ஒரு புத்தகத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக மொழிபெயர்ப்பாளரும், அதைப் பதிப்பித்ததற்காக அந்த பதிப்பாளரும் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட பதிப்பாளர் சில நாட்கள் கழித்து மன்னிப்புக் கடிதம் கொடுத்து சிறையில் இருந்து வெளியில் வந்தார். மொழிபெயர்ப்பாளருக்கு அதில் விருப்பமில்லாத நிலையில் அவருடைய நண்பர்களும், அவர் சார்ந்திருந்த கட்சியும் வற்புறுத்தவே அவரும் மன்னிப்புக் கடிதம் கொடுத்து சிறையில் இருந்து வெளியில் வந்தார். அப்படி வந்ததில் கடைசி வரை அவர் மனம் உடன்பட மறுத்து நின்றது. அந்த மொழிபெயர்ப்பாளர் ப. ஜீவானந்தம். பதிப்பாளர் ஈ.வே.ரா. இந்தத் தகவலை ”அன்புள்ள ஜீவா” நூலில் வாசித்த போது முன்பு புதியவன் வலைப்பக்கத்தில் அம்மொழிபெயர்ப்பை வாசித்த நினைவு வந்தது. மீண்டும் புத்தகமாக ஒரு முறை வாசிக்க எடுத்தேன். பகத்சிங் எழுதி ப. ஜீவானந்தம் மொழிபெயர்ப்பில் எதிர் வெளியீடாக வந்திருக்கும் இந்நூல் மிகச் சிறியது என்ற போதும் முனை மழுங்காத கூர்மையோடு நம்முள் தர்க்கரீதியாக கேள்விகளை இறக்குகிறது.
கடவுள் இல்லை என்ற தன் வாதத்தை நிறுவுவது தன்னுடைய அகங்காரமா? அல்லது தன் தற்பெருமையா? என்ற இரு கேள்விகளை தன்னை நோக்கித் திருப்பி வைத்துக் கொண்டு தர்க்கரீதியாக நம்முன் பகத்சிங் விவாதத்திற்கு வைக்கிறார். அதன் வழியாக, நம்மிடத்தில் மலிந்து கிடக்கும் பழக்க வழக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், அவற்றைத் தாக்குவதற்கும் தன்னுடைய தற்பெருமையும், அகங்காரமும், அகம்பாவமும் இருக்குமெனில் அது வாழ்க்கைக்குரிய நியாயமான கெளரவம் என்கிறார் பகத்சிங். அந்த கெளரவத்தை நம்மில் எவர் தான் மறுக்க இயலும்?.
சிறுவயதில் ஆச்சாரமான, கடவுள் நம்பிக்கையாளனாக இருந்த தன்னுடைய தொடர்ச்சி எங்கு அறுபட்டது? என்றும், கடவுள் மறுப்பாளனாக எப்படி மாறினேன்? என்றும் தன் தீவிர தேடலையும், அது சார்ந்து எழுப்பப்பட்ட கேள்விகள், தத்துவாச்சாரங்கள் வழியான நூல்களின் வாசிப்பு குறித்தும் பகத்சிங் விரிவாகவே விளக்குகிறார்.
புரட்சி இயக்கத்தில் தான் பங்கு கொண்டிருந்த காலகட்டத்தில் அதன் தலைவர்களாக இருந்தவர்கள் கடவுள் மறுப்பு விசயத்தில் தெளிவின்மையோடு இருந்ததை தெளிவாக முன் வைக்கும் பகத்சிங் தனது புரட்சி வாழ்க்கையில் புதியதொரு மாறுதலை உண்டாக்கிய சம்பவமாக ”கற்றுணர்” என்பதை குறிப்பிடுகிறார். அந்த கற்றுணர் எதற்கு? அல்லது எதன் பொருட்டு கற்றுணர்தல் அவசியம்? என்பதற்கு அவர் தரும் விளக்கம் அற்புதமானது. ”எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு கண்டங்களும், ஆப்பும் கொடுப்பதற்காகவும், உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளவும் கற்றுணர் அவசியம்” என்கிறார். அப்படி கற்றுணர ஆரம்பித்ததன் விளைவாகவே தன்னுடைய பழைய நம்பிக்கைகளும், முடிவுகளும் மாற்றம் பெற ஆரம்பித்தன என்கிறார். உண்மையில் பகத்சிங்கின் தோழர்களும், அவருடைய இயக்க நண்பர்களும் கூறியது போல பகத்சிங் அகம்பாவமோ, தற்பெருமையோ, அகங்காரமோ அவரை நாத்திக பாதைக்கு நகர்த்தவில்லை.
ஒருவன் எப்பொழுதெல்லாம் கடவுள் நம்பிக்கையை மறுதலிக்கமாட்டான் எனக் கூறும் பகத்சிங் மறுபிறப்பு சார்ந்து மதங்கள் காட்டும் நம்பிக்கைகளை முன் வைத்து எழுப்பும் கேள்விகள் கடவுள் குறித்தான பொதுவான அபிப்ராயங்களை ஆராய வைக்கின்றன. தத்துவசாத்திரங்களை தலைக்கு வைத்துக் கொண்டு அவரவர் மனம் போன போக்கில் கட்டியெழுப்பிய சாத்திரங்கள் மனித நாகரிக முன்னேற்றத்திற்கு தடையாகி நிற்கின்றன எனக் கூறும் பகத்சிங் அதன் வழி கடவுள் நம்பிக்கை கொள்வது என்பது காந்தியின் சொல்லுக்கு அன்றைய தலைவர்கள் தலையாட்டியது போன்றது என்கிறார். மிகச் சரியான ஒப்பீடு!
ஆஸ்திகர்களிடம் பகத்சிங் எழுப்புகின்ற கேள்விகள் நூலின் பிற்பகுதியில் நீண்டு செல்கின்றன. அந்தக் கேள்விகளை எல்லா மதங்களுக்குமாகவே முன் வைக்கிறார். குறிப்பாக முற்பிறவி சார்ந்தும் பிராமண மேலாதிக்க சமூகம் (மமதையும், பேராசையும், உச்சி முதல் உள்ளங்கால் வரை கொண்ட குதிக்கும் பிராமணர்கள் என்று பகத்சிங் கூறுகிறார்) தாழ்த்தப்பட்ட சமூகத்தை அடக்கி நிறுத்துவது குறித்தும், இந்திய சுதந்திரம், பிரிட்டிஷ் ஆதிக்கம், புரட்சி இயக்கம் ஆகியவைகள் வழி கடவுள் மீதான அவரின் கேள்விகள் யோசிக்க வைக்கின்றன. ஆனால், இந்தக் கேள்விகளின் முனைகளை முறித்து வேறு திசையில் சிலர் திருப்பி விட்டதாலயே கடவுள் குறித்தான அறிவுப்பூர்வமான விவாதம் இங்கு நிகழாமல் நழுவி விட்டதோ? என்று தோன்றுகிறது.
சமதர்மக் கொள்கைகள், பகத்சிங் மற்றும் அவருடைய தோழர்களின் கொள்கைகள் நியாயம் என்று கூறுபவர்கள் அதற்கு நேர் எதிர் கருத்துடைய காங்கிரசையும், காந்தியையும் வாழ்த்துவது எப்படி சரியாகும்? என்ற கேள்வியோடு வர்ணாஸ்ரமம் பேசும் காந்தியும், பார்ப்பனியமும் ஒன்றே என்ற நிஜத்தின் முகத்தை மீண்டும் ஒருமுறை காட்டி நிறைவு செய்யும் பகத்சிங்கின் ”நான் நாத்திகன் ஏன்?” நூல் ஆத்திகத்துக்கு எதிரான நூல் அல்ல. கடவுள் சார்ந்து விவாதிக்க எப்பொழுதும் நம் முன் நிற்கும் முனை மழுங்காத கத்தி என்றால் மிகையில்லை.
நன்றி – கீற்று.காம்
No comments:
Post a Comment