அத்தியாயம் – 5
கோவிந்தசாமியின் வம்ச சரித்திரம்
கோவிந்தசாமி ஏன் நீல நிற நகருக்கு வந்தான்? அவன் தலைக்குள் இறங்கிய சூனியன் அவன் மூலம் தன் உலகத்தை எப்படி ஆட்டுவிக்கப் போகிறான்? என்ற இரு கேள்விகள் கடந்த நான்கு அத்தியாயங்களையும் வாசித்த பின் தொக்கி நின்றது. முதல் கேள்விக்கான விடையாக “கோவிந்தசாமியின் வம்ச சரித்திரம்” விரிகிறது.
தான் விரும்பிய படி தன் காதல் மனைவி இல்லை என்ற போதும் அதற்காக அவள் மீது கோபம் கொள்ளாத மூடனாக கோவிந்தசாமி இருக்கிறான். ஒருநாள் அவனுடைய பெயரை அவள் மாற்றிக் கொள்ளச் சொல்ல, பதறிப்போனவன் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் வம்ச சரித்திரத்தைச் சொல்கிறான். வாசிக்கின்ற நமக்கே அவன் மீது கழிவிரக்கம் வந்து விடுகிறது. கேட்ட சாகரிகாவுக்கு வராமலிருக்குமா என்ன? மூடனுக்கு இப்படி ஒரு முகவரி!
முதலிரவில் அவள் சொன்ன சொற்களால் அதிக கவலை கொண்டு இனி அவளை அனுசரித்துச் செல்வதே உத்தமம் என முடிவு செய்கிறான். அவளுக்காக தன் அடையாளத்தையே காவு கொடுக்கிறான். இருந்தும் ஒரு பலனுமில்லை. அவனுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறும் சாகரிகா நீலநிற நகருக்குச் சென்றிருப்பதை அவளின் தோழி மூலம் அறிந்து கொண்டு கோவிந்தசாமியும் அந்நகருக்குள் நுழைகிறான்.
அவனுக்கு 15 நாட்கள் மட்டுமே விசா கிடைக்கிறது. சுங்கச்சாவடி விவரணைகள் சிங்கப்பூர் – மலேசிய எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிக் காட்சிகளை என்னுள் மீண்டும் மலர்த்திப் போனது. அதுவரை அமைதி காத்த சூனியன் கோவிந்தசாமியின் முன் வெளிப்பட்டு அவன் விருப்பத்தைக் கொண்டே அவனை வீழ்த்த எத்தனிக்கிறான். கோவிந்தசாமி வீழ்ந்தானா? தன் மனைவியை கண்டுபிடித்தானா? என்பதே எஞ்சிய நிழலாட்டம்!
No comments:
Post a Comment