1857 ல் நடைபெற்ற சிப்பாய் புரட்சி தான் இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தின் முதல் புரட்சி என வரலாறு கூறுகிறது. இத்தகவல் வரலாற்றுப் பிழை. திரிபு. அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வேலூர் புரட்சியே இந்தியாவின் முதல் புரட்சி என்பதற்கான ஆவணங்களின் தொகுப்பு இந்நூல் என்கிறார் பேரா. ந. சஞ்சீவி. “வேலூர் புரட்சி” என்ற இச்சிறிய நூலை பல பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கும் நிலையில் நாம் தமிழர் பதிப்பகமும் கொண்டு வந்திருக்கிறது. திப்பு சுல்த்தான் வரலாற்றை வாசித்ததன் தொடர்ச்சியாக இந்நூலையும் வாசித்தேன்.
வேலூரின் கடந்தகால வரலாறு தொடங்கி ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், புரட்சிக்கான காரணம், புரட்சி நிகழ்ந்த விதம், ஒடுக்கப்பட்ட விதம், அதன் தாக்கத்தால் சிப்பாய்களுக்கு நிகழ்ந்த கொடூரம் என புரட்சியின் வேர்களை எட்டு தலைப்புகளில் ஆவணப்படுத்தி இருக்கிறார். பிரிக்கப்படுவதற்கு முன்பிருந்த வட ஆற்காடு மாவட்டப் பாளையக்காரர்களை பிரிட்டிஷ் அரசு படைபலம் கொண்டு ஒடுக்கியது. பிழைப்பற்ற நிலையில் பாளையப்படைகளில் இருந்த வீரர்கள் பிரிட்டிஷ் படையணியில் இருந்த சுதேசி படைகளில் சேர்ந்தனர். அவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசு பிறப்பித்த சட்டங்களும், அதை ஏற்க மறுத்த வீரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் சுதேசி வீரர்களிடையே புரட்சிக்கான கனலை மூட்டியது.
இந்திய விடுதலைப் போரின் இன்னொரு முகம் இரத்தத்தால் நிரம்பி நின்றது என்பதே நிஜம். அந்த நிஜத்தை மறைக்க காந்தியின் முகத்தைத் தூக்கி நிறுத்தி “கத்தியின்றி, இரத்தமின்றி பெற்ற சுதந்திரம்” என பிதற்றித் திரிவது எத்தனை பொய் என்பதற்கு நேரில் கண்டவர்கள் கூறிய விவரமாய், “பிரிட்டிஷ் பீரங்கிகள் சுதந்திர வீரர்களைச் சுட்டுத் தள்ளியது. குண்டுகளால் துண்டு, துண்டாக பிய்த்தெறியப்பட்ட விடுதலை வீரர்களின் தசைகள் ஆகாயத்தில் நாலாதிசைகளிலும் சிதறிப் பாய்ந்தன. நடுங்கும் தசைகள் மண்ணில் சென்று விழுவதற்கு முன் அவற்றை மேலே பறந்து கொண்டிருந்த கழுகுகள் கொத்திக் கொண்டன” என பேராசிரியர் பதிவு செய்திருப்பது மற்றுமொரு சாட்சி.
வரலாறுகளை திரிபுகளால் தொடர்ந்து பின்னிப் பின்னி அதன் சுயத்தை அழித்தொழிப்பதில் இன்றைய வரலாற்றாய்வாளர்களின் பங்கு அளப்பரியது. தாங்கள் சார்ந்த மதம், இனம், சமூகம் ஆகியவைகளைத் தூக்கிப் பிடிப்பதில் அவர்கள் காட்டிய அக்கறை வரலாற்றின் உண்மை முகத்தை நீர்த்துப் போக வைத்து விட்டது எனலாம். அப்படி புனையப்பட்ட கூற்றாக, ”முஸ்லீம் சாம்ராஜ்யத்தை உருவாக்குவது தான் வேலூர் புரட்சிக்கு காரணம், திப்புவின் குடும்பத்தினரின் தூண்டுதலே புரட்சிக்குக் காரணம் என்று முன்மொழியப்பட்ட வாதங்களை அதற்கான காரணங்களோடு ந. சஞ்சீவி மறுக்கிறார். ஏற்றும், மறுத்தும் எழுதப்பட்ட நூல்களை நான் வாசித்திருக்கிறேன். ஆனால், எது சரி? என்பதற்கான ஆதாரம் இன்னும் எங்கோ மறைந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
திப்பு சுல்த்தானின் சீரங்கப்பட்டிணம் யுத்தம் தொடங்கி வேலூர் புரட்சியை இன்னும் விரிவாக்கி அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்த்தானின் குடும்ப நிலை வரையான ஒரு நூல் வந்தால் அது முழுமை வடிவாக இருக்கும். இந்நிலையில் வேலூர் புரட்சி குறித்த இந்நூல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மறைக்கப்பட்ட முகத்தைக் கண்டடைவதற்கான தூண்டலைத் தருகிறது.
No comments:
Post a Comment