வாசகம்.  இந்த வாசகத்தின் ஊடாக பணம், சேமிப்பு, முதலீடு சார்ந்தும், அதன் எதிர்மறை விளைவுகள் சார்ந்தும் 87 பக்கங்களில் கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் T.S.ஜயராம்.

சில்லறைகளில், கடன் அட்டைகளில், நம்முடைய கவனமின்மைகளில், அதீத ஆர்வக்கோளாறில், நம்பிக்கையில், தேவைகள் சார்ந்து எழுப்பப்படாத கேள்விகளில் என எங்கெல்லாம் நம்முடைய பணத்தை நம்மையறியாமலே இழக்கிறோம் என்பதை ஆசிரியர் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகிறார். இதில் நாம் கவனம் செலுத்தினால் மாதந்தோறும் சில நூறு ரூபாய்களாவது நம் பாக்கெட்டில் மிஞ்சும்.

தேவைக்கு அதிகமான பணம் தரும் பாதுகாப்பின்மை, வியாபாரம்  தொடங்குவதில் இருக்கும் சிக்கல்கள், அதைக் கடந்து வியாபாரம்  செய்ய என்ன வேண்டும்? என்பது பற்றியும், பங்குச் சந்தை அபாயங்கள், வங்கி, தபால் நிலையங்களில் இருக்கும் பாதுகாப்பான சேமிப்பு வழிமுறைகள் பற்றியும் விளக்கியிருப்பதோடு கடன்கள் வாங்குவதிலும், கொடுப்பதிலும் இருக்கும் சிக்கல்களையும் ஒப்புமைப் படுத்திக் காட்டி இருக்கிறார். தனியார் நிறுவனங்களில் கடன் வாங்குவதில் இருக்கும் சிக்கல்கள், வீடு வாங்குவதற்கு வங்கிகளில் கடன் வாங்குவதில் இருக்கும் சாதகங்கள், பாதுகாப்பு அம்சங்கள் பற்றி ஆசிரியர் சுட்டிக்காட்டும் அடிப்படையான விசயங்கள் கடன் சார்ந்த ஆரம்பப் புரிதலைத் தர உதவுகின்றன.

இணையப் பரிவர்த்தணைகளால் காசோலைகளின் தேவைகள் சுருங்கிவிட்ட நிலையில் காசோலைகளைக் கையாளதல் சார்ந்து நிறைய விபரங்களைக் கொடுத்திருக்கிறார். சுயமாகப் பணத்தையும், காசோலையையும் கையாள ஆரம்பித்திருப்பவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டலாக இருக்கும். அத்தகைய நிலையிலிருப்போருக்கு இந்நூலை தராளமாகப் பரிசளிக்கலாம்.


 

1 comment:

  1. இந்த நெருக்கடியான சூழலை இது போன்ற அவசியமான நூல்களைப் படிக்க பயன்படுத்தலாம்..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete