Monday 16 March 2015

ரசிக்க – சிந்திக்க – 8

 

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் பேசும் ஒவ்வொரு முறையும்  நிறையப் புத்தகங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டிப் பேசுவார். எப்பொழுதும் நேரமில்லை, நேரமில்லை எனச் சொல்லும் நேருவுக்கு புத்தகங்கள் படிக்க மட்டும் எப்படி நேரம் கிடைக்கிறது? என்பது மன்ற உறுப்பினர்களுக்கு ஆச்சர்யமான விசயமாக இருந்தது.

ஒருநாள் அவர்கள் அவரிடம் தங்கள் ஆச்சரியத்தைச் சொன்ன போது, ”நான் நேரத்தைத் திருடுகிறேன்'' என்று கூறினார். அதைக் கேட்டு குழம்பி நின்றவர்களிடம் "நான் இரவில் எப்போது தூங்கப் போக வேண்டும், எப்போது எழ வேண்டும் என்பதை என் உதவியாளர் தான் நிர்ணயிக்கிறார். அப்படி நான் உறங்குவதற்காக அவர் ஒதுக்கித் தரும் நேரத்தில் இருந்து ஒரு நாளைக்கு, இரண்டு மணி நேரத்தை திருடிக் கொள்கிறேன். அந்த இரண்டு மணி நேரத்தைத் தான் பல்வேறு புத்தகங்கள் படிக்கச் செலவிடுகிறேன்,'' என்றார்.

ஒரு விசயத்தைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதி இருந்தால் அந்த விசயத்தைச் செய்வதற்கான நேரத்தை எப்படியும் உருவாக்கிக் கொள்ள முடியும். வழக்கமான செயல்களுக்குரிய நேரத்திலிருந்து உங்களுக்குத் தேவையான கூடுதல் நேரத்தை நீங்களும் திருடப் பழகிக் கொள்ளுங்கள். அதன்பின்நேரமில்லை”, ”நேரமில்லைஎன்ற புலம்பல்கள் உங்களிடமிருந்து காணாமலே போய்விடும்

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்