கவிஞர் மகுடேஸ்வரன் எழுதி விகடன் வெளியீடாக வந்திருக்கும் நூல் கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் தரிசனம்! இந்தத் தலைப்போடு “கொஞ்சம் வித்தியாசம்” என்றும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வித்தியாசமே இந்நூலுக்கு நல்லதொரு சுவராசியமான வாசிப்பனுபவத்தை தருகிறது
ஆன்மிகம் சார்ந்த பயண நூல்கள் பொதுவாக பார்க்க வேண்டிய தலங்கள், சென்று வருவதற்கான வாகன வசதிகள், அந்தந்த இடத்திற்கேற்ற புராணக் கதைகள், நேரக் குறிப்புகள், பூஜை நேரங்கள் என எழுதப்படாத பொதுவிதியில் அமைந்திருக்கும். இவைகள் “சுற்றுலா கையேடு” ரகம் என்ற போதும் பதிப்பகங்களும், நூலகங்களும் இப்படியான தொகுப்புகளை பயண நூல் வரிசையிலேயே பதியம் போட்டு வருகின்றன.
இந்த வகைமையில் இருந்து விலகி சாருநிவேதிதா போன்ற ஒரு சிலர் தங்களது பயண நூல்களை அந்தந்த பரப்பின் பூகோளம், அரசியல், இலக்கியம், உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளிட்ட தேச வரலாறுகள் வழியாக கட்டமைக்கின்றனர். இவ்விரு வகைகளிலும் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டது இந்நூல்!
வரலாறு பாடத்தையும், சரித்திரங்களையும் தட்டையான மொழி நடையால் வாசிப்புத் தளத்திலிருந்து ஒழித்துக் கட்டியதில் பெரும் பங்கு அதை பாடநூலுக்கெனவும், பொது வெளியிலும் எழுதிய பல்கலைக்கழக பட்டம் பெற்ற மேதாவிகளையே சேரும். சங்க இலக்கிய, இலக்கணங்களையும் கூட இந்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம். உண்மையில், பல்கலைக்கழக பேராசிரியர்கள் என்ற அடையாளங்களோடு வலம் வருபவர்கள் சரித்திரங்களையும், வரலாறுகளையும் எழுதாத வரை ”பாடநூல்களுக்கு வெளியேயான வரலாறு சுவராசியமானது” என்பதை தயக்கமின்றி ஒப்புக் கொள்ளலாம். அதற்கு இந்நூல் மிகச் சரியான சான்று என்பேன். மகுடேஸ்வரன், என். சொக்கன் போன்றவர்கள் தங்கள் படைப்புகள் வழியே இதை நிரூபித்த படியே இருக்கின்றனர். பேராசிரியர்களால் பக்கம், பக்கமாக தீட்டப்படும் வரலாற்று நூல்களுக்கும், இலக்கண, இலக்கிய நூல்களுக்கும் இணையாக இவர்கள் எழுதும் வரலாறு, இலக்கண, இலக்கிய நூல்களையும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு பாடமாக வைப்பதில் கொஞ்சம் மெனக்கெடலாம்.
தென்னிந்திய நிலப்பரப்பின் எல்லைகளை மாற்றிப் போட்ட விஜயநகரப் பேரரசின் எஞ்சிய எச்சமாய் இன்று மிஞ்சி நிற்கும் ஹம்பியிலிருந்து தொடங்கும் தனது தரிசனத்தை அப்பேரரசின் வரலாறு வழியாக ஆசிரியர் தோரணமிட வைக்கிறார். வரலாறை வாசித்து வரும் போதே இராமாயணத்திற்கும், ஹம்பிக்குமான தொடர்பை கிஷ்கிந்தா காண்டத்தில் நிறுத்தி நாம் அறிந்த இராமாயணத்தை அந்தந்த இடத்தின் வழியே மீள் நினைவு கொள்ள வைக்கிறார். இராமனோடு மட்டுமல்ல அந்த காண்டத்தின் அத்தனை பாத்திரங்களோடும் அந்தந்த இடங்களில் உலாவித் திரியும் உணர்வு மேலிடுகிறது.
ஹம்பி கடைவீதி என்றழைக்கப்படும் தேர்வீதியில் தேரோடிய போது தேர்கால்களில் தம் தலைகளைக் கொடுத்து நசுக்கிக் கொண்ட பக்தர்கள், நரபலியிடும் பழக்கம், கோவில்கள் கட்டப்பட்ட காலம், அவைகளைக் கட்டிய அரசர்கள், அக்காலகட்டத்தில் நிலவிய சமய நிலை, ஆலயங்களின் தோற்றம், அதன் இப்போதைய நிலை, அவைகளைச் சிதைத்தெறிந்த படையெடுப்புகள், அக்கால நகர அமைப்பு, அதன் இப்போதைய நிலை, அவ்விடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் என அறிய வேண்டிய தகவல்கள் வழியே ஆன்மிகத்தின் வாயிலுக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஆசிரியர் கோவில்கள் கட்டப் பயன்படுத்தப்பட்ட கற்கள், அக்கற்களைப் பயன்படுத்தியதற்கான காரணங்கள், சிலைகளை வடிவமைத்த சிற்பிகள், அவர்கள் எந்த பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டனர் போன்ற நுட்பமான விசயங்களையும் பதிவு செய்கிறார்.
இப்படியாக ஆன்மிகத்திற்குள் லயித்து வரும் போதே வரலாற்றின் வாசலுக்குள் நம்மை சட்டென மடை மாற்றி விடுகிறார். விஜயநகரப் பேரரசின் தோற்றம், அதை நிறுவ அவர்கள் மேற்கொண்ட முன்னேற்பாடுகள், சிருங்கேரி மடத்தின் பங்களிப்பு, துங்கபத்திரை அணையின் நீர் போக்கு பாதை, அதன் மீது கட்டப்பட்டிருக்கும் அணை, மலைக்கோட்டை, நிலக்கோட்டை, அதனுள் வற்றாத சுனைகுளங்கள், பயிரிட வேளாண் நிலங்கள் இருந்த தகவல்கள், படைகள் விபரம், அதற்கான நிலைகள், வாணிப முறைகள், மக்களின் வாழ்க்கை முறை உள்ளிட்ட ஏராளமான தகவல்களால் வாசிப்பில் லயிக்க வைக்கிறார். இதுதவிர, போர்ச்சுக்கீசியர்களின் உச்சரிப்பு முறை, அவர்களின் உச்சரிப்பால் நகரங்களின் பெயர்கள் மாறிப்போன தகவல்கள், விஜயநகரத்தில் அரசருக்கென தனி குடியிருப்போ, வீடோ இல்லை. அரசிக்கு அரண்மனை உண்டு. அங்கு அரசர் தங்கிக் கொள்ள வேண்டும் போன்ற தகவல்களையும் போகிற போக்கில் பதியம் போட்டுச் செல்கிறார். வாசிக்க, வாசிக்க வரலாற்றின் வசிகர முகம் நம்மைப் பிடித்துக் கொள்கிறது.
முதன் முதலில் பானிபட் போரில் பாபர் தான் பீரங்கிகளைப் பயன்படுத்தினார் என்ற வரலாற்றாசிரியர்களின் குறிப்புக்கு முந்தியது ரெய்ச்சூர் கோட்டை போரில் அவைகள் பயன் படுத்தப்பட்ட வரலாற்றுக் குறிப்பு என்ற தகவலோடு வரலாற்றுத் திரிபையும் சுட்டிக்காட்டுகிறார். அதற்கு ஆதாரமாக 14 ம் அத்தியாயம் தொடங்கி 19 ம் அத்தியாயம் வரை நடக்கும் ரெய்ச்சூர்கோட்டை போர் காட்சிகளை வரலாற்றாய்வாளர்களுக்கு சான்றாக்குகிறார். நம்மையோ அப்போரில் பங்கெடுக்க வைத்து விடுகிறார்.
ஹம்பியின் தலத்தில் இருக்கும் ஆலயங்கள் வழியே அத்தலத்தை கட்டியெழுப்பி தென்னிந்திய சரித்திரத்தையே மாற்றிக் காட்டிய பேரரசின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் பிரிக்க முடியாத இழைப்பின்னலாக்கி இந்நூலில் தந்திருக்கிறார் என்றால் அது மிகையாக இருக்கப் போவதில்லை. இப்படியான நூல்கள் மட்டுமே சரித்திரங்கள் வழியே நம் ஆதி முகங்களின் வாழ்வியலை அறிந்து கொள்ளும் ஆவலை வாசிக்கின்ற ஒவ்வொருக்கும் தந்து தொல்லியலுக்கு அழைத்துச் செல்வதோடு, நம் முன் மரபின் வீரத்தையும், தீரத்தையும் நினைவோடைகளில் நீங்காது நீந்த வைக்கும்.
No comments:
Post a Comment